Friday, May 18, 2012

நினைவலைகள் 15


நினைவலைகள் -15


வாடிப்பட்டி வாழ்க்கை எனக்குப் பல பாடங்களைக் கற்பித்தது. என் திறமைகள் வளரக் காரணமாயிருந்த அனுபவங்கள் என்னிடம் ஓர் பக்குவத்தையும் ஏற்படுத்தியது. யாரும் கற்றுத்தரவில்லை. தானாகவே
அமைந்தது. ஓர் குழந்தை முதலில் தவழும். பின் எழுந்திருக்க முயலும் கீழே விழுந்து, எழுந்து நிற்கப் பயிலும். ஓடுவதும் அப்படியே.  விழும் பொழுது அழும். ஓடி இலக்கை அடைந்துவிட்டால் சிரிக்கும். அப்படித்தான் நானும் சூழ்நிலையால் உருவாக்கப் பட்டேன்.

வாடிப்பட்டி வட்டாரத்தில் கருப்பட்டி கிராமம் . புதிய அனுபவங்களின் தொடக்க பூமி. அவ்வூரில் தான் நான் முதலில் நடனம் ஆடியது. என் நாடக அரங்கேற்றமும் அங்குதான். முதன் முதலில் அந்த ஊருக்கு பஸ்ஸில் போய் இறங்கினேன். தனியாகப் போயிருந்தேன் கீழே இறங்கவும் சுற்றிப் பார்த்தேன். அருகில் ஓர் பெட்டிக்கடை. அங்கே நான்கு இளைஞர்கள்  நின்று கொண்டிருந்தார்கள். நான் இறங்கவும் முதலில் வியப்புடன் பார்த்தார்கள். பின்னால் ஏதோ பேசிச் சிரித்தார்கள்


அவர்களைச் சில வினாடிகள் தான் பார்த்தேன். உடனே அவர்களை நோக்கி நடந்தேன். சிரித்தவர்கள் அதிர்ந்து போய் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகில் சென்று ஒரு சிறு தாளை நீட்டி, “இந்த விலாசத்திற்குப் போக வேண்டும் வீடு எங்கே இருக்கின்றது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.நால்வரில் ஒருவன், “டேய் மணி, இது உங்கள் வீட்டு விலாசம்டா” என்றான். உடனே மணி அதனை வாங்கிப் பார்த்து “இவங்க எங்க அம்மாதான் வாங்க கூட்டிகிட்டுப் போறேன் “என்று சொன்னான். மற்றவர்களிடம் “போய்வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு மணியுடன் புறப்பட்டேன்.  அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் ஏறத்தாழ என் வயதுதான் இருக்கலாம். நடந்து போகும் பொழுதே அவர்கள் நால்வரின் விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

பெற்றோர்கள் விவசாயிகள். பள்ளிப் படிப்பு முடிந்தபின் ஊரிலேயே இருந்து தந்தைக்கு உதவிகள் செய்து வந்தனர். குடும்பத்தில் பெரியவர்கள் இருந்ததால் இவர்களுக்கு வேலைச் சுமை குறை. கூப்பிட்ட குரலுக்கு பிள்ளை. வேலை இல்லாத நேரங்களில் நண்பர்கள் கூடிப் பேசுவார்கள்.
மணியின் வீடும் வந்து விட்டது. மணியின் தாயார் செல்லம்மாள் மாதர் சங்கத்தின் தலைவி. வீட்டுக்குள் நுழைந்து என்னை அறிமுகுகப்படுத்திக் கொள்ளவும் முகமலர்ந்த வரவேற்பு கிடைத்தது. உடனே மணியை நோக்கி அவன் அம்மா, ‘டேய் போய் செண்பகம் அக்காவைக் கூட்டியா “ என்று சொல்லவும் மணி புறப்பட்டுவிட்டான். செண்பகம் மாதர் சங்கத்தின் கன்வீனர். அந்த கிராமம் கொஞ்ச வசதியான ஊர். ஓரளவு படித்தவர்களும் இருந்தனர். வெளியூருக்குப் போய், கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பையன்களும் உண்டு. ஆனால் பெண்கள் யாரும் ஊரைவிட்டுப் போய் படிக்க ஆரம்பிக்கவில்லை.

செண்பகம் வந்துவிட்டாள் நான் அவளுடன் வீடுகள் பார்வையிடப் புறப்பட்டேன். சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்து மணியிடம்,
“மணி, உன் சினேகிதப்பசங்களை  2 மணிக்குக் கூட்டிட்டு வரியா?”என்று கேட்டேன். முதலில் அவன் விழித்தான். “கொஞ்சம் பேசணும்,உங்க ஊர்லே உங்களை மாதிரி பசங்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு நினைக்கறேன். அது சம்பந்தமா பேசணும்” என்று நான் கூறவும் அவன் முகம் மலர்ந்து “சரி “என்று கூறினான். பின் செல்லம்மா பக்கம் திரும்பி, “உங்க வீட்டு முன் வாசல்லே உட்கார்ந்து நாங்க பேசலாமா?” என்று கேட்டேன். உடனே அவர்களும் “எங்க ஊருக்கு நல்லது செய்ய வந்திருக்கீங்க. தாராளமா கூட்டி வச்சுப் பேசுங்க. சும்மா ஊரைச் சுத்திக்கிட்டு அலையறானுங்க. ஏதாவது வேலை கொடுங்கண்னு” ஆலோசனயும் கூறினாள் செல்லம்மா

என் பணிப்பட்டியலில் இது கிடையாது. இதை நினைத்து அந்த ஊருக்கு வரவில்லை. திடீரென்று தோன்றியது சொன்னேன். அவ்வளவுதான்
செண்பகத்துடன் சில வீடுகளுக்குச் சென்று பெண்மணிகளைச் சந்தித்து வழக்கம் போல் பேசிவிட்டு செல்லம்மா வீட்டிற்குத் திரும்பும் பொழுது மணி ஒன்றாகி யிருந்தது. சாப்பிட்டுவிட்டு மணியின் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். இதற்கிடையில் செல்லம்மாவிடம் ஊர் நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

இளைஞர்களின் மனப்போக்கைப் புரிந்து அவர்களின் மனித சக்தியை
எப்படி சமுதாய நலனுக்குப் பயன்படுத்த முடியும் என்று கற்றுக் கொடுத்தது கருப்பட்டி கிராமம்

மணியின் நண்பர்கள் வந்தார்கள். அவர்களின் பெயர்கள் செல்வன், ராமன், பெருமாள்.  முதலில் சாதாரணமாக அரட்டையடித்தேன். பேசப் பேச, தயக்கம் போய் அவர்களும் சரளமாகப் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது கிரிக்கெட் வளராத காலம்.  விளையாட்டுகள் பற்றிப் பேசும் பொழுது ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சினிமா பற்றிப் பேச ஆரம்பிக்கவும். உற்சாகமாக உரையாடினர். அவர்களையே என்னென்ன கிராமத்திற்குச் செய்யலாம் என்று திட்டம் தீட்டச் சொன்னேன்.

கிராமங்களில் பண்டிகைகள், திருவிழாக்கள் வரும். அத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜி நாள், பாரதியின் நினைவு நாள் என்று பல முக்கியமான தினங்கள் வரும். எனவே அவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று கூறினேன்.  குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம், அவர்களையும் சிறு கலை நிகழ்ச்ச்களில் பங்கு பெறச் செய்யலாம் . பேச்சுப் போட்டிகள் நடத்தி சிந்தனா சக்தியை வளர்க்கலாம் என்றெல்லாம் சொன்ன பொழுது மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டார்கள். அப்படியே அவர்களை சமுதாயப் பணிக்குக் கொண்டு வந்து விடலாம். வெட்டிப் பேச்சில் மனித சக்தி வீணாவதை நான் விரும்பவில்லை.
உழைக்கும் மனிதனுக்கு களைப்பை நீக்கும் வடிகால் கூத்து. உலகில்
எல்லாப் பகுதிகளிலும் வரவேற்கும் கலை கூத்து. சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் கூத்தின் வாயிலாக எளிதில் வெளிப்படுத்த முடியும்.

எப்படி இளைஞர்களுடன் என்னால் இவ்வளவு எளிதாகப் பழக முடிந்தது?
என்னைப்போன்று பலரை உருவாக்கிய பெருமை என் ஆசிரியர் கே. பி. எஸ் நாரயணன் அவர்களைச் சாரும். நான் படித்தது ஆணும் பெண்னும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடம். அதுவும் ஓர் சின்ன கிராமத்தில் இருந்த
பள்ளிக்கூடம். என் வகுப்பில் நான் ஒருத்திதான் பெண். என் வகுப்பு மாணவர்களுடன் தயங்காமல் பழகுவேன். சந்தேகம் வரின்  வகுப்பறை யில் பையனின் அருகில் சென்று கேட்டுக் கொள்வேன். கேலி, கிண்டல் கிடையாது. 65 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின் ஓர் சின்ன கிராமத்தில் ஆண், பெண் பள்ளிக்கூடத்தில் எத்தகைய ஆரோக்கியமான சூழல். பெருமையெல்லாம் ஆசிரியர்களுக்கே உரித்தாகும்

ஆசிரியர் , மாணவர் உறவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ அதற்கு அஸ்திவார
மாக ஆகும் காலம் கல்விப் பருவம். காலச் சுழற்சியில் அடிபட்ட உறவுகளில் ஆசிரியர், மாணவர் உறவும் ஒன்று

இளைஞர்களின் சங்கங்கள் என்று கருப்பட்டி, மட்டப்பாறை இரு இடங்களில்தான் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற வேண்டிய ருத்ர துளசிதாஸ் அப்பொழுதுதான் பணியில் சேர்ந்தார். இனி அவர் அப்பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். .என்னுடய மேடைப் பேச்சு, பாட்டு, நாடகம் இவைகளால் இளைஞர்களின் பற்றும் கிடைத்தது
மட்டப்பாறையில் எனக்கு வர இருந்த சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்த இளைஞர்கள் கூட்டம். இசையும் கூத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை.

காலம் எவ்வளவு மாறிவிட்டது. எழுதும் பொழுதே இக்கால நினைவுகள் வந்து மோதுகின்றன ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் மாற்றங்கள்

காலம் மாறியிருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு மனித சக்தியை ஒருங்கிணத்து ஆக்க பூர்வமான பல காரியங்கள் செய்ய இயலும்.
ஆனால் மனிதன் சுயநலப்பேயிடம் மாட்டிக் கொண்டிருக்கின்றான்.
பொருளாசைப்படுகின்றவன் மட்டுமல்ல, நமக்கு எதுக்கு வம்பு என்று தன் அமைதிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து ஒதுங்கின்றவனும் சுயநலக்காரன்தான். ஒவ்வொருவருக்கும் சமுதாய அக்கறை வேண்டும். முடிந்த ஏதோ இன்று இரண்டாவது சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும்.

இப்போது எனக்குள்ள வயதைப் பார்த்து, சிலர் என்னிடம் “ உங்களுக்கு இக்கால இளஞர்கள்பற்றித் தெரியாது” என்று கூறுகின்றார்கள். சமூக நலப் பணியில் ஓய்வுக்கு வயது கிடையாது என்பது போல் நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு எப்படி சாதி, மதம், மொழி, நாடு என்று கிடையாதோ
எல்லாவயதினர்க்கும், ஆண், பெண் என்ற இருபாலார்க்கும் செய்ய வேண்டும்.. சுவையான அனுபவம் ஒன்றைக் கூறப் போகின்றேன்

இக்கால அனுபவம்., இக்கால இளைஞர்களுடன் என் தொடர்பு, உங்களை ரசிக்கவைக்கும் காட்சிகள் காணலாம். நான் கணிணி எப்படி கற்றுக் கொண்டேன் என்பதைச் சொன்னாலே போதும்.. என் இளைஞர் படை உலகம் முழுதும் இருக்கின்றார்கள். பெரியவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. என்னுடன் அன்புடனும் அக்கறையுடனும் ஏன், ஜாலியாகவும் பழகுவது இளைஞர்கள் தான். . கொஞ்ச நேரம் கிராமத்திலிருந்து சென்னை நகர் போகலாம்.
தொடரும் 

1 comment:

ப.கந்தசாமி said...

சுவையான அனுபவங்கள்.