Wednesday, February 1, 2012

நினைவலைகள்-03

நினைப்பதெல்லாம் நடப்பதுவும் தெய்வத்தின் அருள்.என் வேலைக்கு அரசு ஆணை கிடைக்கவும் எங்கள் குடும்பமே மகிழ்ந்தது. வெளியூரில் வேலை என்றாலும் வீட்டில் கலக்கம் இல்லை. அக்காலத்தில் ஓர் பெண்ணை வெளியூருக்கு அனுப்பி, தனியாக வசிக்க அனுமதி தருவது அபூர்வம்.

என் பயணம் தொடங்கும் முன்னர் சில விஷயங்களை முதலிலேயே கூறிவிட விரும்புகின்றேன். எழுதும் பொழுது, சிலரின் பெயர்கள், சில ஊர்களின் பெயர்கள் எழுதுவதைத் தவிர்த்திருக்கின்றேன். செய்திகள் முக்கியமே தவிர, அங்கே பெயர்கள் தேவையில்லை. நான் யாருடைய மனத்தையும் காயப்படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் தேவையான உண்மைகளும் தெரியப்படுத்த வேண்டும். என் அனுபவங்களைத் தெரிவிப்பது, சமுதாயத்திற்கு நான் செய்யும் கடமையாக நினைக்கின்றேன்.

அடுத்து இன்னொரு தகவல்! கூறப்படும் சம்பவங்கள், அவைகள் நிகழும் காலத்தைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ள வேண்டும். அக்காலத்தில் நடந்தவைகளை இக்கால நடப்புகளுடன் ஒப்புநோக்கி விமர்சனம் செய்வது பொருந்தாது. படிப்படியாக நேரும் மாறுதல்களையும் சொல்லிக்கொண்டு வருவேன்.

இப்பொழுது பயணத்தைத் தொடங்குகின்றேன்.

என் தந்தையுடன் ஊராட்சி அலுவலகம் சென்று வேலையில் சேர்ந்த கடிதம் அளித்தேன். அதன்பின் ஓர் ஊழியர் என்னை அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குச் சென்று, அங்கிருந்த ஓர் நாற்காலியையும் காட்டி,“இதுதான் உங்கள் இடம்,“ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அந்த இடத்தில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்று “ இதுதான் உங்களிடம். என் பெயர் பரமசிவம். சமூகக் கல்வியாளர் “ என்று கூறிவிட்டு, அந்த அறையில் இருந்த எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் அலுவலத்தின் பணியாளர்களின் அமைப்பையும் விளக்கினார்.ஊரக வளர்ச்சி அதிகாரியின் கீழ், ஒவ்வொரு துறைக்கும் ஒரு விரிவாக்க அலுவலர் உண்டு. சமூகக்கல்விக்கு மட்டும் ஆண், பெண் என்ற இரு அலுவலகர்கள் .நான் சேர்ந்த பணியின் பெயர் சமூகக்கல்வி விரிவாக்க அலுவலர் (பெண்).

பரமசிவம் என்னிடம் நான் செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது என் தந்தை மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பரமசிவம் நகன்றவுடன் என் தந்தை அருகில் வந்து வெளியில் சென்று மாலையில் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார். அவருடன் கால்நடை அலுவலர் சரவணனும் சென்றார்.

சில நிமிடங்கள் கழிந்தன. பரமசிவமும், கூட்டுறவு அலுவலர் நடராஜனும் என் எதிரில் இரு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தனர். ஏனோ அவர்கள் முகங்களைப் பார்க்கவும் நல்ல அபிப்பிராயம் தோன்றவில்லை. மெதுவாகப் பேச ஆரம்பித்தனர்.

“உங்களிடம் ஒரு முக்கிய செய்தி கூற வேண்டும். உங்கள் அப்பா போகட்டும் என்று காத்திருந்தோம். உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம் வட்டார வளர்ச்சி அதிகாரி பெண்கள் விஷயத்தில் மகாமோசம்..," என்று இழுத்தார் நடராஜன்.

எனக்கு அச்சம் வரவில்லை. ஏனோ செய்தியை நம்பத்தோன்றவில்லை. என் மவுனத்தைக் கண்ட பரமசிவம் பேச்சைத் தொடர்ந்தார்

“உங்களுக்கு முன்னால் பத்மாவதி இருந்தார்கள். இந்த அதிகாரி எப்படியோ அவளைக் கெடுத்துவிட்டார். ஊர்க்காரங்க நோட்டீஸ் அடிச்சுக் கேவலப் படுத்திட்டாங்க. சுவத்திலும் அசிங்கமா எழுதிட்டாங்க. அது நம் பெரிய ஆபீஸ் வரை போய்த்தான் பத்மாவைத் தூக்கிவிட்டார்கள். அந்த இடத்தில்தான் நீங்கள் வந்திருக்கின்றீர்கள். நம் ஆபீஸரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. “

பரமசிவம் பேசப்பேச எனக்குள் நெருப்பு புகைய ஆரம்பித்தது. பயம் வருவதற்குப் பதிலாக எதிரில் அமர்ந்திருந்த இருவரையும் கெட்ட நோய்க்காரர்கள் போல் உணர்ந்தேன். 'பெண்ணைப் பழிக்கின்றார்கள் பாவிகள்!' என்றுதான் நினைப்பு வந்தது.

என்னிடம் ஒரு குறையுண்டு. 'பெண் விஷயத்தில் ஆண்கள் கெட்டவர்கள்,' என்ற எண்ணம். அப்படி எண்ண வைத்தது பிள்ளைப்பருவத்து அனுபவங்கள், நான் கிராமத்தில் கண்ட காட்சிகளே. குடும்பச்சண்டை தெருவில் நடக்கும். பெண்டாட்டி தலைமயிரைப் பிடித்து இழுத்து உதைப்பான். அவளோ ஓங்கிக் குரல் எழுப்பிக் கத்துவாள். அவனோ அவளை மிதிப்பான். தெருவில் அவள் துடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் திட்டிக்கொண்டே சென்று விடுவான். இவள் தெருவில் புரண்டு அழுவாள். ஒன்றா, இரண்டா பலமுறை தெருக்காட்சிகள் கண்டிருக்கின்றேன். விசாரித்ததில், அவனுக்கு ஒரு 'வப்பாட்டி' (இப்பொழுது அது சின்ன வீடு) இருக்கிறாள்; குடும்பத்தைக் கவனிப்பதில்லை; குடித்துவிட்டு எப்பொழுதாவது வருவான்; இவளோ பொறுக்கமாட்டாமல் கத்துவாள்; அவனோ அடிப்பான். பெண்டாட்டி அடித்து நான் பார்த்ததில்லை. அதனால் என் மனதில் 'ஆண்கள் பொல்லாதவர்கள்,' என்ற எண்ம் பதிந்துவிட்டது. நிறைய கதைகள் படித்த அனுபவத்தில் வம்புபற்றியும் தெரியும். என்முன் உட்கார்ந்திருந்தவர்கள் வம்பர்கள் என்று நினைத்தேன்.அத்துடன் பணியாற்றும் பொழுது பெண்ணின் மேல் எப்படிப்பட்ட சேற்றை வாரி வீசுவார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். என் மவுனத்தைப் பார்த்த பரமசிவம், “பயப்படாதீர்கள், நாங்கள் இருக்கின்றோம். உங்களுக்குக் கஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வோம்,“ என்றனர். அடிப்பதற்குக் கை பரபரவென ஊறியது. அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்தேன். அவர்கள் அறைக்கு வெளியில் போய்விட்டார்கள்.

அவர்கள் போனவுடன் விவசாய அலுவலகர் மாணிக்கம் வந்தார்.

“மேடம், இவர்கள் மோசமானவர்கள். பயப்படாதீர்கள்! நம் அதிகாரி நல்லவர். இவர்களால்தான் கதை கட்டிவிடப்பட்டது. ஊர்க்காரனை சுவத்திலே எழுத வைத்ததும், நோட்டீஸ் அடிக்க வைத்ததும் இவங்கதான்.மெட்ராஸ் ஆபீஸுக்கும் எழுதிப் போடவைத்தவங்க இவங்கதான். இவங்க கிட்டேதான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்,“என்று மெதுவாக மாணிக்கம் பேசினார்.ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. பெண்மேல் எந்தப் பழியும் சுமத்துவார்கள், கேவலப் படுத்தப்படுவார்கள் என்பதை உணர்ந்தேன்.

இக்காலத்திலும் அரசியலில் வரும் பெண்கள் மேல் பழிசுமத்தப்படுவதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் பழிப்பவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் பரிசுத்தமாக இல்லை. முதல் நாள் அனுபவம் ஓர் அவல முழக்கம்.. இச்சூழ்நிலை எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. என்னால் பொறுமையாக இருக்க முடியுமா? இல்லை விலகி ஓடக் கூடாது, ஒரு கை பார்க்கவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.

மதியம் மூன்று மணிக்கு இரு பெண்கள் வந்தார்கள். ஒருத்தி கிராமசேவிகா. பெயர். மினாட்சி. இன்னொருத்தி இராட்டை கற்றுக் கொடுப்பவர். பெயர் லட்சுமி.. இருவரும் வேலைகளைப் பற்றிப் பேசிவிட்டு மறுநாள் உள்ளூர் மாதர்சங்கம் போகலாம் என்றார்கள்.

திரும்பி வந்த என் தந்தை ஒரு செய்தியுடன் வந்திருந்தார். வெளியில் சென்றவர் வாடகைக்கு ஓர் வீடு பார்த்துவிட்டதாகவும், சில சாமான்களும் வாங்கி வைத்துவிட்டதாவும் கூறினார். எவ்வளவு சீக்கிரமாக தன் மகள் தனித்து வாழ, வேண்டிய வசதிகளைச் செய்துவிட்டார்!

மாலையில் என் தந்தை, சரவணன், மீனாட்சி, லட்சுமி, எல்லோருடனும் புது வீட்டிற்குப் போனோம். சரவணன் வீடு இருந்த அதே தெருவில் வீடு. நீளமாக அமந்திருந்தது. கழிவறை கொல்லைப்புத்தில் கோடியில் இருந்தது. கிணற்றுத்தண்ணீர்தான். வீட்டில் மின்னிணைப்பு கிடையாது (மனக்குரல் பெரியவர் பேசியதை நினைவு படுத்தியது ). ஒரு ஹரிக்கேன் விளக்கு. சரவணன் மனைவி வந்து அடுப்பு மூட்டி பால் காய்ச்சினார்கள். விறகுடன், அல்லது விறகு இல்லாமல் இந்தச் சுள்ளிகள் வைத்து அடுப்பு மூட்டுவது கிராமத்து வழக்கம். சுள்ளிகள் பொறுக்கி கட்டாகக் கட்டி விற்பது ஓர் சிறு தொழில். அதுவும் வயலுக்கு அல்லது காட்டிற்கு வேலைக்குப் போய்விட்டு வரும் பொழுது பெண்கள் தலையில் சுள்ளிக் கட்டைச் சுமந்து கொண்டு வரிசையாய் வருவதைப் பார்க்கவே அழகு.

பால் காய்ச்சி முடியவும் மற்ற சின்னச் சடங்குகளையும் முடித்து வீட்டை விட்டுப் புறப்பட்டோம். என் தந்தை வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்தார். குஞ்சுகள் இறக்கை வளர்ந்தவுடன் பறக்கச் சொல்லிக்கொடுத்து விண்ணிற்கு அனுப்பும் தாய்ப்பறவைபோல் என் தந்தை இருந்தார்.

இனி நான் உலகில் தனியாக வலம் வர வேண்டும்.பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது.

கட்டுப்பாடுகளுடன் சுதந்திர வாழ்க்கை. ஒரு பெண்ணுக்கு உரிய வீடு கணவர் வீடு. ஆனால் அங்கே அவளுக்குக் கிடைப்பது கட்டுப்பாடுடன் கூடிய உரிமை. இஷ்டம் போல் சுதந்திரத்தைக் கையாண்டால் சுதந்திரம் பாழ்பட்டுவிடும். எதற்கும் ஒரு ஒழுங்கு வேண்டும். விண்ணிலே இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் கட்டுப்பாட்டை இழந்தால், பரந்து விரிந்து கிடக்கும் கடல் கட்டுப்படற்ற சுதந்திரம் விரும்பினால் என்ன நடக்கும்? சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உரிமையைக் காக்கக் கடமையில் அக்கறை வேண்டும்.

முதல் நாள் கசப்பு அனுபவம் என் உணர்வுகளைக் கொஞ்சம் அசைத்தாலும் சமாளித்துவிட்டேன். என் துணிவிற்கு பாதிப்பில்லை

மீண்டும் சந்திப்போம்

1 comment:

Yaathoramani.blogspot.com said...

தங்கள் அனுபவத்தொடர்
சமூகத்தின் அன்றைய நிலையை
மிகத் தெளிவாக படம் பிடித்துக் காட்டிப் போகிறது
தங்கள் குடும்ப சூழல் தங்கள் உயரிய மனோபாவம்
ஆகியவைக்கு நேர் எதிரிடையான இடத்தில் போய்
பணியாற்ற வேண்டிய சூழல் நிச்சயம் உங்களுக்கு
ஒரு சவாலாகத்தான் இருந்திருக்கும்
அனுபவங்களும் சொல்லிச் செல்லும்விதமும் மனம் கவர்ந்தது
ஒரு புத்தகமாக்கக் கூடிய நோக்கில் விரிவாகவே
எழுதிப் போகும்படி அனபுடன் கேட்டுக் கொள்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்