மரணத்தின் விளிம்பிலே
பிறப்பும் இறப்பும் இயல்புகள்
மரணத்தின் விளீம்பிற்கு ஒரு முறையோ அல்லது சில முறையோ செல்பவர் உண்டு.
நான் தான் ஊற்சுற்றும் மனுஷியாச்சே. பலமுறை மரணம் என்னை அந்த விளிம்பிற்கு கொண்டு சென்றிருக்கின்றது. அப்பொழுது நான் பயந்ததில்லை
தேக்கடி மலையில் கண்ணகி கோட்டம் சென்று திரும்பும் பொழுது நான் சென்ற வண்டி மலைப்பாறையில் மோதி உருண்டது. நான்தான் வெளியில் குதித்து எல்லோரையும் வெளிக் கொணர்ந்தேன். அப்பொழுது அச்சமோ நடுக்கமோ வரவில்லை
அடுத்து குடவனாறு அணை உடைந்த அன்று திருச்சியில் குடும்பத்துடன் மாட்டிக் கொண்டோம். நாங்கள் சென்ற பொழுது திருச்சியை விட்டுவெளிச்செல்ல வண்டி கிடைக்கவில்லை. தங்க வேண்டிய நிர்ப்பந்தம். உறையூரில் குடிசைப் பகுதியில் தெரிந்தவர்கள் இல்லம் சென்றோம். நாங்கள் சில வினாடிகளில் அங்கு இருந்த ஏரி உடைந்த்து.தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் வேகமாக ஓடி வருவதை ரசித்தேன். அந்த வீடு மட்டும் குடிசையல்ல. பலரும் மாடிக்குச் சென்றோம். கொட்டும் மழை. மொட்டைமாடியில் தங்கல். வெள்ளம் பெருக்கடித்து குடிசைகளையும் குடிசை வாழ் மக்கள் மற்றும் உயிரினங்களையும் அள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த நேரமும் எங்கள் வீடும் இடிந்து விழலாம். மரணம் பக்கத்தில் கெக்கெலித்துக் கொண்டிருந்த்து. நானோ இயற்கையின் கொடூர தாண்டவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அச்சம் வரவில்லை.
அமெரிக்காவில் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மார்ஷலில்ருந்து மினியாபொலீஸுக்கு காரில் புறப்பட்டொம். அன்று பனிப்புயல். பயணம் கூடாது என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன. எனக்கோ விமானத்தைப் பிடித்தாக வேண்டும். மகன் துணிந்து புறப்பட்டுவிட்டான். பேரன் 4 வயது. மருமகள் கர்ப்பிணி. நாங்கள் பயணம் செய்த பொழுது புயலின் வேகம் அதிகரித்துவிட்ட்து. மெதுவாக ஊர்ந்து சென்றோம். வழியில் பெரிய பனிச்சுவர். மேலே செல்ல முடியவில்லை. மார்ஷலிலிருந்து சிறு விமானங்கள் போகின்றது என்ற செய்தி கிடைக்கவும் மகன் திரும்ப ஆரம்பித்தான். பாதை தெரியவில்லை. வழுக்கும் பாதை. அன்று குடும்பமே பனிக்குவியலில் புதைந்து போயிருக்க வேண்டும். அன்று என் மரணம்பற்றி நினைக்கவில்லை. ஆனால் குடும்பத்தைப் பார்க்கவும் கவலை வந்து கடவுளைக் கும்பிட ஆரம்பித்தேன். எப்படியோ ஊருக்கு வந்து பின்னர் விமானத்தில் ஏறினேன். அதன் பின் தொடர்ந்து சோதனைகள். பயத்திற்குப் பதிலாக வாழ்க்கையில் விரக்தி தோன்றியது.
இப்படி பல விபத்துக்களில் மரண விளிம்[பிற்குச் சென்று வந்திருக்கின்றேன். இம்முறை சென்னைக்குப் புறப்படும் முன்னர் எங்கள் வீட்டு பூல் அருகில் இருட்டில் விழுந்தென். கொஞ்சம் திரும்ப்யிருந்தாலும் தண்ணிருக்குள் விழுந்து சமாதி ஆகி இருப்பேன். அன்றும் மரணம்பற்றி நினைக்கவில்லை. கால் எலும்பு முறிந்திருக்குமோ என்றுதான் நினைத்தேன்
விபத்துக்கள் ஒன்றா இரண்டா?
ஒரு முறை விழுந்து வலது கை மணிக்கட்டு எலும்பு முறிந்தது. அடுத்த வருடமே கீழே விழுந்து இடது தோளில் மூட்டே கழன்றது. பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கட்டு பிரிக்கு முன்னர் இந்தியாவிற்குப் புறப்பட்டோம். லண்டன் விமான நிலையத்தில் தானே இயங்கும் படிகட்டில் ஏறிச் செல்லும் பொழுது விழுந்தேன். என் பேரனும் மருமகளும் இரு கைகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. உடல் முழுவதும் அடி. சென்னைக்கு வந்து இறங்கும் பொழுது உடைந்து போன உடம்புடன் இருந்தேன். அப்பொழுது கூட மரணம்பற்றிய அச்சம் வரவில்லை. ஆனால் எனக்கு சோதனை வேறு உருவத்தில் வந்தது. கடந்த ஒருவருடமாக என்னால் படிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை.
காரணம் மன அழுத்தம் வந்துவிட்டது. காரணமின்றி அழுதேன். ஏதோ ஓர் பயம் என்னைத் துரத்தியது. இதிலிருந்து மீண்டு வர வேண்டும். பல குழுமங்களில் நான் இருப்பதால் கவுரவம் பார்க்காமல் வேண்டு கோள் விடுத்தேன்.
“எல்லோரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நான் மீண்டும் எழுத வேண்டும்கடைசி மூச்சு நிற்கும் வரை ஏதாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் “
நான் பத்திரிகைகளில் எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டன. சுதந்திரமாகப் பறந்து திரிந்த பறவை கூண்டுக்குள் அடைபட்டேன். அங்கும் ஓர் உலகம் உண்டாக்கிக் கொண்டேன். அதுதான் கணினி. உலகில் பல இடங்களீலும் நண்பர்கள் பெற்றேன். இணைய இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். களப்பணி செய்கின்றவள். இப்பொழுது முடியாது. கணினி மூலமாகவாவது தொடர்பு வைத்துக் கொண்டு முடிந்ததைச் செய்து வருகின்றேன்.
எனக்கு டைப்பிங் தெரியாது. ஒற்றைவிரல் நாட்டியம் கணினியில் பழகிய ஒரு மகன் தமிழ் கற்றுக் கொடுத்தான். நடுக்கும் விரல்களால் எழுத்துப் பிழை வரும். ஆனால் கருத்துப்பிழை வராது. என் நினைவுகள் அடங்கும் வரை எழுத வேண்டும். நீங்கள்தான் உறவுகள்.
என்னிடம் மனம்விட்டுப் பேசி தங்கள் குறைகளைக் கூறி வழி கேட்கும் இளைஞர் கூட்டம் அதிகம். உலகம் எல்லாம் என் பிள்ளைகள்
என் அனுபவங்கள் சுய சரிதம் இல்லை. அந்த சமயத்தில் நிகழும் வரலாற்று நிகழ்வுகளுக்குச் சாட்சியாக எழுதி வருகின்றேன். எந்ததலைப்பில் தொடங்கினாலும் என் நினைவு சமுதாயத்தைச் சுற்றியே வரும். சென்னை ஆன் லயனில் தொடராக வந்த நினைவலைகளைப் போட இருக்கின்றேன். பிள்ளைப்பருவ கால அனுபவங்கள் எனது எண்ணங்கள் ஊர்வலத்தில் இருக்கின்றன. அதைப் படித்தால் கொஞ்சம் என்னைப் புரிந்து கொள்ளலாம். நினைவலைகளீல் 1962 வரை உள்ள சமுதாய வரலாற்றில் பல பகுதிகளைப் பார்க்கலாம்
புத்தகங்களீலும் ஒளித்திரைகளிலும் பார்க்க முடிந்த பெரியவர்களுடன் பழகியவள், சிலருடன் சேர்ந்து பணியாற்றியவள் நான். பயனுள்ள பல செய்திகள் கிடைக்கும். இந்த பயணத்தில் என்னுடன் தொடர்ந்து வருமாறு உங்கள் எல்லோரையும் அழைக்கின்றேன்
இனி அடிக்கடி சந்திப்போம்
சீதாம்மா
1 comment:
எழுதுங்க; சந்திப்போம். ஆவலாக இருக்கிறேன்.
Post a Comment