Sunday, October 31, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 24


காஞ்சியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு அறையில் நான் உட்கார்ந்திருந்த பொழுது, அங்கே திடீரென்று சிலர் வந்து அமர்ந்தனர். வந்தவர் ஒரு பிரமுகர் என்று அருகில் இருந்தவர் கூறீனார். என்னை அந்த பிரமுகருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஒரு அதிகாரி.

”இந்த அம்மா பெயர் திருமதி சீதாலட்சுமி. நம்ம மாவட்டத்துக்குப் புதுசா வந்திருக்கற மகளிர் நல அதிகாரி.”


நான் அவருக்கு வணக்கம் செலுத்தினேன்.


பிரமுகர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

“உங்க டிபார்ட்மெண்டுலே பொம்புள்ளங்க ஒழுங்கா வேலை பாக்க மாட்டாங்களா?”

”ஏன் அப்படி சொல்றீங்க?”

”எங்க ஊர்லே ஒருத்தி இருக்கா; அவ செய்யற வேலை என்ன தெரியுமா? பிராத்தல் ஹவுஸ் நடத்தறா! எங்க ஊருக்கு வந்து பாருங்க.”

அங்கிருந்தவர்களில் சிலர் கொல்லென்று சிரித்தனர். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும். அப்பொழுது நான் என்ன பேசினேன், அதன் தொடர்ச்சி என்ன என்பது தனிக்கதை.

ஐந்து கணவர்களுக்கு முன்னிலையில், நடுச்சபையில் அன்று திரெளபதி அவமானப்படுத்தப்பட்டாள்.

அன்னிய மண்ணில் ஊர் கூடியிருக்க, தேவர்களும் பெரியவர்களும் கூடியிருக்கக் கட்டிய கணவரே தீச்சொற்களை வீசி அக்கினிக்கு விரட்டப்பட்டாள் சீதை

அய்யா, பெண்னை அவமானப்படுத்துவது இதிகாச காலத்தில் இருந்து வரும் தொடர் நிகழ்வு. பெண்ணாய்ப் பிறந்தது எங்கள் குற்றமா? இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றா இரண்டா? மனம் வலிக்கும் பொழுது நான் ஓடித் தஞ்சம் புகும் இடம் தேனம்பாக்கம் அல்லது கலவை.


தேனம்பாக்கம்


இறைசக்தியை, தவத்தின் அருமையை உணரவைக்கும் அற்புதமான இடம். அங்கே ஆடம்பரம் கிடையாது. சத்தங்கள் இல்லாத ஒரு சத்திய பீடம். அங்கே தரிசிப்பதும் அமைதி; உணர்வதும் அமைதி. காஞ்சியில் இருக்கும்வரை நான் அடிக்கடி அங்கு போய் அமைதியாக உட்கார்ந்து விட்டு வருவேன். யாருடனும் பேச வேண்டியதில்லை. அங்கே நடமாடிக் கொண்டிருக்கும் மகாப்பெரியவரை தரிசித்தால் போதும்; எங்கும் கிடைக்காத நிம்மதி கிடைக்கும். சிலசமயம் கலவைக்கும் தரிசனத்திற்குச் சென்றிருக்கின்றேன்.

என்னுடைய பணியில் சோதனைகள் அதிகம். ஆத்மார்த்தமாகப் பணியாற்றுபவர்களுக்கு போராட வேண்டிவரும். சாதாரணப் பிரச்சனையென்றால் ஜெயகாந்தன் குடில் போவேன். என் மனத்தையே ஆட்டி வைக்கும் நிலை வரும் பொழுது தவக்குடிலுக்குச் சென்று விடுவேன். உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் கேள்விகள் கேட்பேன்

இறைவா ஏன் பெண்ணைப் படைத்தாய்? மனித உணர்வுகளுடன் படைத்ததற்குப் பதிலாக ஓர் இயந்திரமாகப் படைத்திருக்கக் கூடாதா? வலியில்லாமல் இருப்போமே!

மனம் புலம்பிக்கொண்டே இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதி பிறக்கும். அத்துடன் எதிர்த்துப் போராட புதுசக்தியும் பிறக்கும். இதனை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தைகளில் வடிக்க முடியாது. இது எப்படி என்ற கேள்வி எழலாம்; தவறல்ல. என் அனுபவத்தைக் கூறுகின்றேன்- அவ்வளவுதான்.

மகாப்பெரியவர்!

சில நேரங்களில் உட்கார்ந்திருப்பார்; சில நேரங்களில் நடந்து கொண்டிருப்பார்; சாதாரணத்தரையில் துணிவிரித்துப் படுத்துமிருப்பார்; அங்கே போகின்றவர்கள் இந்தக் காட்சிகளைக் காணலாம். ஏதோ கூண்டுக்குள் அவர் இருப்பது போன்று தெரியும். சில விநாடிகள் பார்த்துக்கொண்டு நாம் நின்றால் நாம் தான் உலகச் சிறைக்குள் இருக்கின்றோம் என்பதை உணர்வோம். பாசவலையில் கட்டுண்டு ஏதோ ஒரு வாழ்க்கையை ”நிலை” என்று கருதி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

சில நேரங்களில் பெரியவர் அங்கே வந்திருப்பவர்களைப் பார்த்துப் புன்னகைப்பார்; அருகில் வரச் சொல்லி கையசைப்பார்; நம்மைப்பற்றி விசாரிப்பார்; குழந்தையைப் போல் சிரிப்பார்; அந்த தரிசனம், அந்த சில நிமிடங்களில் மனம் லேசாகிவிடும். அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.

யாராவது ஒருவர் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தால் நமக்கு குறுகுறுவென்று உணர்வு தோன்றும். கூட்டம் இருந்தால், அங்கே அமைதி இருக்காது. அங்கே வருகின்றவர்கள் யார், என்ன பேசுகின்றார்கள் என்ற சிந்தனையின்றி ஓர் மாமனிதர் அமர்ந்திருக்கின்றார். அவருடைய புலன்கள் அவரின் கட்டுப்பாட்டில்! மனம் அந்த முனிவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை நாம் நேரில் உணரலாம். நாமோ நம் மனத்திற்கு அடிமையாகி குரங்காட்டம் ஆடுகின்றோம். அதனால் எத்தனைத் தப்புத்தாளங்கள்!

விமர்சனத்திற்கு வீழ்ந்துவிட்டால் நாளை புகழுக்கும் அடிமையாக வேண்டிவரும். கடமைகளைச் செய்யும் பொழுது பற்றற்று செயலாற்ற வேண்டும். இதுதானே கீதையும் சொல்கின்றது! அந்த தவச்சாலையில் சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டால் சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மறைந்துவிடும். இதனை ஒருவர் அனுபவத்தால்தான் உணர முடியும்.

மறைந்த இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மகாப்பெரியவரை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். அங்கே பேச்சில்லை. கண்மூடி தியானம் செய்தார்கள். பல பெரியவர்கள் அவர் முன் உட்கார்ந்து எதுவும் பேசாமல் தியானம் செய்துவிட்டுப் போவதைப் பார்த்திருக்கின்றேன்.

திரு.மணியனுடன் மடத்திற்குப் போவோம். அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் நிறைய பேசுவார்கள்.

இந்துக்களின் மனங்களில் உயர்ந்த பீடத்தில் இருப்பவர். அவர் விரும்பியிருந்தால் அவருக்கு அத்தனை வசதிகளையும் செய்து தந்துவிடுவார்கள். ஆனால் அவரோ துவராடைக்குள் பொதிந்து, எளிய உணவு உண்டு , படுப்பது கூட ஒற்றைத் துணிவிரித்துத் துயில் கொள்ளும் அவரைப் பார்க்கும் பொழுது சன்னியாசத்தின் அர்த்தம் தெரியும். சில நாட்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். என் வாழ்க்கையில் அந்த மணித்துளிகள் கிடைத்ததைப் பெரிய பாக்கியமாகக் கருதுகின்றேன்.

குரோம்பேட்டையருகில் ஒரு கோயிலில் இருந்த அன்னபூரணி விக்ரஹம் சிதிலமடைந்தது. பக்தர்கள் மகாப்பெரியவரை அணுகித் தெரிவித்த பொழுது அதனைக் கடலில் இட்டு விட்டுப் புதியதாக ஒரு சிலை செய்துவரச் சொல்லிப் பணித்தார். பக்தர்களும் அவ்வாறே செய்து புதிய சிலையுடன் காஞ்சிக்குச் சென்றனர். ஆனால் மகாப்பெரியவர் அங்கில்லை. இரவாகிவிட்டது. எப்படியும் அவரைத் தரிசிக்க விரும்பி அவர்கள் போன பாதையைக் கேட்டு பக்தர்கள் விரைந்தனர். நள்ளிரவாகிவிட்டது. ஆனாலும் கார் ஓடிக் கொண்டிருந்தது. ஆட்கள் அரவமில்லா இடமாக இருந்தது. தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. அங்கே சென்ற பொழுது மகாப்பெரியவரின் சிஷ்யர்கள் இருப்பதைக் கண்டனர். சின்ன விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

அங்கே ஓரிடத்தில் இருந்த பல்லக்கில் பெரியவர் உறங்கிக் கொண்டிருந்தார். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட பக்தர்கள் அமைதியாக நகர ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் பல்லக்கிலிருந்து மகாப்பெரியவர் வெளிவந்து அருகில் வந்துவிட்டார். யாரும் பேசக் கூட இல்லை. பக்தர்கள் மெய்மறந்து போய் பிரமித்து நின்றுவிட்டனர். ஸ்வாமிஜி அருகில் வந்து விபரம் கேட்டு புதிதாக செய்து கொண்டு வந்த அன்னபூரணி சிலையைப் பார்த்தார். பிறகு தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் முகம் பூவாய் மலர்ந்தது. கோயிலில் கொண்டு போய் இனி பிரதிஷ்டை செய்யலாம் என்று அருள் கூர்ந்தார்.

இதனால் நாம் என்ன தெரிந்து கொள்ளமுடிகின்றது?

திருமாலின் அனந்தசயனமும் சிவனின் மோனத்தவமும் காட்சிகள் தான். எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் சக்திகள். சிறிய அசைவு கூட அவனின்றி எதுவும் இல்லை. நமக்குத் தெரியாததால், உணர்ந்து கொள்ள முடியாததால் தவவலிமையைப் பொய் என்று கூறுதல் சரியாகாது.

ஜெயகாந்தனின் "ஜெய ஜெய சங்கர “ தொடர் சாதாரணமான கதையல்ல. ஆன்மீகம், காந்தீயம், கம்யூனிசம் என்று அவர் ஆன்மாவின் விருப்பங்களை அருவியாய் ஓடவிட்டிருக்கின்றார். அன்பே சிவம்; மனிதநேயமே அறம்; அங்கே ஆதியின் வாழ்க்கை, அவர்கோட்பாடு இவைகள் மூலம் வாழும் தத்துவத்தைக் காட்டி இருக்கின்றார்..


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

காஞ்சியில் எனக்குக் கிடைத்த இன்னொரு அனுபவத்தையும் கூறவேண்டும். மனிதன் என்றால் எல்லோருக்கும் சின்னச்சின்ன ஆசைகள், பெரிய ஆசைகள், ஏன் பேராசைகள் கூட இருப்பது இயல்பு. எனக்கும் ஒரு பேராசை இருந்தது. அது ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு

திரு.கே.எம். ராஜகோபால் - காஞ்சிபுர ஊராட்சி ஒன்றியத்தலைவர்; சட்டமன்ற உறுப்பினர்; திராவிடக்கழகத்தின் தீவிர உறுப்பினர். இலக்கியம் தெரிந்தவர். கம்பராமாயணம், பெரியபுராணம் புத்தகங்கள் கையில் இல்லாத நிலையிலும் எந்த கேள்விகள் கேட்டாலும் இடத்தையும் மேற்கோள்களையும் காட்டிப் பேசும் புலமை மிக்கவர். என் அண்டை வீட்டுக்காரர் என்று சொல்லும் அளவு அருகில் வசித்தவர்.

முப்பத்தெட்டு வயதில் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்து வந்தவுடன் காஞ்சிக்குத் தான் மீண்டும் பணிக்கு வந்து சேர்ந்தேன். என் இலக்கியப் பசிக்கு உதவியவர். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவர் இல்லத்திற்குச் செல்வேன். அவர் வீட்டிற்கு முன் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து காரசாரமான விவாதம் நடத்துவோம். வெவ்வேறு கொள்கைகள் உடையவர்கள். ஆனால் எங்களுக்குள் மனக்கசப்பு வந்ததில்லை. ஒரு நாள் நடந்த உரையாடலைப் பதிய விரும்புகின்றேன்.

”உங்கம்மா ஏன் காலையிலே எழுந்திருந்து லொங்கு லொங்குன்னு கோயிலுக்கு நடக்கறாங்க? பாவம் கிழவி, வீட்டுக்குள் இருக்கக் கூடாதா?”


அவரைச் சில வினாடிகள் பார்த்துவிட்டு அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

”ஆமாம், நீங்க இப்படி தொடர்ந்து சிகரெட் குடிக்கிறீங்களே, ஏன்?”

”எனக்கு சிகரெட் புகைக்கப் பிடிக்கும்.”

”சிகரெட் புகை நுரையீரலைக் கெடுக்குமே; வியாதிவரும். இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா?”

”எனக்குப் பிடிச்சிருக்கு; பழகிப் போச்சு. விட முடியாது. அதுசரி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலியே?”

”சொல்றேன். எங்கம்மா அதிகாலையிலே எழுந்திருப்பாங்க, குளிப்பாங்க. அப்புறம் கோயிலுக்கு நடப்பாங்க. இதெல்லாம் உடம்புக்கு நல்லது.”

நான் இதைச் சொல்லிவரும் பொழுது அவர் ஏதோ சொல்ல வந்தார் அதனைக் கையசைத்து நிறுத்திவிட்டு என் பேச்சைத் தொடர்ந்தேன்

”எங்கம்மா, கோயில்லே சாமி கும்பிடுவாங்க. கடவுளைக் கும்பிட்டால் கஷ்டம் குறையும்னு நினைச்சு செய்யறாங்க. கஷ்டம் குறையுதோ என்னமோ, நம்பிக்கை இருப்பதால் மனசு லேசாகும். மன அழுத்தம் குறையும். B.P வராது. உடம்புக்கு எல்லா வகையிலும் ஆரோக்கியம். உடம்பைக் கெடுக்கற இந்த புகையைவிட உடம்புக்கு நல்லது செய்யற அந்த கல்லைக் கும்பிடப் போறதில் என்ன தப்பு.”


”அது மூடப் பழக்கம்.”

”நீங்கப் புகைக்கறது கெட்ட பழக்கம். அவங்க பழக்கத்துலே அவங்களுக்கு நல்லது கிடைக்குது. உங்க பழக்கத்துலே உடம்புக்கே கெட்டது நடக்குது. உங்க குடும்பத்திலே யாரோ கோயிலுக்குப் பொங்கல் வைக்கப் போனாங்களே, அப்போ நீங்க என்ன செய்துகிட்டிருந்தீங்க?”

”இந்தப் பொம்புள்ளங்க எங்கே பேச்சைக் கேட்கறாங்க?”

”உங்க வீட்டைத் திருத்த முடியல்லே. ஊருக்கு உபதேசம். சாதியப்பத்திப் பேசினா ஒரு சாதியைத்தான் திட்டறீங்க. மூடப்பழக்கம்னு தாக்குதலும் ஒரு மதத்தில் மேல்தான். என்னய்யா சீர்திருத்தம் இது? முதல்லே உங்க வீடுகள்ளே சொந்த சாதியிலே கட்டாதீங்க. உங்க வீட்டு மனுஷங்களைக் கோயிலுக்குப் போக விடாதீங்க.”

”பேசத் தெரிஞ்சவங்க பேசறீங்க.”

”பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிச்சவங்க நீங்க. உங்களுக்குத் தெரியும் எனக்கு சாதிகள் பிடிக்காதுன்னு. நான் கடவுளை நம்பறவ. கோயிலுக்கும் போவேன். சர்ச்சுக்கும் போவேன். எந்த மதத்தையும் திட்ட மாட்டேன்.”

அவரால் பதில் கூற முடியவில்லை. கோபப்படவும் இல்லை. எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நல்ல மனிதர். நாங்கள் இருவரும் வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள்.

அவரிடம் என் ஆசை ஒன்றைக் கூறியிருந்தேன். தந்தை பெரியார் அய்யாவைப் பார்க்க வேண்டும். பெரிய மனிதர்களைப் பார்ப்பது என் போன்ற அதிகாரிகளுக்குக் கஷ்டமில்லை.சாதாரண அறிமுகமும் ஓரிரண்டு வார்த்தைகளும் பேசிட முடியும். நான் விரும்பியது அதுவல்ல. என்னைப் பற்றி தெரிந்து, பின்னர் அய்யா அவர்களைப் பார்க்க வேண்டும்.அவர் என்னை என்ன கேள்வி கேட்பார், நான் என்ன பதில் சொல்வேன் என்று பார்க்க வேண்டும். எப்பேர்ப்பட்ட பேராசை பார்த்தீர்களா?

என் ஆசையை நிறைவேற்றி வைத்தார் திரு கே.எம்.ஆர் அவர்கள்.
காஞ்சிக்கருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஓர் திருமணம் அய்யாவின் தலைமையில் நடப்பதாக இருந்தது. எனக்கும் அழைப்பிதழ் வந்தது. அய்யாவைப் பார்க்கும் ஆவலில் அங்கு சென்றேன். திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில் சேர்மன் என்னிடம் வந்து அய்யாவைப் பார்க்க அழைத்துச் சென்றார்

அப்பப்பா, என்ன கம்பீரம்.! அந்த வெண்தாடிக் கிழவரை வணங்கினேன்.

என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே,“ஆமாம் நீ கோயிலுக்குப் போவியாமே, ஏன் போறே?“ என்று எடுத்த எடுப்பில் கேள்விக் கணையை வீசி விட்டார்.

ஏனோ பயமோ தயக்கமோ வரவில்லை.பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அய்யாவின் குரலை ரசித்துக் கொண்டிருந்தேன். பதில் சொல்ல வேண்டுமே, சொன்னேன்.

“எனக்குப் பிடிச்சிருக்கு; போறேன்.”

அவ்வளவுதான், என் பேச்சைக் கேட்கவும் பலமாகச் சிரித்தார்.

“பாருய்யா, இவளுக்குப் பிடிச்சிருக்காம்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூர்ந்து பார்த்தார்

“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு, பொம்புள்ளைங்க இப்படித்தான் துணிச்சலாப் பேசணும். பயப்படக்கூடாது. பொண்ணுங்க படிக்கணும். துணிச்சலா இருக்கணும் “

அங்கே பாரதியின் நினைவு வந்தது. அய்யா அவர்கள் பாரதியைவிட பெண் விடுதலைக்கு உரத்த குரல் கொடுத்தவர் .பெண்ணியம் பேசும் எனக்கு எப்படி அய்யாவைப் பிடிக்காமல் இருக்கும்!

இந்தப்பதிவைப் படிக்கின்றவர்களுக்கு எழும் சந்தேகங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஒரே இடுகையில் காஞ்சி பரமாச்சாரியார் அவர்களைப் பற்றியும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் எழுதி இருவரையும் எனக்குப் பிடித்திருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றேன்.
எங்கெங்கு சமுதாயநலனுக்கு, பணிசெய்ய ஊக்கம் கிடைக்கின்றதோ அவைகளை ஏற்றுக் கொள்கின்றேன். மதிக்கின்றேன். எனக்கு முக்கியம் ஒவ்வொரு குடும்பமும் சண்டை சச்சரவின்றி அமைதியாக வாழ வெண்டும். இது பேராசையா? இந்த விஷயத்தில் நான் ஒரு செக்கு மாடு போன்றவள். படித்தாலும், பார்த்தாலும், பழகினாலும், எழுதினாலும் என் நோக்கம் ஒரே குறிக்கோளுடன் சுற்றிக் கொண்டிருக்கும். வயதாகி ஒடுங்கிப் போன காலத்திலும் என்னால் முடிந்ததைச் செய்துவருகின்றேன்.

அய்யா அவர்களை இன்னும் கொஞ்சம் அவசியம் பார்க்க வேண்டும். அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர் பேசியவைகள் அனைத்தும் எழுத முடியாவிட்டாலும் ஒன்ரிரண்டாவது பார்க்கலாம்.

"ராஜாரம்மோகன்ராய் பெண்களுக்கு ஒரு துரோகம் இழைத்துவிட்டார். செத்த புருஷனோடே பொண்டாட்டியயும் கொளுத்திட்டா அப்புறம் அவளை இந்த சமுதாயம் வதைக்க முடியாதே. தாலி அறுத்த பொண்ணுக்கு சுகம் ஏது?. எங்கேயோ சொர்க்கம் இருக்காமே அங்கேயே இருந்து தொலைக்கட்டும். ஐந்து நிமிட வலியுடம் கஷ்டம் முடியும்."

அப்பப்பா, என்ன ஆத்திரம் ?

”புள்ளை உண்டாயி கஷ்டப்படறதைக் காட்டிலும் கருப்பையை அறுத்து தூர எறியணும்”

“பெண்கள் மதிப்பற்று போவதற்கும் அவர்கள் வெறும் போகப் பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாகத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும் “

(குடியரசு இதழ் 15-6-1943)

இப்படி கூறுவதால் பெண் சுதந்திரம் பாதிக்கப் படுகின்றதா? ஜெயகாந்தன் சொன்ன சுதந்திர அடிமைகள் இதுதான். பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டுமென்று பெண்களைவிட ஆண்கள் வரிந்து கொட்டி எழுதுகின்றார்கள். இதனால் அதிகப்பயன் யாருக்கு?

சுதந்திரம் என்ற பெயரில் வாழ்க்கையில் சீக்கிரம் சக்கையாகிவிட வேண்டுமா?

அய்யா அவர்கள் சொல்வதைப் பாருங்கள்.

“புருஷன் கள்ளத்தனமா ஒருத்தியை வச்சுக்கிட்டா பெண்ணும் மூணு பேரை வச்சுக்கட்டும். அப்பொத்தான் இவனுக்கு புத்திவரும்.”

இதுவரை இப்படிச் சொன்னவர் யார்? அதற்காகப் பெண்களை அழிந்துவிடச் சொல்லவில்லை. அவருடைய் ஆத்திரம் எரிமலையாக வெடிக்கின்றது.
அய்யாவைப் பின்பற்றுகின்றவர்களின் பேச்சில், அவருக்கு மிகவும் பிடித்தமான “பெண்விடுதலை” அதிகம் தொனிக்கவில்லை. அதுமட்டுமல்ல; மேடையில் பெண்களைக் கேவலமாகப் பேசுவதைத் தடுப்பதும் இல்லை.

பண்பாடு பற்றி நாம் நிறைய பேசுகின்றோம். எனவே வாழ்க்கையில் ஒழுக்க விதிகளை முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும்.
எங்களுக்கு வெற்றுப்பேச்சும் வெறும் புகழ்ப்பாட்டும் வேண்டாம். எங்களை மரியாதையுடன், மனிதப்பிறவிகளாய் நடத்துங்கள். இதுவே என் வேண்டுகோள்.

சில நலத்திட்டங்களைத் தீட்டுவது மட்டும் போதாது. முதலில் அவரவர் குடும்பங்களில் பெண்கள் கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் யாரையும், எக்கட்சியினரையும் தனிப்பட நினைத்து இதனைக் கூறவில்லை. சமுதாயத்தில் ஒரு சக்தியாக இயங்கும் அரசியல் அமைப்புகளூக்கு இந்தக் கிழவியின் வேண்டுகோள்.

மதங்களிலும் நன்னடத்தை பேசப்படுகின்றது. நாங்கள் இறைபக்தியுள்ளவர்கள் என்று கூறுபவர்களும் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் பார்க்கக் கூடாது என்று முடிவு எடுக்கட்டும்.

ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகளும் நன்னடத்தைக்கு வழிகாட்டிகளாக இருப்பதைக் கண்டிப்பாக்கினால், எங்களின் பல குறைகள் குறையும். முற்றிலும் போகாது என்று தெரியும். ஏனென்றால் நாம் மனிதர்கள். சஞ்சலப் புத்திக்காரர்கள்.

பெண்ணைக் கெடுக்கின்றவன் கெட்டிக்கரத்தனமாகத் தப்பிக்கின்றான். அறையில் பட்ட அவலத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் வக்கீலின் வாதங்களில் அவமானப்பட வேண்டும். அங்கம் அங்கமாக நடந்ததை விசாரிப்பார். என்ன கொடுமையடா ?

அனுராதா ரமணனின் “சிறை“ கதை நினைவிற்கு வருகின்றது. அற்புதமான கதை. நெஞ்சக்கொதிப்பை அப்படியே தத்ரூபமாகக் காட்டியிருப்பார்.

இன்று பெண்ணின் நிலையென்ன?


கருவிலேயே கொலை.

பிறந்த பின்பும் கொலை

பெண் குழந்தையென்றால் பெற்றவள் கூட சோற்றைக் குறைத்துவிடுகின்றாள்.

இது பத்திரிகை செய்தில்ல. நான் ஆய்வு செய்திருக்கின்றேன்.

பள்ளிக்குச் செல்லும் பெண் வீடு திரும்புமா என்ற நிலை.

பெண் என்றால் மனைவி படும் கஷ்டம், அவள் ஆடையலங்காரம் போன்றவைகள் தானா?

ஒரு சில பெண்கள் கல்வி, உயர்ந்த உத்தியோகம் என்றால் பெண் சமுதாயமே விடுதலை பெற்ற தாகுமா?

பெண்ணுக்கு ஆண் மட்டும் சோதனை கொடுக்கவில்லை. பெண்ணே பெண்ணுக்குத் தீங்கிழைக்கின்றாள்.
சுதந்திரக்காற்றின் மணத்திலே மயங்கி எத்தனை பேர்கள் தடம் மாறி அவலநிலைக்குப் போயிருக்கின்றார்கள்?

தனக்குத்தானே அறியாமல் தீங்கு செய்து கொள்கின்றாள்.

“பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி “
என்று பாடினானே பாரதி. அதுதான் உண்மை.
பெண்ணாகப் பிறந்தாலே ஏற்படும் சோதனைகள், வேதனைகள் உலகம் முழுவதும் பொதுவானது.

இந்தத் தொடர் அடுத்த பதிவுடன் முடிய இருக்கின்றது. துன்பம் நீங்க “சுந்தர காண்டம்” படிக்கச் சொல்லுவார்கள். நானும் இப்பொழுது படிக்கலாம் என நினைக்கின்றேன்

ஜெயகாந்தன் எழுதிய சுந்தர காண்டம் பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி: திண்ணை

No comments: