Sunday, March 10, 2013

நினைவலைகள் -25


நினைவலைகள் -25

சரோஜாவின் கதை
எங்கள் துறையில் ஓர் கிளை அலுவலகத்தில் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் கணவரும் அரசுப் பணியாளராக இருந்த போதினும் ஓர் நோயாளி. அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு மூன்று பையன்கள். எல்லோரும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஏழைப் பெண்.

இந்த நிலையில் அவள் கணவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. ராயபேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை. அபாயக் கட்டத்தைத் தாண்டியிருந்தாலும் உடல்நிலை திருப்திகரமாக இல்லை. இந்த சூழ்நிலையில் அவளை திடீரென்று காஞ்சிபுரத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். சரோஜா பதறிவிட்டாள். செய்தி அறிந்த அவள் என்னிடம்தான் ஓடி வந்தாள். அவளால் இப்பொழுது கணவரையோ, குடும்பத்தையோ விட்டு எங்கும் போக முடியாது. அவள் சூழ்நிலை அறிவேன்.
அவள் என்னிடம் கதறினாள். அவளிடம் ” கவலைப் படாதே, ஆவன செய்கின்றேன்” என்று உறுதி அளிக்கவும் நம்பிக்கையுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். சுலபமாக நான் வாக்குறுதி கொடுக்க மாட்டேன். நியாயமானவைகள் என்றால் அதைச் செய்து முடிக்கும்வரை ஓய மாட்டேன்.  என் துறையில் பெண்களுக்கு அந்த நம்பிக்கை என் மேல் இருந்தது.

பிரச்சனையை ஆராய்ந்தேன். சரோஜாவிற்குப் பதிலாகப் போடப்பட்டவளுக்குப் பெரிதாக பிரச்சனை கிடையாது. குறுக்கு வழியில் முயன்று உத்திரவு பெற்றிருக்கின்றாள். சில நிமிடங்களில் உண்மையைப் புரிந்து கொண்டேன்.

என் இயக்குனர் அறைக்குச் சென்று வாதாடினேன்.

காஞ்சிபுரம் தொலைவா?

ஏன் மேடம், கணவன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கின்றார். காங்சிபுரம் போனால் எப்படி அவசரத்திற்கு வர முடியும்? குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? இந்தச் சூழ்நிலையில் மாறுதல் கூடாது. தயவு செய்து ரத்து செய்யுங்கள்

பென்கள் என்றல் பிரச்சனைதான். லீவு எடுத்துக் கொள்ளட்டுமே

வருகின்றவளுக்கு அவசரமில்லை. சரோஜாவிற்கு இருக்கும் லீவும் குறைவு. சம்பளத்தை நம்பி குடும்பம் வாழ்கின்றது
எங்கள் வாக்குவாதம்தான் வளர்ந்தது. நான் பொறுமையை இழந்தேன்

“பெண்களுக்கு இது வெல்பேர் டிப்பார்ட்மென்ட்..அவர்கள் விதவையாகக் காரணமாகிவிடக் கூடாது(கடுமையான சொல்லை உதிர்த்தேன். எழுத முடியவில்லை).”

இது கொஞ்சம் அல்ல, மிகவும் அதிகமாக உதிர்த்த சொற்கள். என் மீது நடவடிக்கை எடுக்கலாம். என் அதிகாரிக்குக் கோபம் வந்து சத்தம் போட்டார்கள்.

 நான் முழுமையாகப் பொறுமையை இழந்தேன்

மேடம், என்னை மன்னித்து விடுங்கள். இந்த மாறுதலுக்குப் பின் யார் என்ன, ஏது என்று உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். மாறுதல் ரத்தாக வில்லையென்றால் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருப்பேன். பத்திரிகைகளுக்குச் செய்தி தருவேன்

இப்படி பேசியதற்கு என்னைப் பணியிலிருந்து நீக்கிவிடலாம். அத்தகைய தவறு இது. மேலதிகாரிகள்கிட்டே இப்படி பேசக் கூடாது. மேலும் நானும் ஒரு அதிகாரி. பேச்சுக்களுக்கு ஒரு வரன்முறை உண்டு. ஆனால் நான் அதைத் தாண்டிவிட்டேன்.கோபமாகப் பேசிவிட்டு வெளியில் வந்து
விட்டேன். நேராக நிர்வாக அறைக்குச் சென்றேன். அங்கே இத்தனைக்கும் காரணமானவர் உட்கார்ந்திருந்தார். அங்கும் போய்க் கத்தினேன். நான் பத்திரிககளுக்கு அறிக்கை கொடுப்பேன் என்று சொல்லவும் அவர் முகத்தில் அதிர்ச்சி. (எனக்கு இருந்த பத்திரிகை பலம் யாவரும் அறிவர்)

இந்த நேரத்தில் இயக்குனரிடமிருந்து சரோஜாவின் கோப்பை எடுத்துவரச் சொல்லி ஆள் வந்து சொன்னான். நடக்கப் போவதைப் புரிந்து கொண்டேன். அவள் மாறுதல் உத்திரவு இனி ரத்தாகிவிடும். என் மேல் நடவடிக்கை எடுக்கலாம்.

என்னை இருக்கச் சொல்லிவிட்டு கோப்புடன் அவர் நகர்ந்தார். திரும்பி வரவும் , “சரோஜாவின் மாறுதல் உத்திரவு ரத்தாகிவிட்டது. இயக்குனர்
கையெழுத்து போட்டுவிட்டார்கள் “ என்றார்.
இப்பொழுது நான் செய்த தவறு உறுத்திய்து. மீண்டும் நேராக அதிகாரியின் அறைக்குச் சென்று மன்னிப்பு கேட்டேன். அவர்கள் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு. “இப்படியா உணர்ச்சிவயப்பட்டு பேசுவது?”என்றார்கள். மீண்டும் மன்னிப்பு கேட்டேன்.

‘’சீதாலட்சுமி, ஒரு பெண்ணுக்குக் கஷ்டம் என்றால் எப்படி துடித்துப் போகின்றீர்கள்? அது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் உங்களுக்கு ஒரு அறிவுரை. நிதானம் இழக்காதீர்கள். உங்கள் உத்தியோகம் போனால் உங்கள் குடும்பநிலை என்னவாகும்? வேகம் இருக்கலாம். கொஞ்சம் விவேகத்துடனும் நடங்க’

அவர்கள் சொன்ன அறிவுரைகள் சரியானவை. எனக்கு நேரில் அறிவுரை கூறியதுடன் சரி. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

எந்தப் பணியில் இருந்தாலும் ஒருவர் உணர வேண்டியது. உண்மையாக உழைக்க வேண்டும். அதற்கு எப்பொழுதும் மதிப்புண்டு.

சரோஜாவின் பிள்ளைகள் நன்றாகப் படித்து இப்பொழுது மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்த சரோஜா இன்று மாம்பலத்தில் பங்களா வாசம் செய்கின்றாள். அவள் என்னை நினைப்பதில் அர்த்தமுண்டு.

பத்திரிக்கை
அதென்ன அப்படி அதன் மேல் நம்பிக்கை
வாடிப்பட்டியில்தான் அதற்கு விதையூன்றப்பட்டது.
பத்திரிகையுலகில் என்னுடைய உலாவைப் பார்ப்போம்.

ருத்ரதுளஸிதாஸ்

சமூகக்கல்வி அமைப்பாளராக வந்து சேர்ந்தார்.
இவர்தான் என்னைப் பத்திரிகையுலகத்துக்கு முதலில் அழைத்துச் சென்றவர். இவர் எழுதிய கதைகள், கவிதைகள் அப்பொழுது பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன.

இவரின் இன்றைய நிலை தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. 47 புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். இப்பொழுது இரண்டு தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏழு மொழிகள் தெரியும். மொழிபெயர்ப்பு நூல்கள் நிறைய எழுதியிருக்கின்றார். சாகித்ய அக்காடமி ,முதல் பல பட்டங்கள் பெற்றிருக்கின்றார். இப்பொழுது புதுச்சேரியில் இருக்கின்றார்.

எங்கள் வட்டத்தில் மாறாது நின்று கொண்டிருப்பவர் இவர் ஒருவர்தான்

வாடிப்பட்டியைப் பார்க்கலாம்
துளசி ஓர் காந்தீயவாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை ருத்ரப்பசாமி அவர்கள் அக்காலத்திலேயே பேரும் புகழுடன் இருந்தார். ஓர் மாவட்ட கல்வி அதிகாரி. எளிமையாக இருப்பார்

ஒரு முறை பள்ளிக்குத் தணிக்கைக்காகப் பள்ளிக்குச் சென்றிருக்கின்றார்.
பள்ளியில் ஒரே பரபரப்பு. இவர் எளிமையாகச் சென்றவுடன் பியூன் இவரை யாரோ என்று நினைத்து , “ஹெட்மாஸ்டர் வேலையாக இருக்கின்றார். உட்காருங்கள் “ என்று ஒதுக்குப்புறமாக உட்கார வைத்துவிட்டான். தலைமை ஆசிரியர் வெளியே வந்தார். எப்பொழுதும் சரியான நேரத்தில் செயல்படும் மாவட்ட அதிகாரி வரவில்லையே என்று
வெளியில் பார்க்க வந்தார். இவரைக் கண்டவுடன் பதறிப்போனார். பியூனைத் திட்டத் தொடங்கவும், “அவன் அவனுடைய கடமையைச் செய்தான் என்னை நான் அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை இது என் தவறு” என்று தன் குற்றத்தைக் கூறினார். வீட்டிலும் வெளியிலும் வாழும் இன்னொரு காந்தியாக இருந்தார்.

அவருடைய பிள்ளை என்பதற்குத் தப்பாமல் துளசியும் காந்தீய வாதியாக அமைதியான தோற்றத்துடன் இருப்பார்.

வாடிப்பட்டியில் நான் புயல் என்றால் அவர் தென்றலாக இருந்தார்.
ஏற்கனவே நூற்றுக் கணக்கன கதைகள் எழுதிய சோம மகாதேவன் இருந்தார். ஆனால் இவர்தான் என்னைக் கட்டாயப் படுத்தி எழுத வைத்து, அக்கதையினை என்னிடம் வாங்கிப் பத்திரிகை அலுவலகத்திற்கும் அனுப்பிவைத்தார்

என் முதல் கதை பிரசுரமானது
உயிர்மேல் ஆசை
வெளிவந்த பத்திரிகை பிரசண்டவிகடன்
அக்காலத்தில் பல பெரிய எழுத்தாளர்கள் உட்பட எழுதும் முயற்சியில் முதல் நுழைவாயில் பிரசண்ட விகடன்.
என் முதல் குழந்தையைப் பார்க்கவும் மெய் சிலிர்த்துப் போனேன்.
என் எழுத்துலகப் பயணம் தொடங்கியது
எனக்கு மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. ஆனால் கவிதைகள் அதிகம் எழுதவில்லை. ஆனாலும் ஒரு சில பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.
என்னைப்போல அவரால் உருவாகப்பட்ட எழுத்தாளர் ஓ.எஸ். கிருஷ்ணமூர்த்தி. அருள்சுடர் என்ற பெயர்களில் கதைகள் எழுதி வந்தார். இன்னொருவரும் சேர்ந்தார். சங்கரசுப்பு, இராசமாரப்பா என்ற பெயரில் எழுதிவந்தார். அடுத்து பாலுரெட்டி என்பவர் ஒரே ஒரு கதை மட்டும் எழுதிக்  எங்களுடன் ஒட்டிக் கொண்டார். ஆக வாடிப்பட்டியில் நாங்கள் ஆறு பேர்கள் எழுத்தாளர்கள். தேனாறு என்ற கையெழுத்துப் பத்திரிகையும் ஆரம்பித்தோம்.

மாவட்ட அளவில் எங்கள் வட்டத்தில் நா. பார்த்த சாரதி இருந்தார்.
சுவாரஸ்யமான பல செய்திகள் இருக்கின்றன. அடுத்துப் பார்க்கலாம்

தொடரும்

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த நேரத்தில் வந்த தைரியமும், மறுபடியும் அதிகாரியிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கு அவர் சொன்ன பதிலும் அருமை... "உண்மையாக உழைத்தால் எப்பொழுதும் மதிப்புண்டு" 100 % உண்மை...

ருத்ரதுளஸிதாஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

தொடர்கிறேன்...

Ranjani Narayanan said...

அன்புள்ள சீதாம்மா,
சரோஜாவிற்காக நீங்கள் மேலதிகாரியை பகைத்துக் கொண்டு அவரது மாற்றல் உத்தரவை ரத்து செய்ய வைத்த சம்பவம் மனதைத் தொட்டது.
உங்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு உங்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்த அவரது குணத்தையும் பாராட்ட வேண்டும்.
மேலும் உங்கள் பத்திரிகை உலக அனுபவங்களைப் படிக்க காத்திருக்கிறேன்.

அன்புடன்,
ரஞ்சனி

arasan said...

உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்,
காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_4280.html) சென்று பார்க்கவும்... நன்றி...

cheena (சீனா) said...

அன்பின் சீதாம்மா - ஒரு பெண்ணுக்காக - மேலதிகாரிகளிடம் வரம்பு மீறிப் பேசி - காரியம் கை கூடினாலும் - இயல்பு நிலை பாதிக்கப் பட்டாலும் - நட்பினிற்கு உதவுவது ஒரு சிறந்த செயல் தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

இளசைப் பெயா்ஒளிர இன்றமிழ் ஒதும்
உளத்தைப் பணிந்தேன் உவந்து!

எட்டய சீா்புரத்து இன்கவிபோல் தீட்டுகிறாய்!
பட்டயம் தந்தேன் பணிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு