Sunday, March 11, 2012

நினைவலைகள் 11

நினைவலைகள் -11

.1957 - சுதந்திரம் பெற்று பத்தாண்டுகள் கழிந்து விட்டன. எப்படி இருக்கின்றோம்? ஊன்றிப் பார்க்க வேண்டியது நம் வரலாறு.

.

பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் 32 வட்டாரங்கள் இருந்தன. அவைகளில் ஒன்றுதான் வாடிப்பட்டி வட்டாரம். மதுரையிலிருந்து 16 மைல்கள் (அப்பொழுது மைல்கள் என்றுதான் கூறுவோம்) தூரத்தில் மதுரை திண்டுக்கல் பாதையில் அமைந்திருந்தது. ஊழியர்களின் அமைப்பு முன் சொன்னதே தான். நான் வேலையில் சேர்ந்த பொழுது

சமூகக்கல்வி அமைப்பாளர் ஆண் பதவி காலியாக இருந்தது. இரு பொறுப்புகளும் நானே பார்த்தேன்.

என் அணுகுமுறையைப் பார்க்கலாம்.. ஒரு மாலைப் பொழுதில் ஒர் கிராமம் சென்றேன். அதுதான் முதலில் செல்லும் நாள். எனக்கு யாரையும் தெரியாது. வயலிலிருந்து இன்னும் பலர் திரும்ப வில்லை. நடமாடிக் கொண்டிருந்த சிலர் என்னை வியப்புடன் பார்த்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் அப்பொழுதுதான் பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்தார்கள். அம்மா வந்து சமைக்க வேண்டும். இரவில்தான் சுடு சோறு கிடைக்கும். எனவே குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே போய்க் குழந்தைகளுடன் பேச்சு கொடுத்தேன். சீக்கிரம் நண்பர்களாகி விட்டனர். அங்கே இருந்த ஓர் மரத்தையொட்டி மேடொன்று இருந்தது. அதில் போய் உட்கார்ந்து கொண்டு கதைபேச ஆரம்பித்தேன்

புதியவளின் வருகை, வந்தவுடன் சிறு பிள்ளைகளுடன் பழகுவதைப் பார்க்கவும் பிள்ளை பிடிப்பவளோ என்ற சந்தேகம் வந்திருக்கலாம். அவர்கள் முகபாவம் சரியில்லை.. அவர்களில் ஒருவர் அருகில் வந்து “நீங்க யாரும்மா?” என்று கேட்டார்.

“.நான் உங்க ஊர் எஸ்.இ.ஓ அம்மா ‘ என்று சொல்லி அலுவலகம் பற்றியும் கூறவும். அவர்கள் மகிழ்ச்சியுடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். ( Short form of social education organiser) இப்பொழுது பிள்ளைகளைப் பாடச் சொன்னேன். பாடினார்கள். என்னைப் பார்த்து “டீச்சர் நீங்களும் ஒரு பாட்டு பாடுங்களேண் “ என்று கேட்டார்கள். இந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்தேன். தயங்காமல் “ முருகா நீ வர வேண்டும் “ என்ற பாட்டைப் பாடினேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. இன்னொரு பாட்டையும் பாடினேன். பாட்டை நிறுத்தி அவ்வூர் பிரச்சனை களை யதார்த்தமாகக் கேட்பது போல் பேச்சைத் தொடங்கினேன்

இருட்ட ஆரம்பித்தது. யாரோ ஒருவர் ஹரிக்கேன் லைட் கொண்டு வந்து வைத்தார். மின் இணைப்பு இன்னும் அவர்கள் ஊருக்கு வரவில்லை. வேலைகளிலிருந்து பெண்களும் ஆண்களும் திரும்ப ஆரம்பித்தனர். பெண்மணிகள் சமைக்கப் போனதால் ஆண்கள் தான் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். சில பிரச்சனைகளின் தீர்வுக்கு வழிமுறைகள் கூறினேன். சிறுவர்கள் வீட்டிற்குப் போக ஆரம்ப்பித்தனர். சிறிது நேரத்தில் சில பெண்கள் வந்தனர். . பெண்களிடம் அவர்கள் குடும்பங்களைப் பற்றியும் , ஊரில் இருக்கும் வசதிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன்.

ஒருத்தி என்னிடம் அவர்கள் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தாள்.. உடனே, “ எங்க வீடுகள்ளே சாப்பிடுவீங்களா? என்ற ஒரு கேள்வியும் கேட்டாள்

“யார் வீட்டிலும் நான் சாப்பிடுவேன். கவிச்சை மட்டும் சாப்பிட மாட்டேன்”என்றேன். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. இன்னொருத்தி “எங்க வீட்லே காய்கறிச் சமையல்தான் எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க “ என்று அழைத்தாள். விருந்தோம்பல் பண்பு இன்னும் போகவில்லை. ஆனால் சாதிஉணர்வு மட்டும் வேரூன்றி இருந்தது. அதனையொட்டிய பயமும் தெரிந்தது.அய்யாவை நினைத்துக் கொண்டேன்.

பல வீடுகளுக்குச் சென்று சில நிமிடங்கள் இருந்து பேசினேன். எல்லோருக்கும் சந்தோஷம். கடைசியில் சாப்பிடக் கூப்பிட்டவள் வீட்டிற்குச் சென்றேன். ஒரு தட்டைக் கழுவி எடுத்து வந்தவள் தயங்கி, ..

“ அம்மா, இலை இல்லை. எங்க தட்லே சாப்பிடுவீங்களா? நல்லா கழுவிட்டேன் “ என்று அவள் கூறவும் என் மனம் வாடியது.

ஏ சமுதாயமே, என்ன கொடுமை. மனிதன் பிறக்கும் பொழுது சாதி இல்லையே, இந்தக் கொடுமை எப்பொழுது, எப்படி நேர்ந்தது?

மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதமே கிடையாத பொழுது சாதி மட்டும் எப்படி வரும்?

“ நான் சாப்பிடுவேன். எனக்கு சாதி கிடையாதும்மா ?” என்றேன். முகம் மலர்ந்து உணவு படைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இன்னும் சில பெண்கள் வந்தார்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன். இருட்டிவிட்டதால் பஸ்ஸில் ஏற்றி விட ஊர்க்காரர்கள் சிலர் வந்தனர் . இன்றைய சம்பவம் காட்டிய செய்தியைப் பார்ப்போம்.

சுதந்திரம் வந்து பத்தாண்டுகள் கழித்தும் மின் இணைப்பு இல்லாத கிராமங்களா, அப்படியென்றால் வளர்ச்சிப் பணிகள் சரியாக நடைபெறவில்லையா என்ற ஐயம் ஏற்படலாம். விளக்கம் கூற வேண்டியது என் கடமை.

சுதந்திரம் கிடைத்து ஆட்சியில் உட்கார்ந்தவர்கள் சுதந்திரத்திற்காகப் போரடியவர்கள். கிடைத்த சுதந்திரத்தைப் பாதுக்காக்க வேண்டுமென்ற அக்கறையுடன் என்னென்ன அடிப்படை தேவைகள் எதுவோ அவைகளில் கவனம் செலுத்தினார்கள். மதிப்பிற்குரிய டாக்டர். அம்பேத்கார் அவர்கள் சட்டங்கள் எழுதினார். அவர் யார்?. ஒரு தலித். அந்த அறிவு ஜீவியின் படைப்புதான் இன்றும் நாட்டில் இருக்கின்றது. .

சட்டங்கள் தீட்டிய பின்னர் வளர்ச்சித் திட்டங்களில்தான் கவனம் செலுத்தினர். அணைகள், பாதைகள், மருத்துவமையங்கள், பள்ளிகள் போன்றவைகள் கட்டப்பட்டன. தேவைகள் அதிகம் . மக்கள் கூட்டமும் அதிகம். ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலை என்பார் முன்னால் ஜனாதிபதி, அந்த நாள் தமிழ் நாடு தொழில் அமைச்சர் திரு வெங்கட்ராமன் அவர்கள். மின்னிணைப்பும் கொடுத்துக்கொண்டு வந்தனர். ஆனால் தன்னிறைவு பெறவில்லை. மின்னுற்பத்தி போதவில்லை. இன்றும் அதில் கஷ்டப் படுகின்றோம். ஒரு பக்கம் மின் உற்பத்தி அதிகப்படுத்தும் முயற்சி, இன்னொருபக்கம் தேவைகள் அதைவிட வேகமமக வளர்கின்றது. ஆக. அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது..

மொழிவரியாக மாநிலங்களைப் பிரித்தவர்கள் நதிகளைத் தேசிய உடமையாக்கியிருந்தால் இன்று தமிழகம் தண்ணீருக்காக அல்லல்பட வேண்டியிருந்திருக்காது.

மனிதன் ஒரு பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் சுலபத்தில் மாற்றமாட்டான். முடியாது. விவசாயம் மிகவும் இன்றியமையாதது. உற்பத்தியை அதிகப் படுத்த, நாத்து நடுவது முதற்கொண்டு ஜப்பானீய முறை என்ற புதிய உத்திகள், புதிய உரங்கள் அரசு பரிந்துரைத்தன. மாடுகள், கோழிகளில் உயர் சாதி கொடுத்து கலப்பினம் உருவாக்க உதவி செய்தனர். கூட்டுறவு முறையின் முக்கியத்துவத்தை உணரச் செய்து அதன் மூலம் ஒருங்கிணந்த பல திட்டங்கள் உருவாக்க முனைந்தனர். இவைகளீல் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட பயிற்சி முகாம்கள் மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் நடந்தன. அதிகாரி முதல் எல்லோரும் வந்து பயிற்சி கொடுக்க வேண்டும். சிலர் கிராமத்திலேயே தங்க வேண்டும். வசதிகளை எண்ணித் தயங்க முடியாது. பள்ளியின் தரையில் அல்லது பெஞ்சுகளில் படுத்துக் கொள்வோம். ஒரே அறையில் ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கம் என்று தங்குவோம்.

முக்கியமான ஒரு தகவலை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்று பாதை போட வேண்டுமென்றால், பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டுமென்றால் அரசு பாதிப்பணம் தான் கொடுக்கும். மீதிப் பாதிக்கு அந்த ஊர்மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். என்ன அருமையான விதிகள் இருந்தன!. இதனால் இருந்த பயன்களைப் பார்ப்போம். அன்று இலவசங்களைத் தேடவில்லை

கூலிவேலைக்கு மக்களே வேலை செய்யலாம் இதற்குப் பெயர் ‘சிரமதானம்”.மண் சுமக்க, கல் சுமக்க எல்லோரும் வருவார்கள். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை கலந்து கொண்டு மண் சுமப்பார்கள். அங்கே சாதி, மதம், மொழி, அந்தஸ்து எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோரும் ஓரினம். ஒன்றாக உழைத்தோம். அய்யா பெரியாரின் முழக்கம் அங்கும் உண்டு. காங்கிரஸ் கட்சி, திராவிடக்கட்சி, திராவிட முன்னேற்றக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் இருந்தன. ஆனால் பொதுப்பணியில், அந்தப்பிரிவினைகள் பாதிப்பை உண்டாகவில்லை. எல்லோருக்கும் தங்கள் ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் இருந்த ஒருமித்த உணர்வு அன்று நல்ல காரியங்களின் பொழுதும் இருந்தது. ஊர் நன்மைக்கு வசூல் செய்யும் பணத்தில் கையாடல் செய்யாத பண்பு இருந்தது. ஏன் இப்பொழுதும் எல்லைப்புரச் சண்டைகள் யுத்தமாக மாறும் பொழுதும் ஒன்று படுகின்றோம். மற்ற நேரங்களில் முரண்பாடுகள்.

சுதந்திரப் போராட்டத்தின் பொழுது எப்படி தங்களிடம் இருப்பதைப் பொது நன்மைக்காகக் கொடுத்தார்களோ அதே போல் திராவிடக் கட்சிகள் வளர்ந்த பொழுதும் தங்களிடம் இருக்கும் பாத்திர பண்டங்களைக் கூட அடகு வைத்துச் சோறு போட்ட குடும்பங்களை நான்பார்த்திருக்

கின்றேன். முதலில் அடிமைத்தனம் போக்கத் துடித்தோம். அடுத்து சாதி என்ற கொடுமையிலிருந்து விடுபடும் எழுச்சியில் ஒன்று படும் உண்மையை உணர முடிந்தது. அய்யா அவர்களோ அல்லது அறிஞர் அண்ணா அவர்களோ ஊருக்கு வந்தால் கூட்டம் வரும் அப்பொழுது வருகின்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இல்லாதவர்களும்

வள்ளல்களானார்கள்.

அரசியலில் வசைபாடுதலை நிறுத்த முடியாது. குறை கூறாமலும் இருக்க முடியாது. அதுதான் அரசியல். ஆனால் ஒரு கட்சி, கட்ட ஆரம்பித்த கட்டடம் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரவும் அது பூர்த்தி செய்யபடாமல் நிறுத்தப்பட்டு மொட்டை கோபுரமாக நிற்கின்றதே, அவைகள் அவலச் சின்னமாகத் தெரியவில்லையா? இது ஓர் உதாரணம்தான்.எல்லா இடங்களிலும் இப்படி என்று கூறவில்லை. இதே போல பல திட்டங்கள் குறைப்பிரசவமாகி விடுகின்றன.மக்களின் வரிப்பணம் போவதுடன் மக்களுக்குத் தேவையானதும் கிடைக்காமல் போய்விடுகின்றதே, இதை அரசியல்வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும்

அரசுப் பணியில் இருப்பவர்களுக்குக் கட்சி கிடையாது. கூடாது. யார் திட்டம் போட்டாலும் அக்கறை யுடன் செய்து முடிக்க வேண்டியவர்கள்.. வளர்ச்சிப் பணிகள் ஏதாவது காரணங்களால் முடங்கும் பொழுது எப்படி எடுத்துச் சொல்ல வேண்டுமோ, ஏற்படும் விளைவுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அரசுப் பணியாளர்கள் அரசியல்வாதிகளாகக் கூடாது. எந்த அரசு வரினும் அவர்கள் போடும் திட்ட்ங்களை நிறைவேற்றுவதுதான் அவர்கள் கடமை.

மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனப் புழுக்கம் அதிகமாகி யாரை வெறுக்கின்றோமோ அந்த வெறுப்பு ஆழமாக மனத்தில் பதிந்துவிடுகின்றது.நல்லவர்கள் வெறுப்பைத் தேக்கிப். பேசாமல் ஒதுங்கக் கூடாது. சமுதாயம் நன்றக இருக்க, நடுநிலையுடன் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். பயமோ தயக்கமோ கூடாது. எப்படி? அவர்கள் தான் ஒருமித்துக் கூடி வழி காண வேண்டும்.

நடக்கும் தவறுகளுக்கு எல்லோருக்கும் பங்குண்டு.

அரசு, அரசியல், மக்கள் மூவரும் இணைந்ததுதான் சமுதாயம்

சுதந்திரம் கிடைத்தவுடன் பணிகளை அக்கறையுடனும் , பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் தான் ஆரம்பித்தோம். ஆனால் நாளாக நாளாக எல்லாம்

தேய்வு நிலை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டன. இத்தனை சூழ்நிலையிலும் சிலவற்றில் வளர்ச்சிகள் இருக்கின்றன. நம்மிடையே நம் முன்னோர்கள் விதைத்த , வளர்த்த சில திறமைகள் , குணங்கள் இன்னும் துணைபுரிகின்றன. என்று முற்றிலும் அவைகளையும் நாம் அழிக்கின் றோமோ அன்று நாம் நாமாக இருக்க மாட்டோம். இந்த வேதனையைக் கண்ணீருடன் சொல்லுகின்றேன்

வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

அலைகள் மீண்டும் வரும்

பிழைத்திருத்தம். முன் பகுதியில் திருமதி செளந்திரம் ராமச்சந்திரன் என்ற பெயரை திருமதி சவுந்திரராஜன் என்று குறிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன்

1 comment:

அமர பாரதி said...

தொடருங்கள் அம்மா. உங்கள் வலைப் பூவை இன்றுதான் பார்க்க நேர்ந்தது. பதிவுகள் அருமை. உண்மையான ஆதங்கத்துடன் நாட்டில் நடந்த மாற்றங்களை எழுதியிருக்கிறீர்கள். அதாவது கண் முன்னே லஞ்சமும் ஊழலும் பெருகிய சீரழிவைப் பார்த்திருக்கிறீர்கள்.