உடனே நடந்த உரையாடல்கள்தான் என் பயணத்தை மாற்றியது
“வாத்தியார் வேலைக்கு யாரும் வருவாங்க.கிராமத்துக்குப் போய் வேலை பாக்கச் சொல்லு,” என்று என் தந்தையிடம் கூறிய பெரியவர் என்னை நோக்கி,“ நிறைய கிராமத்துலே பள்ளிக்கூடம் இல்லே. இருந்தாலும் புள்ளங்களே சரியா அனுப்பறதில்லே. இன்னும் அப்பாவித்தனமா இருக்காங்க. படிச்சாத்தானே உலகம் போற போக்கு புரியும். நீ போய் இதெல்லாம் சொல்லணும். சரியான ரோடு கிடையாது. லைட்டு இல்லே (மின்இணைப்பு ),ஆஸ்பத்திரிகூட இல்லை. கிராமம் முன்னுக்கு வந்தாத்தான் நாடும் நல்லா இருக்கும். போவியா?” என்று என்னைக் கேட்டார் . நான் 'சரி'யென்று தலையாட்டினேன். அது அவருக்கு திருப்தி தரவில்லை போலிருக்கின்றது.
“என்ன தலையாட்டறே? கிராமத்துக்கு நடந்துதான் போகணும். நிறைய ஊருக்கு பஸ் கிடையாது. வெள்ளைத் துணி அழுக்காகுமேன்னு நினைக்கிறியா?” அவர் கேள்வியில் கொஞ்சம் கோபம் தொனித்தது.
நான் வாய் திறந்து பேசினேன். “நிச்சயமா போவேன். நீங்க சொன்னபடி அவங்க நல்லதுக்காக வேலை செய்வேன். “
அவர் முகத்தில் சிறு புன்னகை!
“கெட்டிக்காரி. புளச்சுப்பே “ என்றார் பெரியவர். அவர் ஆசிகளுடன் புறப்பட்டேன்.
சிலர்முன் சென்றால் பேச்சு வருவதில்லை. சிலரை அர்த்தமில்லாமல் பார்த்தவுடன் ஒதுங்க நினைக்கின்றோம். ஏதோ ஓர் காந்த அலைவரிசை மனிதர்களிடையே விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவிக்கும் போல் இருக்கின்றது. இந்த அனுபவம் பலமுறை எனக்குக் கிடைத்தது. என் தந்தையைப் பார்த்தேன். அவருக்குத்தான் மகள் பட்டம் வாங்கியதில் எவ்வளவு பெருமை? அக்காலத்தில் ஒரு பெண் பட்டம் வாங்குவ்து வியப்புக்குரியதாக இருந்தது
தன் மகள் படித்த மகிழ்ச்சியைத் தன் தலைவனிடம் கூற ஒரு தொண்டன் நினைக்கின்றான். தலைவனும் அக்கறையுடன் கேட்டு, எதிர்கால நடவடிக்கைக்கும் அறிவுரை கூறுகின்றான். இங்கே மதிப்பு மட்டுமல்ல, தலைவன் தொண்டனுக்கிடையில் ஓர் பந்தமே இருக்கின்றது.
அதனால்தான் அவர் பெருந்தலைவர் என்று அழைக்கப் படுகின்றார்.
நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வலிமை பெற்றதும் இந்தக் குணத்தாலேதான். கண்டிப்பு மிக்கவர். கோபக்காரர். ஆனால் கருணை காட்ட வேண்டிய நேரத்தில் அரவணைப்பவர். கிராமங்களை உயிராய் நேசித்தவர். நான் அரசியல்வாதியல்ல. தொண்டன் தலைவனைப் புகழ்வது பெரிதல்ல. எக்கட்சியையும் சாராதவர் மதிக்க வேண்டும். அவர்களிடமிருந்து புகழுரைகள் வரவேண்டும்.
ஊருக்கு வந்தபின் நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம். எந்த வேலையைக் குறிப்பிட்டார் என்று அப்பொழுது தெரியவில்லை. ஆனால் சில நாட்களில் விடை கிடைத்தது. என் சக மாணவன் சுப்பையா செய்தித்தாள் ஒன்றை எடுத்து வந்தான். அதில் ஓர் விளம்பரம்; வட்டார வளர்ச்சிப் பணிகளில் வேலை செய்ய பெண் ஊழியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கிராமங்களில் செய்யும் பணி. பெரியவர் கூறியது இதுவாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொண்டோம். உடனே நான் இந்த வேலைக்கு மனுச் செய்தேன். பதிலும் சீக்கிரம் வந்தது. காந்தி கிராமத்தில் தேர்வு நடத்தப்படும். மூன்று நாட்கள் அங்கே இருக்க வேண்டும். தேர்வுக்குச் சென்றேன்.தேர்வுக்குச் செல்லும் முன் சோம சுந்தர பாரதியாரின் தம்பி ராஜாராம் அவர்களிடம் சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொண்டேன்.
காந்திகிராமச் சூழலே அமைதியாக இருந்தது. எங்களுக்குச் சில வேலைகள் கொடுத்துச் செய்யச் சொன்னார்கள். எங்கள் ஆர்வமும், செய்யும் தொழிலில் எங்கள் பங்கீட்டையும் மதிப்பிட்டார்கள். மறு நாள் எனக்குப் பிடித்தமாக இருந்த ஒரு தலைப்பைக் கொடுத்து பேசச் சொன்னார்கள். நான் பேச்சிலே கெட்டி. கைதட்டு வாங்கினேன். ஓர் திட்டம் கூறி அதைப் பாட்டாக எழுதிப் பாடச் சொன்னார்கள்.
சின்னவயதில் கவிதை எழுதியவள். சங்கீதம் முறைப்படி கற்றவள். ஆனாலும் சினிமா மெட்டில் பாட்டிசைத்து மீண்டும் கைதட்டு பெற்றேன்.
அடுத்து நாடகம். முதல் நாள் மாலையே சொல்லி இருந்தார்கள். கல்லூரி நாட்களில் விளையாட்டுகளுக்குக் கூடப் போகாமல் பாட்டு எழுதுவதும், நாடகம் கதை வசனம் எழுதுவதும், நான் எழுதிய நாடகத்திலே நடித்ததும் இப்பொழுது பயன்பட்டது. இப்பொழுது மட்டுமா? கலைவாணர் அரங்கில் கலைஞர் தலைமையில் நாடகம் போடும் வாய்ப்பே கிடைத்தது. கல்லூரியில் நான் எழுதிய ஓரங்க நாடகத்தில் கண்ணகியாக நடித்தேன். அதிலிருந்து எங்கள் பிஷப் மேன்மைதகு ஆண்டவர் ரோச் அவர்கள் என்னைக் 'கண்ணகி' என்றுதான் கூப்பிடுவார். காந்தி கிராமத்தில் என் நடிப்பு பாராட்டப் பட்டது.
மூன்றாவது நேர்காணல். அங்கும் என்னால் அச்சமின்றி, தயக்கமின்றி பதில் சொல்ல முடிந்தது. என் தந்தையுடன் பல பெரியவர்களை என் பிள்ளைப் பருவத்தில் பார்த்ததும் பேசியதும்தான் என்னிடம் இப்படி ஓர் தன்னம்பிக்கையைத் தோற்றுவித்திருக்க வேண்டும். பிஞ்சிலே வளையாதது பின் வளைத்துப் பயனில்லை. சின்னப்பிள்ளைகளை அரவணைத்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அம்மாக்கள் தொலைக் காட்சிக்கு முன் உட்கார்ந்திருப்பது குழந்தைகளைத் தனிமைப்படுத்திவிட்டது. இப்பொழுது வளரும் சூழல், ஊடகத்தாக்கம் இவைகளால் மனிதன் உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றான்
என் தேர்வு முடியவும் நான் கொண்டு சென்றிருந்த சிபாரிசுக் கடிதம் கொடுத்தேன். அவர்கள் அதனைப் பிரித்துக் கூடப் பார்க்காமல்சொன்னது.
“நாங்கள் இந்த வேலைக்கு எதிர்பார்க்கும் தகுதி உன்னிடம் இருக்கின்றது. சிபாரிசு பார்த்து திறமை இல்லாதவர்களை வேலைக்கு எடுத்தால் கிராமம் உருப்படுமா? நீ கடிதம் கொண்டுவந்ததே தப்பு. கெட்டிக்காரப் பெண்ணாய் இருப்பதால் உனக்கு வேலை தருகின்றோம். இனி இப்படி செய்யதே!”
அப்பொழுது ஊரகவளர்ச்சித் துறைக்குத் மேலதிகாரியாக இருந்தவர் , காந்தீயவாதி திரு வெங்கடாசலபதி அவர்கள். சரியான தலைமை.
சிபாரிசும் குறுக்கு வழிதான். அதிகாரவர்க்கங்கள் உண்டாக்கிய சலுகைகளில் ஒன்றுதான் சிபாரிசும். வரலாற்றில் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவர்களால் தீமைகள் ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பித்தது. ஆனால் கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து விட்டது. இப்பொழுது பரவலாக்கப்பட்டிருக்கின்றது.
இப்பொழுது என்ன நடக்கின்றது?. வேலைக்கு வேண்டிய முக்கியமான தகுதி, காசும், சிபாரிசுகளும். திறமையானவர்கள் ஒதுக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி எந்த அளவு பாதிக்கப்படும் என்று வருங்கால சந்ததிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறுவை சிகிச்சையின் பொழுது கத்திகூடச் சரியாகப் பிடிக்கத் தெரியாதவனுக்கு, சிபாரிசால் வெற்றி கொடுத்தால் மனித உயிர்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா? உதாரணத்திற்காக இன்னொன்றும் கூற விரும்புகின்றேன்.சில காரணங்களால் சில சலுகைகள் தருகின்றோம்.. அதிலும் தேர்ந்தெடுக்க குறைந்தது 70 மதிப்பெண் பெற வேண்டுமென்று ஓர் நடு நிலை நிர்ணயம் செய்தால்அந்த மதிப்பெண் பெற முயற்சிப்பான். அதைவிடுத்து 40 மதிப்பெண் போதும் என்று சிபாரிசு செய்தால் அவனுக்கும் படிப்பில் அக்கறை ஏற்படாது. எதிர்காலத்தில் கல்வித்தரம் உயர அக்காலத்திற்கேற்ப பல கோணங்களில் சிந்தித்து செயல் படவேண்டும்.
வேகமாக மாறிக் கொண்டுவரும் சூழ்நிலைகளில், பிள்ளைகள் அத்தனையும் தாண்டி சிறப்பாகப் படிக்கின்றார்கள். அமெரிக்காவில் புஷ் அவர்களும் ஒபாமா அவர்களும் கூட, தங்கள் நாட்டுப்பிள்ளைகளை நோக்கி 'இந்தியக் குழந்தைகளைப் போல் படியுங்கள்,' என்று சொல்கின்றார்கள்.
இந்தியா பெரிய நாடு. நம் நாட்டின் வளர்ச்சிக்குத் தரமான மனிதர்களை உருவாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. படிப்பில் மட்டுமல்ல, நாட்டுக்கென்று இருக்கின்ற சில கலாச்சாரங்களையாவது அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். குடும்ப அமைதிக்குத் தேவையான சில கட்டுக் கோப்பை, நாகரீகப்போக்கில் அழிந்துவிடாமல் பாதுகாக்கப் படவேண்டும். எதிர்கால சந்ததிக்கு இதனைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அறிவுரைகள் யாருக்கும் பிடிக்காது. வழிகாட்டுகின்ற பெரியவர்களும் தங்களை அதற்குத் தகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
என் நினைவலைகளின் பயணத்தில் பல காட்சிகள் காணலாம். காலச்சக்கரத்தின் சுவடுகளை ஒதுக்கித் தள்ளக் கூடாது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் என் பயணம் ஒரு "த்ரில்லர்" பயணம். அடுத்துவரும் காட்சியிலேயே சில அதிர்ச்சி காட்சிகளைப் பார்க்கலாம்.
அடுத்து சந்திப்போம்
4 comments:
பல அரிய புதிய விஷயங்களை
தங்கள் பதவின் மூலம் அறிந்து கொண்டேன்
சிலருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பதே
சமூகத்தோடு இர்ண்டறக் கலந்ததுபோல் இருந்து விடுகிறது
அதற்கு ஆண்டவன் அருளும் வேண்டும்
உங்களுக்கு அந்தக் கொடுப்பினை இருக்கிறது
தொடர வாழ்த்துக்கள்
அருமை அடுத்த பதிவிர்க்காய் காத்திருக்கிறோம்
வாழ்க்கையின் அனுபவங்களை போல உயர்ந்த பாடம் உண்டா? அதுவும் உங்களை போன்று பல தலைவர்களையும், பல ரக மனிதர்களையும் , கண்டிருக்கும் , பதிவரிடமிருந்து வரும் அனுபவங்கள், படிப்பதே ஒரு தனி அநுபவம்.
உங்கள் நினைவலைகளை வாசகர்களிடம் பகிரும் உங்கள் நல் எண்ணத்திற்கு என் வணக்கங்கள்.
ரமணி,
சசிகலா
வெற்றிமகள்
மூவருக்கும் நன்றி
வாசகர்களால் தான் சக்தி பெற முடிகின்றது. இல்லையெனில் நினைவுகள் நெஞ்சுக்குள்ளே சமாதியாகிவிடும்
மீண்டும் நன்றி
சீதாம்மா
Post a Comment