Monday, March 19, 2012

எட்டையபுர வரலாறு -2

எட்டயபுரம் வரலாறு -2

சங்கீத உலகின் மும்முர்த்திகள்

தியாகராஜர் சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சாமா சாஸ்த்ரி

நாடக உலகின் மும்முர்த்திகள்

சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், காசிவிஸ்வநாதப்

பாண்டியன்.

மக்கள் திலகமாய்த் திகழ்ந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் நாடக

உலகில் வாழ்ந்த காலத்தில், அவருக்கு அன்பளிப்பாக தங்க மோதிரம் அளித்தவர் காசிவிஸ்வநாதப் பாண்டியன் என்பவராகும். எப்படி இது நிகழ்ந்தது? காசி விஸ்வநாதரைப் பற்றி நிச்சயம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த நிகழ்வை மறக்கவில்லை. தன் கதை எழுதும் பொழுது இதனைக் குறித்திருக்கின்றார். அதுமட்டுமல்ல மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் இவர் படத்தைத் திறந்து வைத்துப் பெருமைப் படுத்தினார். டி. கே. எஸ் அவர்கள் நாடக வரலாற்றை எழுதும் பொழுது, தன் கம்பெனி மூழ்க இருந்த தருணத்தில்

கைதூக்கிக் காப்பாற்றியவர் காசி விஸ்வநாதப் பாண்டியன் என்று குறிப்பிட்டு இருக்கின்றார். அவரைப்பற்றி நாமும் தெரிந்து கொள்ளலாமே!

எட்டயபுர மண்ணின் மைந்தர் காசி விஸ்வநாதப் பாண்டியன். உள்ளூரில் பள்ளிப் படிப்பை முடித்து, நெல்லையில் பட்டப் படிப்பைத் தொடர்ந்து,

அங்கிருந்து சென்னை சென்று ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியமும் கற்றவர். பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும். பல மொழிகள் பேசத் தெரியும். சங்கீதம்,. வீணை, ஹார்மோனியம், தபேலா மூன்றையும் முறைப்படி கற்றவர். அவர் ஒரு நாடகக் கம்பெனி தொடங்கினார். அதற்குப் பெயர் தேவராச ஜெகதீச தியட்டிரிக்கல் கம்பெனி. நாடகத் திரைச் சீலைகள் அனைத்தும் அவரே வரைந்தார். நாடகங்கள் எழுதினார். பலரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து நாடகங்களை உள்ளூரிலும் பக்கத்து ஊர்களிலும் நடத்தி வந்தார். வெளியூர் நாடக செட்டுகளையும் உள்ளுருக்கு அழைத்து வந்து நாடகங்களை நடத்தினார். அவரிடம் ஒரு பழக்கம் உண்டு. நாடகத் தொழிளாலர்களுக்குக் கடுக்கன், தங்கச் சங்கிலி , காப்பு அளிப்பார். அவர்களை அன்புடன் அரவணைத்துக் காத்து வந்தார். வெளியூரிலிருந்0து வந்த நாடக செட்டில் இருந்த எம்.ஜி. ஆர் அவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைத்ததும் அப்படித்தான். அவரது வள்ளல் தனமையைப் புரிந்தவர் எம். ஜி. ஆர் அவர்கள்.

டி. கே. எஸ் அவர்களால் நாடக கம்பெனியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து நடத்தும்படி கூறினார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியை அவரால் சமாளிக்க முடியவில்லை. அப்பொழுதுதான் காசி விஸ்வநாதன் அவர்கள் தன்னிட மிருந்த அனைத்து நாடகப் பொருள்களையும் கொடுத்து, மேலும் உதவி செய்து உயிர்ப்பித்தார். இதனை டி. கே. எஸ் அவகள் நாடக வரலாற்றில் குறிப்பிட்டிருக்கின்றார். இத்தகைய கலையார்வமும் வள்ளல் தன்மையும் கொண்டவர் யார் தெரியுமா? எட்டயபுர மன்னர்களில் ஒருவர். அவரின் முழுப் பெயர் எட்டப்பன் காசி விஸ்வநாதப் பாண்டியன்

அவரிடம் நாடகப் பற்றுமட்டுமல்ல, தேச பக்தியும் அதிகம் இருந்தது. அவர் தோற்றுவித்த திரை அரங்கின் பெயர் பாரதமாதா டாக்கீஸ். படம் ஆரம்பிக்கும் முன் முதலில் பாடப்பட வேண்டிய பாட்டு பக்கிம் சந்திரர் எழுதிய வந்தே மாதரம். ஆங்கில அரசு மிரட்டியும் பணியாது நாட்டுப்பாட்டையே இறைவணக்கமாக ஒலிக்கச் செய்தார்.

இலக்கியத்திற்குள்ள இலக்கணப்படி காப்புச் செய்யுள் கடவுள் வணக்கமாக இருக்க வேண்டும். ஆனால் நம் இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் இயற்கை வழிபாட்டைக் காப்புச் செய்யுளாக வைத்தார். மரபினை மீறி புது அத்தியாயம் படைத்தவர் அடிகளார்.

திங்களைப் போற்றுதும் ! திங்களைப் போற்றுதும்

ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் !

பூம்புகார் போற்றுதும் ! பூம்புகார் போற்றுதும் !

அடிகளாரின் வாழ்த்தும் வணக்கமும் புதியது. அரியது

நாம் இன்றும் அதை நினைத்துப் பெருமைப் படுகின்றோம். நல்லவைகளை எப்பொழுதும் போற்ற வேண்டும்.

காசி விஸ்வநாதரோ அடிமைச் சூழலில் முழங்க வைத்த நாதம்

அந்தப் பாட்டின் சில வரிகளைப் பார்ப்போம்

வந்தேமாதரம் என்போம்- எங்கள்

மாநிலத்தாயை வணங்குதும் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்

வேதியராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தினராயினும் ஒன்றே

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகலென்ன நீதி? - ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?

முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம்

பாரதியின் தமிழாக்கம். வார்த்தைகளைச் சொல்லிப் பாருங்கள்.

உணர்ச்சிகள் பொங்கி எழவேண்டும். அன்று இவ்வரிகளைக் கேட்டவுடன்

எங்கள் இரத்தம் சூடாகும். துடித்து எழுவோம். இந்தப் பாட்டு சினிமாக் கொட்டகையில் முதல் பாட்டு. நாட்டு வணக்கம்

அன்றிருந்த துடிப்பு இப்பொழுது எங்கே? அடிமை வாழ்வில் உயிர்ப்புடன் இருந்த உணர்வுகள் சுதந்திரம் கிடைத்தவுடன் மரத்துப் போய் வருகின்றதே !நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாடத் தோன்றுகின்றது.

ராஜாவும் பாரதியும் நண்பர்கள்.

அதே தியேட்டரில் காங்கிரஸ் கூட்டங்களும் நடக்கும். சுதந்திரப் போராட்டத்திற்கு நிறைய பொருளுதவியும் செய்திருக்கின்றார்

எட்டயபுரம் என்றால் பாரதி மட்டும் தான் பலருக்கும் தெரியும். அந்த வரலாற்றைக் கூறும்படி என் மனம் எனக்குக் கட்டளை இடுகின்றது.

நான் வாழ்ந்த பூமி.. ஓடிப் புரண்ட கரிசல்மண். என் நினைவலைகளில்

என்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சும் வரலாற்று உணமைகளை நான்

மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது இயல்புதானே !?

எட்டயபுரம் வரலாறு

எட்டப்ப காசிவிஸ்வநாதப் பாண்டியன் எட்டயபுர மன்னர்களில் ஒருவர்.

அவர் மட்டுமல்ல, அவர் பரம்பரையில் எல்லோரும், புலவர்கள், இசை மேதைகள், கலைஞர்கள் இவர்களுக்குப் புரவலராக இருந்திருக்கின்றனர்.

மதன் கூறிய குற்றச் சாட்டு இங்கு பொருந்தாது. இங்கு பாடிய புலவர்கள்,

பாடகர்கள் இவர்களின் வரலாற்றைப் பார்க்கலாம்.

எட்டயபுர ஆஸ்தான கவிஞர்களில் ஒருவர் கடிகை முத்துப் புலவர். இவருடைய மாணவர் உமறுப்புலவர். ஆம், இஸ்லாமியர்களின் பெருமைக்குரிய காவியம் தீட்டியவர் உமறுப்புலவர். இவரும் பின்னர்

எட்டயபுரம் சமஸ்தானப்புலவரானார். இவர் சரிதையை பாவலர் செ.ரா.

சோமசுந்தரமணியக்காரர் எழுதியுள்ளார். டாக்டர். மா. ராசமாணிக்கனார் முன்னுரையுடன் கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சிறப்புப்பயிரமும் அப்புத்தகத்தில் காணலாம். நான் சொல்லப் போகும் செய்தி இதன் அடிப்படையில்தான்.

உமறு சிறு வயதாக இருக்கும் பொழுதே கடிகை முத்துப் புலவரிடம் மாணாக்கனாகச் சேர்ந்தார். அவருக்கு 12 வயதாக இருக்கும் பொழுது

ஓர் அதிசய நிகழ்ச்சி நடந்தது.

வடக்கேயிருந்து அமிர்த கவி என்ற ஓர் புலவர் மன்னரிடன் வந்து தன் கடகத்திற்கு எதிர்ப்பாட்டு பாடும் புலவரை அனுப்பச் சொன்னார். கடிகை முத்துப் புலவர் உடல் நிலை அப்பொழுது சரியில்லை. சிறுவன் உமறு தானே போட்டிக்குச் செல்வதாகக் கூறவும் கவலையிருப்பினும் நம்பிக்கையுடன் தன் சீடனை அனுப்பினார்.

போட்டி இதுதான். அமிர்தகவி தன் கடகத்தைத் திருகியேற்றுவார். அது பாடும் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு பாட வேண்டும். கடகம் பாடவும் உமறு எழுந்து வந்துஎழுத்தாணியையும் ஏட்டையும் மேசை மேல் வைத்தார்.

எழுத்தாணி துள்ளி எழுந்து பதில்பாட்டு பாடியது. இதனை அவையில் வாசிக்க, கடகம் படீரென்று வெடித்தது. இதனைக் கண்டு அஞ்சிய வட திசைப் புலவர் தமது விருதுகளை உமறுவின் முன் வைத்துத் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். இந்த போட்டியைக் காண இராமனாதபுர மன்னர் சேதுபதியும் அவரது அமைச்சர் சீதக்காதி மரைக்காயரும்

வந்திருந்தனர். உமறுவின் திறமையைப் பார்த்த சீதக்காதி மரைக்காயர்

உமறுவை நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை எழுதக் கோரினார்

தெய்வ அருளில்தான் சிறுவனால் அப்படி பாட முடிந்தது என்று மக்கள் பேசினர். இந்தப் பாடலில் மட்டும் எட்டப்ப மன்னரின் குறிப்பு வந்திருக்கின்றது. சீறாப்புராணம் எழுதி அரங்கேற்றிய பிறகு மீண்டும் எட்டயபுரம் திரும்பி வந்து அரசவையில் சமஸ்தானப் புலவரானார்.. அவர்

சமாதி எட்டய புரத்தில் இருக்கின்றது. ஒளரங்கசீப் காலத்தைச் சேர்ந்தவர்

உமறு புலவர்.

கடிகை முத்துப் புலவர் மட்டுமல்ல, நாகூர் முத்துப் புலவரும் கீரைமஸ்தான் புலவரும் எட்டயபுரத்தில் வாழ்ந்தவர்கள்.மன்னர்

வைணவ பக்தராக இருப்பினும் மத நல்லிணக்கம் கொண்டவர்.

உமறுப்புலவர் சமஸ்தானப் புலரவராக இருந்ததுவே மன்னரின்

குண நலனைக் காட்டுகின்றது.

இன்னொரு புலவர் நாம் எல்லோரும் அறிந்த பாரதி. வணங்காமுடிப் புலவன். நினைப்பததைத்தான் எழுதுவார். அவர் பிறந்த வீடும் , அவர் நினைவாக எழுந்த மணி மண்டபமும் எட்டயபுரத்தில்தான் இருக்கின்றன

எட்டயபுரத்தின் ஆஸ்தானக் கவியாகக் கொஞ்ச காலம் இருந்தார். அவருக்கு பாரதி பட்டம் கிடைத்தது எட்டயபுர மன்னன் தாத்தா

மஹாராஜா காலத்தில்தான்.

தாய் மொழி தெலுங்கானாலும் தமிழ் கேட்டு இன்புறும் பரம்பரை. தமிழ்

போற்றிய புரவலர்கள். புலவர்களுக்கும் இசை வல்லுனர்களுக்கும் கலைஞர்களுக்கும் தாய் வீடு மன்னரின் இல்லம்.

அலைகள் இன்னும் வரும்

No comments: