Tuesday, May 8, 2012

நினைவைகள் -13


நினைவலைகள்  -13

விரியும் அறிவுநிலை நாட்டுவீர் -அங்கு
 வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் -நல்ல
 தீரப் பெருந்தொழில் பூட்டுவீர்

வீட்டுப் பொந்துக்குள் ஒழிந்து கொண்டால் வீரப் பெண்ணாகிட முடியுமோ?பாரதி உள்ளுக்குள் வாழ்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றான் அவன் இன்னும் சொல்லுகின்றான்

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
  பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
  முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

அவன் தாலாட்டில் வளர்ந்தவள் நான்.
பாவம் இந்த மக்கள்!. புதிதாகக் கண்டால் மிரளுகின்றார்கள்.
வதந்தி! அது தீயெனப் பரவும். கிசு கிசுவிற்கு தனிச் சுவை. அதிலும் அடுத்தவனைபற்றி கேள்விப்படும் பொழுது ஒர் உற்சாகம்! வம்பு பேசுகின்றவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தமும் சீராகுமாம்.. ஆனால் அவர்கள் பேசும் வம்புத் தீ அடுத்தவர்க்குப் பாதிப்பை, அவமானத்தை உண்டு பண்ணுகின்றதே! விஷயத்திற்கு வருகின்றேன். என்னைப்பற்றி இரு செய்திகள் கிளப்பிய புகைச்சல்

என் அலுவலகத்தில் உடன் பணி புரியும் சில ஆண்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கப்போய் விட்டேன். ஒரு பெண் இப்படி கண்ட ஆண் பக்கத்தில் உட்கர்ந்து சினிமா பார்க்கலாமா?
52 ஆண்டுகளுக்கு முன்னால் சமுதாயத்தின் பார்வை.
5400 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்!? அக்கினி பிரவேசத்தின் பொழுது ராமனின் நெருப்பு வார்த்தைகள் எனக்கு சீற்றத்தைக் கொடுத்தது. இராவணனின் பார்வைபட்டதாலே சீதையின் பத்தினித்தனம் போய்விட்டதா என்று எழுதியவள்தான் நான்.
இன்றைய சூழல் எப்படி மாறிவிட்டது?இந்த மாற்றம் தோன்ற எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்கின்றன!. ஆனால் இப்பொழுது காலச் சக்கரத்தின் வேகம் அதிகம்
 வேலைக்குச் செல்லும் பொழுது சில நேரங்களில் ஜீப்பில் செல்வோம். அதிகாரி முன்னால் உட்கார்ந்திருப்பார். பின்னால் ஆறு பேர்கள் உட்கார்ந்திருப்போம். உடல் படுகிறதே என்று சொல்ல முடியாது.
பிற ஆடவர்களுடன் வெளிச்செல்வது சமுதாயத்தால் அன்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அடுத்தது பார்ப்போம்

இன்னொரு செய்தி வித்தியாசமானது. ஒரு ஆண்பிள்ளையை நான் அடித்துவிட்டேன்.சினிமாவிற்கு நான் தனியாகச் சென்றிருந்தேன். அந்த நாளில் அதிகமாக சினிமா பார்ப்பேன். நான் வளர்ந்தது சினிமாக் கொட்டகையைச் சேர்ந்த கடைக்கருகில் தான். ஆரம்ப காலத்தில் பி. யூ. சின்னப்பா பிடிக்கும். பொதுவாகக் குழந்தைகளுக்கு சண்டை போடும் நாயகர்களைப் பிடிக்கும். எ,.ஜி.ஆர், அவர்கள், இப்பொழுது ரஜினி அவர்கள் எல்லோரும் சண்டை நாயகர்கள். . சினிமாப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் யாரோ என் சீட்டில் கால் வைத்து சேட்டை செய்வது போல் இருந்தது. பின் திரும்பி முறைத்தேன். மீண்டும் தொடல். வளையலில் கோர்த்திருந்த பின்னை எடுத்துக் குத்தினேன். கால்களை இழுத்துக் கொண்டான். ஆனால் மீண்டும் அதே சேட்டை செய்யவும் என் பொறுமை போய் விட்டது. எழுந்து திரும்பி நின்று அவனை ஓங்கி அடித்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் உடனே என்னை சமாதானப் படுத்தி உட்கார வைத்தனர். அடிபட்டவன் எழுந்து போய்விட்டான். இதுதான் நடந்தது. நான் தனியாகப் போனது முதல் குற்றம். அடுத்து ஓர் ஆண்பிள்ளையைத் தொட்டு அடித்தது இரண்டவது குற்றம்.
நான் அடக்கமில்லதவள். கெட்டவள். இதுதான் வதந்தி.

நான் பேசாமல் விட்டிருக்கலாம். வதந்தியை ஆரம்பித்தவள் நல்லவள் இல்லை. இது போன்று சிலரைப் பற்றிப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் எந்தப் பெண்ணாவது வதந்தியின் சூட்டைத் தாங்காது தன் உயிரை முடித்துக் கொள்ள நேரலாம். இவள் அடக்கப் பட வேண்டும். அதற்கு நான் தான் லாயக்கு.

என் வீட்டுத் திண்னையில் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பாதையாகத்தான் வாய்க்காலுக்குத் தண்ணீர் எடுக்கப் போகவேண்டும். அவள் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டேன். நான் கூப்பிடவும் சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள். உட்காரச் சொல்லி, அரட்டை அடித்தேன்.
திடீரென்று வதந்தி பற்றி கேட்டேன். அவளைக் குறை கூறாமல் கேட்டதால் அவள் நல்லவள் போல் மற்றவர்கள் பேசுவதாகக் கூறினாள். நானும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விடைபோல மெதுவாகப் பேசினேன் .பேசப் பேச அவள் முகம் மாறியது.
“சினிமாக்கொட்டகையிலே என்ன செய்ய முடியும் ( அந்தக்காலத்தில் இக்கால லீலைகள் கிடையாது.)நம்மூர் வாய்க்கால்கரைகளுக்குக் காலையில் மூணு மணிக்கே போறாங்களே. அங்கே போற சில பொம்புள்ளங்க எதுக்குப் போறாங்கண்னு தெரியும். ஒரு நாள் டார்ச், காமிராவுடே வருவேன்னு சொல்லு. படம் புடிச்சு ஊருக்கு காட்டுவேன். அவங்களும் சினிமாக் கொட்டகைக்கு ஆட்களை அனுப்பட்டும் நான் என்ன செய்யறேன்னு படம் பிடிக்கட்டும். ரெண்டையும் ஊர்லே காட்டலாம்.
நான் சும்மா சொல்ல மாட்டேன். மானத்தை வாங்கிருவேன். வாயப் பொத்திகிட்டு இனிமேலாவது இருக்கச் சொல்லு. இன்னொருதரம் பேசினதாக் கேட்டேன்னா நான் சொன்னபடி செய்வேன்”

அவள் பதறிவிட்டாள். அவளுடைய கள்ள உறவு வாழ்க்கை அது.
அவளைப் போல் சிலர் இத்தகைய வாழ்க்கை நடத்துவது கேள்விப் பட்டிருக்கின்றேன். இவளும் வம்பு பேசுகின்றவளா என்று தோன்று கிறதோ? பெண்களைச் சந்தித்தால் வம்பு பேசும் பொழுது கேட்க வேண்டிய நிலை. பிறகுதான் புத்தி சொல்ல முடியும்.. முகம் செத்து எழுந்தவள்,” இனிமேல் அவுங்க பேசாம நான் பாத்துக்கறேன்.  கோபபடாதீங்க “ என்று சொல்லிவிட்டுப் போனாள். இனி பயப்படுவாள்

சரோஜா அழகான பெண். இளம் விதவை. பத்தாவது வரை படித்தவள்.
அவர்கள் குடும்பங்களில் இது அதிகமான படிப்பு. அவளுடைய ஊர் ராஜபாளையம். வாடிப்பட்டியில் திருமணம். பதினெட்டில் கல்யாண்ம் இருபத்தைந்தில் கணவரைப் பறி கொடுத்தாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். எல்லாம் வார இதழ் மாத இதழ். நான் பக்கத்தில் குடி வரவும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. தினமும் வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவளுடைய நாத்தனார் கோமதி மகளிர் மன்றம் கன்வீனர். நான் வருவதற்கு முன் ஆரம்பித்த மகளிர் மன்றங்கள்.
அங்கும் பெரிய கூட்டங்கள் நடக்காது. வதந்தி வரவும் அவள்தான் பயந்தாள். அவள் கணவர் வீட்டார் என் வீட்டிற்கு வரக் கூடாது என்று தடை போட்டு விடுவார்களோ என்று அஞ்சினாள். அவளுக்காகவும்தான்
நான் அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்தது.

கூட்டுக் குடும்பம் அமைப்பு இருந்த காலம். எப்படி, எதற்காக கூட்டுக் குடும்பம் வந்தது என்று கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சமுதாயம், குடும்பம் என்ற அமைப்புகள் தோன்றியகாலம். தொழிகள் பயில கல்லூரிகள் கிடையாது. தலைமுறை தலைமுறையாகத் தொழில் செய்வார்கள் அவர்களுக்கு ஒரு பெயர் இருக்கும். அதுவே சாதி பெயராகவும் ஆகியிருக்கின்றது. சில நேரங்களில் தொழில் மாறும் பொழுது பெயரும் மாறும். எனவே வீட்டுத் தலைமைக்குக்கீழ் குடும்பம் இயங்கிக் கொண்டு வந்தது. அப்பனுக்குப் பின் பிள்ளை தொழிலை எடுத்துக் கொள்வான். இப்பொழுதும் சில இடங்களில் சில குடும்பங்கள் பரம்பரைத் தொழில் என்று தொடர்ந்து செய்வதைப் பார்க்கலாம்

சொத்தும் குடும்பப் பெயரில் இருக்கும். பெரியவர்களை சிறியவர்கள்
பாது காப்பார்கள். எனவே பிள்ளைகளைச் சார்ந்து நிற்கும் நிலை.
பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் கூட்டுக் குடும்பம் வசதியாக இருந்தது. .அந்த நாட்களில் கணவன் ,மனைவி என்று அவர்களுக்குத் தனி அறை கிடையாது. கணவன் மனைவியின் கலப்பு எப்பொழுது என்று கூட மற்றவர்களுக்குத் தெரியாது. அபூர்வமானது இந்த சங்கமம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் கூடினால் இத்தகைய பிள்ளை பிறக்கும் என்ற சாஸ்திரத்தை நம்பினர். அதற்கும் முன்னால் குழந்தை பிறப்பிற்காக மட்டுமே கூடுதல் என்றும் சொல்லி வந்தனர். சொல்லப் போனால் என் காலத்தில் கூட அப்பா, அம்மாவிற்குள் இப்படி உறவு இருக்கும், இதனால் குழந்தை பிறக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எனவே இத்தைய குடும்ப வாழ்க்கையால் கூட்டுக் குடும்பம் அமைந்ததில் சோதனை வந்ததில்லை.

இப்பொழுது நிலை என்ன? வெவ்வேறு படிப்பு. வெவ்வேறு தொழில்கள். தொழிலுக்காக ஊர்விட்டு ஊர் மாற்றம். ஊடகங்களின் வருகையால்
மன மாற்றங்கள். புலம் பெயர்ந்த வாழ்க்கையில் இல்லத்தின் மாற்றம்.
கூட்டுக் குடும்பம் சலசலக்க ஆரம்பித்து விட்டது. வீட்டுப் பெண் பேச ஆரம்பித்துவிட்டாள். அடங்கிப் போகும் குணமும் மாற ஆரம்பித்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் சண்டைகள். பொருளாதார நெருக்கடி., கணவன், மனைவி சேர்ந்து படுக்கும் பழக்கம்., எனவே இடம் பற்றாமை. பல காரணங்கள் இன்று சோதிக்க ஆரம்பித்துவிட்டன .

பாசத்திலே, பழமையின் பழக்கத்திலே தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பிற்கும், திருமணத்திற்கும் இருப்பதைச் செலவழித்து விட்டுத் திணரும் பெரியவர்கள் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பிள்ளைகளைத் திட்டுவது சரியல்ல. இது காலத்தின் மாற்றம்  கூட்டுக்  குடும்ப அமைப்பு ஆட்டம் கண்டு விட்டது. இனி என்ன செய்யப் போகின்றோம்? இன்றைய தலைமுறையைத் திட்டிக் கொண்டிருக்கின்றோம்.
இது நம் இயலாமை. இந்த மாற்றங்கள் முதியோரை மிகவும் பாதிக்கின்றது.
வருங்காலம் எப்படி இருக்கும்? இனி என்ன செய்யப் போகின்றோம்? புலம்பிக் கொண்டிருப்பதால் பிரச்சனை தீரப் போவதில்லை. சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.  எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்
பன்னாட்டுத் தொழிற்சங்கம் ஒன்றில் மகிளிர்நலக்குழு உறுப்பினராக நான்காண்டுகள் பொறுப்பேற்றிருந்தேன். பல நாடுகளில் பெண்களின் வாழ்க்கைபற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சுவிட்ஸர்
லாண்ட்டில் உள்ள ஜெனிவாவிற்குச் சென்றிருந்தேன். எங்கள் தலைவி
ஆன்பார்வொர்டு அவர்கள் ஒன்று கூறினார்கள்.
 “இந்திய கலாச்சாரத்தில் எங்களைப் பிரமிக்க வைத்தது உங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆனால் அது இப்பொழுது உடைந்துவிட்டது. வருத்தத்திற்குரியது “
மறுக்க முடியாத உண்மை. கூடு கலைந்தது மட்டுமன்றி குடும்பத்தின் அஸ்திவாரமும் பலஹீனமாகிக் கொண்டு வருகின்றது. இன்று மயக்க நிலையில் இருக்கின்றோம். மனம்விட்டுப் பேசுவோம்

அலைகள் இன்னும்வரும்


No comments: