எட்டயபுரம் வரலாறு-04
எட்டயபுரம் எனக்குத் தாயின் மடியைப்போன்றது. மன்னர் ஆட்சியிலும் வாழ்ந்திருக்கின்றேன்; மக்கள் ஆட்சியிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
அதிலும் துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்தில் எட்டயபுரம் சுற்றிச் சுற்றி வந்தவள். அரண்மனையில் எல்லாப் பகுதிகளிலும் ஓடி விளையாடி இருக்கின்றேன்.இராஜாவின் மூத்தமகள் இளைய ராணி தங்கப்பாண்டியன் என் தோழி. இருவரும் சேர்ந்து அவர்கள் காரில் எங்கள் பள்ளிக்குச் சென்றிருக்கின்றோம்.ஆரம்பப்பள்ளியில் சேர்ந்து படித்தோம்.
அரண்மணை அந்தப்புரத்தை இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். எத்தனை அறைகள்?! ராஜான்னா எத்தனை பெண்களையும் கல்யாணம் செய்து கொள்ளலாம். நம் மாமன்னர் இராஜராஜனுக்கு 14 மனைவிகள். இராஜேந்திரனுக்கு 17 மனைவிகள். இந்த இராஜேந்திரன் எப்பொழுதும் போர்க்களத்தில் வாழ்ந்தவர். அவருக்கு எதற்கு இத்தனை மனைவிகள்? இதற்குப் பதிலை நம் கல்கி தன் கதை பொன்னியின்செல்வனில் கூறியிருக்கின்றார். சிற்றரசர்களின் வீட்டுப்பெண்களை மன்னனுக்கு மணமுடித்தால் அவர்கள் மன்னருடைய நெருங்கிய உறவைக் காட்டிக் கொள்ளலாமாம். எங்காவது பெண்ணின் உணர்ச்சியை நினைத்துப் பார்த்திருப்பார்களா? அதிகாரத்துக்கு ஆசைப்படும் இந்த ஆண்களை நினைத்தால் கோபப்பட்டுக் கொள்வேன்
அரண்மனையில் தர்பார் ஹால் இருக்கின்றது. மாதம் ஒரு முறை மன்னர் இங்கே உட்கார்ந்து மக்களிடம் அவர்கள் குறைகளை நேரில் கேட்பார். பக்கத்தில் திவான் நிற்பார். குறை கேட்ட பின் உடனே மன்னர் குறையைத் தீர்க்கும் வழிகளுக்கு உத்திரவு போட்டு விடுவார். இப்பொழுது மக்கள் ஆட்சியை நினைத்துப் பாருங்கள். மனுக் கொடுத்தால் பதில் கிடைக்க மாதக் கணக்காகும். சில சமயங்களில் நம் மனுவே மாயமாய் மறைந்து விடும்.
மன்னரிடம் மரியாதை நிமித்தம் பழம் நீட்டும் பொழுது கையை விரித்துப் பழம் இருக்கும் கையை நீட்ட வேண்டும். மன்னர் எடுத்துக் கொள்வார். கொடுக்கும் கையால் வாங்கக் கூடாதாம். நாம் எப்படி? கொடுப்போம், வாங்குவோம். அதாவது லஞ்சப் பணம். பரந்த மனம். எனவே பாரபட்சம் நமக்குப் பிடிக்காது.
நவராத்திரி வந்தால் ஒரே கொண்டாட்டம். அதிலும் சரஸ்வதி பூஜையில் அரண்மனை ஜொலிக்கும். தங்கத்தில் சரஸ்வதி. விட்டத்தை தொடும் உயரம். அவளின் கம்பீரத்தில் சொக்கிப் போய் நிற்போம். திருவிழா வந்தால் கரகாட்டம், மயிலாட்டம். தஞ்சாவூர் செட் வந்துவிடும்.
ஒரு அறை முழுவதும் பலவித விதமான காமிராக்கள். ராஜாக்கள் எல்லோருக்கும் பிடித்தமானது போட்டோ எடுப்பது. எனக்கும் காமிரா ஆசை வந்தது. நான் வீட்டிலே அடம் பிடித்தபின் ஒரு காமிரா வாங்கிக் கொடுத்தார்கள். பாக்ஸ் கேமிரா; 25 ரூபாய். ஏதோ நிலாவைப் பிடித்துக் கொடுத்துவிட்டதைப் போன்று மகிழ்ந்து போனேன். குழந்தைப் பருவத்தின் குதூகலத்தின் தன்மையைப் பாருங்கள். பெரியவர்களானால் பேராசை வந்து விடுகின்றது. எது கிடைத்தாலும் திருப்தி இருப்பதில்லை.
அரண்மனைக்கு வெளியில் குதிரை லாயங்கள்.
ஊரில் சிவன் கோயிலும் உண்டு. பெருமாள் கோயிலும் உண்டு. மன்னர் பரம்பரை பெருமாளை வழிபடுகின்றவர்களாக இருந்தாலும் மக்களின் இறையுணர்வுகளில் குறுக்கிடுவதில்லை. உமறுப்புலவர் சமஸ்தான வித்துவானாக இருந்ததிலேயே மன்னரின் குணம் புரிந்து கொள்ளலாம்.
கோயில் என்றவுடன் நம் பாரதி நினைவிற்கு வருகின்றார். பாரதியின் வீட்டிற்கருகில் இருப்பது பெருமாள் கோயில். அங்கே போய் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கோயிலின் வெளித் திண்னையில் உடகார்ந்து பாட ஆரம்பித்து விடுவாராம். அந்த தெருவில் வந்தவர்களில் ஒருவர் அவரிடம், “கோயிலில் உட்காந்து ஏன் பாடிக் கொண்டிருக் கின்றாய்.? ‘ என்று கேட்டவுடன் உடனே பாரதி எழுந்திருந்து தெருவில் உட்கார்ந்து கொண்டாராம். பேசியவர்“கிறுக்குப்பயல்“ என்று தலையில் அடித்துக் கொண்டு போனாராம். இதை என்னிடம் சொன்னது பாரதியின் தாய்மாமன் சாம்பசிவ அய்யர். பாரதிக்குத்தான் எத்தனை பெயர்கள்?!. சின்னப் பயல். கிறுக்குப் பயல்!
பாரதி பிறந்த வீடு இப்பொழுது அவர் நினைவாலயம். அவர் உபயோகித்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. பாரதியின் நினைவு மணி மண்டபத்தில் புத்தகங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன மண்டபம் வந்த காலத்தில் அங்கிருந்த புத்தகங்களில் அதிகமாகப் படித்தவள் நானாகத்தான் இருக்கும்.
அரண்மனையில் ஓர் விருந்தினர் இல்லம் உண்டு. இங்குதான் எட்டயபுரத்திற்கு வரும் பெரியவர்கள் தங்க வைக்கப் படுவார்கள். அரண்மனை அவர்களைக் கவனித்துக் கொள்ளும். பாரதிக்கு மணி மண்டபம் கட்டும் முன்னர் அதனை ஆலோசிப்பதற்காக வந்த இராஜாஜி அவர்களும் கல்கியும் இங்கே தான் தங்கினர். கல்கி வரும்பொழுதெல்லாம் தங்குவது இங்கேதான். மன்னருடன் பேசவும் ஊர் மக்களுடன் பேசவும் வசதியாக இருந்தது. பத்திரிகையாளர் சுவாமிநாதன், கவிஞர். பா. நா. கணபதி, ஆசிரியர் கே.பி.எஸ்நாரரயணன் ஆகியோர் மண்டபம் நல்ல முறையில் உருவாக்கப் பாடுபட்டவர்கள். கட்டடம் எழும் பொழுது மன்னர் மேற்பார்வை செய்தார்.
மீசைக்காரன் பாரதிக்கு அச்சம் கிடையாது. அவர் பாட்டை அவரே பாடிக் கேட்கவேண்டும். அவர் பாடி கேட்க முடியாவிட்டாலும் அவர் மாமா அதே ஸ்தாயில் பாடிக் கேட்டிருக்கின்றேன். நமக்குள் உணர்ச்சி வெள்ளம் பெருகும். அத்தகைய மகா கவி மரணம் அடைந்த பொழுது இடுகாட்டிற்கு விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்களே சென்றனர்.
ஏன்? வெள்ளையனிடம் பயமா? சுதந்திரம் கிடைக்கும் முன்னர்தான் பாரதி மணி மண்டபம் கட்ட கல்கி பத்திரிகை மூலம் பணம் வசூலிக்கப் பட்டது. பயம் இருந்திருந்தால் விலாசத்துடன் நன்கொடை கொடுத்திருப்பார்களா? நிதி போதும் என்று அறிக்கை கொடுக்கும் வரை பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பயத்தை நீக்க ஒரு பத்திரிகை ஊன்றுகோலாக வரக் காத்திருந்தார்களா? பாரதி ரோசக்காரன்.பிடிவாதக்காரன்.சுதந்திரம் ஆகஸ்டில் கிடைத்தது. அதன் பின்னரே அக்டோபரில் மண்டபம் திறக்கப்பட்டது. சுதந்திரம் வரும் முன்னரே ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடியவன்
பாரதியின் நினைவு மண்டபம் விழாக்கோலம் காணும் பொழுதெல்லாம் அறிஞர்களும் அரசியல்வாதிகளும், இயல், இசை, நாடகப் பெருமக்களும் வந்தவண்னம் இருக்கின்றார்கள்.பெயர்களைச் சொல்ல ஆரம்பித்தால் அதுவே ஓர் பெரிய தொடராகிவிடும்.ஒருவரைச் சொல்லி ஒருவரை விட்டாலும் நன்றாக இருக்காது. எனவே பொதுவாகக் கூறி நிறுத்திவிட்டேன்.
பாரதியில் நூற்றாண்டு விழாவின் பொழுது சுமார் 100 கவிஞர்கள் பங்கேற்ற பாரதி கவிதா வேள்வி என்ற கவியரங்கல்ம் கவியோகி சுத்தானந்த பாரதியின் தலைமையிலும் 101 மகளிர் பங்கேற்ற மகளிர் கருத்தரங்கம் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தலைமையிலும் நடை பெற்றன.
1956 ஆவது வருடம் செப்டம்பர் மாதம் 8.ந்தேதி சிவானந்த ஜயந்தி நடைபெற்றது. அதற்கும் கவி யோகி சுத்தனந்த பாரதி அவர்கள் வருகை புரிந்தார். இப்பொழுதும் சிவானந்தர் வாழ்ந்த இடத்தில் சிவானந்த இடமாக மாற்றப் பட்டு பஜனைகள் நடை பெற்று வருகின்றன.
எட்டயபுரத்தில் உமறுப்புலவர் பெயரால் மாவட்டக் கிளை நூலகம் இயங்குகின்றது. எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் சோ. அழகர் சாமியால் உருவாக்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மகாகவி பாரதிக்கு வருடந்தோறும் சிறப்பாக விழா நடத்தி வருகின்றது.இவர்களுக்கு அமரர் பாரதி ஆய்வாளர் தொ. மு. சி.ரகுநாதன் தனது ஐந்து லட்சரூபாய் மதிப்புள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கி பாரதி ஆய்வு மையம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார்.கு. துரைராஜ் அவர்கள் மறைந்தவுடன் அவர் துணைவியார் இதே நூலகத்திற்கு ஆசிரியர் சேமித்து வைத்திருந்த அனைத்து புத்தகங்களையும் கொடுத்துவிட்டார்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீடசதரின் நினைவு மண்டபம் பேருந்து நிலையத்தில் அருகில் கட்டப் பட்டுள்ளது.
உமறுபுலவரின் சமாதியை சீராக்க, அழகுபடுத்த அரசு 10 லட்சம் பணம் கொடுத்துள்ளது.
ஒரு சித்தரின் சமாதியும் இருக்கின்றது.
ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை, ஜமீன் மேற்பாரவையில், பேருந்து அருகில் ஓர் சத்திரம் கட்டப் பட்டு ஊருக்கு வருகின்ற எல்லோருக்கும் இலவச உணவும் தங்க இடமும் கிடைக்க வசதி செய்யப் பட்டிருந்தது.
முருகனுடைய ஸ்தலங்களில் ஒன்றான கழுகுமலை கோவில் எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சார்ந்தது. இங்குள்ள வெட்டுவான் கோயில் என்ற குடவரைக் கோயில் உண்டு. மலை மீது சமணர்கள் தங்கிய பெரிய கோயில் உண்டு.
இவர்கள் பரம்பரைப் பெயர் எட்டப்பப் பரம்பரை.
எட்டப்பன் என்ற பெயர் குடும்பப் பெயர்.
இந்தப் பெயர் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? அது ஓர் சுவாரஸ்யமான கதை.
அலைகள் மீண்டும் வரும்
2 comments:
மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்... இக்காலத்தோடு ஒப்பிட்டு நடுவில் நீங்கள் சொல்வது சாட்டையடி! பகிர்வுக்கு மிக்க நன்றி!
மாதவிக்கு நன்றி
Post a Comment