Monday, May 14, 2012

நினைவலைகள் -14


நினைவலைகள் -14

அந்தக்காலத்தில் பெண் படிப்பதும் , படித்த பின் வேலைக்கு வருவதும் , அதிலும்  இதுபோன்று பயணங்களுடன் கூடிய பணி செய்வதும் மிக மிகக் கடினம். வன விலங்குகள் நிறைந்த கானகத்தில் வரும் உலா போன்றது.

என்னுடன் மேரி, ஜெம்மா என்ற இரு கிராமசேவிக்காக்கள். இருவரும் காதலில் சிக்கினார்கள். உடன் வேலை பார்ப்பவர்களுடன் தான். தங்கி இருப்பதோ தனிமையில். மனத்தை மட்டும் இழக்கவில்லை, தன்னையும் இழந்துவிட்டார்கள்.ஒரு சம்பவம் கூற விரும்புகின்றேன்

மேரிக்கும் அவள் காதலன் சபாபதிக்கும் சண்டை வர ஆரம்பித்தது.
மாதாந்திரக் கூட்டம் வந்த மேரி ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்துவிட்டு இடையிலேயே சென்று விட்டாள். அந்தக் கடிதம் கிழே
விழுந்து இன்னொருவன் கையில் மாட்டியது
“உங்களை நம்பி ஏமாந்து விட்டேன். எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள். இனி உயிருடன் இருக்கப் போவதில்லை. தூக்குப் போட்டு சாகப் போகின்றேன் “இதுதான் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது

கடிதத்தை எடுத்தவன் பயந்து போய் அதனை எங்கள் அதிகாரியிடம் கொடுத்துவிட்டான். அவரும் பதறிப்போய் என்னைக் கூப்பிட்டு,
“உடனே போங்கம்மா.எதாவது செய்யறதுக்குள்ளே போய்க் காப்பாத்துங்க”
என்று பதட்டத்துடன் சொன்னார்.
“ஸார், ஒண்ணும் ஆகாது. கடிதத்தை சபாபதி படிச்சுட்டான். கடிதம் கசங்கி இருக்கு பாருங்க. கோபத்தில் கசக்கிச் சுருட்டி எறிஞ்சிருக்கான். சீக்கிரம் கூட்டத்தை முடியுங்க. இவன் நேரே அவகிட்டே தான் போவான். அவளும் இவன் வருவான்னு காத்துக் கிட்டு இருப்பா. சரியாய்டும்.”

அதிகாரிக்குப் பூரண திருப்தி வரவில்லை. எனினும் சீக்கிரம் கூட்டத்தை முடித்துவிட்டார். சபாபதி விரைந்து வெளியில் செல்வதைப் பார்த்தேன்
கதை இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மறுநாள் காலையில் சபாபதியும் மேரியும் என் வீட்டிற்கு வந்தனர்.வந்தவுடன் வாயில் கதவைச் சாத்தினான். என்னைப் பார்த்து கத்த ஆரம்பித்தான். நான் தான் அந்தக் கடிதத்தை எடுத்து அதிகாரியிடம் கொடுத்து அவன் மானத்தை வாங்கி விட்டேனாம். நிறுத்தாமல் சத்தப் போட்டு திட்டிக் கொண்டிருந்தான். என் தாயார் அழ ஆரம்பித்து விட்டார்கள் சட்டென்று இடுப்பில் மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த வந்து விட்டான். . மேரி உடனே பாய்ந்து அவனைக் கட்டிப் பிடித்து நிறுத்தினாள். அவள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் எனக்கு கத்தி குத்து விழுந்திருக்கும். நான் பயப்படவில்லை. அவர்களை உட்கார வைத்துப் பேசினேன்.மேரியின் காதலைக் கூறி சபாபதியை அவளைச் சீக்கிரம் மணந்து கொள்ளும்படி புத்திமதி கூறினேன்.இதுபோன்ற தாக்குதல்கள் என் வாழ்க்கையில் பல கண்டிருக்கின்றேன். போராளி போராட அஞ்சலாமா?

சபாபதி விரும்பினாலும் அவனால் மேரியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. இருவரும் சாதியும் மதமும் வேறு. சமூகத்தை
மீறும் துணிச்சல் அன்று கிடையாது. செய்தி பரவி விட்ட காரணத்தால்
சபாபதிக்குச் சொந்தத்தில் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள்.. ஏற்கனவே மேரியைக் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வைத்திருந்தேன். எனவே அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஜெம்மாவின் காதலும் தோல்வியில் முடிந்தது. இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டனர்.இப்படி எத்தனை எத்தனை பெண்கள் என் துறையில் அன்று இருந்தார்கள் !

நாங்கள் மூவரும் எவ்வளவு சந்தோஷமாக வேலை பார்த்து வந்தோம். தீபாவளி வந்தால் முதல் நாளே என் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அதிகாலையில் எழுந்திருந்து குளித்து முடித்து, புத்தாடை அணிந்து,
பலகாரம் சாப்பிடவுடன் மதுரைக்குப் பறந்து விடுவோம். காலைக் காட்சியிலிருந்து தொடர்ந்து நான்கு காட்சிகள் சினிமா பார்ப்போம். இரவுக் காட்சி முடியவும் மதுரை பஸ் ஸ்டாண்டிற்கு வந்து உட்கார்ந்து கொள்வோம். காலையில் 4 மணி பஸ்சில் வாடிப்பட்டி திரும்புவோம்.
உற்சாகமான வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.

எங்கள் பணியைப் பார்வையிட வரும் மேலதிகாரிகளில் சில மனித மிருகங்களும் இருப்பர். அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டமும் உண்டு. சிலர் தங்கள் கற்பை இழந்து கதறியதும் உண்டு. பெண்கள் நலம் காக்க வந்த பெண்களே தங்கள் பெண்மையை இழக்கும் பரிதாப நிலை அன்றிருந்தது. இன்று நாகரிகம் என்ற போர்வையில் பெண்மையின் சூதாட்டம் நடக்கின்றது

பெண்கள் நலனையே நினைத்து வந்ததால் குடும்[பத்தின் ஒரு பாகமான
ஆண்மீது ஏனோ மனத்தில் கோபம் இருந்துவந்தது. இப்பொழுதும் கூட இருக்கின்றது. ஆனால் வாடிப்பட்டியில் இருக்கும் பொழுது இன்னொரு அனுபவம் கிடைத்தது. அப்பொழுது முதல் கொஞ்சம் என் பார்வை நடுநிலைப் பக்கம் போக ஆரம்பித்தது. அதுவரை பெண் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்தவள் குடும்பம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். பல குடும்பங்கள் சேர்ந்ததுதானே சமுதாயம். எனவே என் அக்கறை சமுதாய நலத்தின்மேல் செல்ல ஆரம்பித்தது.

எனக்கு மாதவி என்று ஒரு தோழி. மதுரையில் அறிமுகமானோம். ரயில்வே ஆஸ்பத்திரியில் நர்ஸாகப் பணியாற்றி வந்தாள் அவள் வீடு சென்ற பொழுது எனக்கு அறிமுகமானவர் ரத்தினம். அவர் அப்பொழுது ஈரோட்டில் நல்ல பதவியில் இருந்தார். ஏற்கனவே மணமானவர். அவரிடம்
டைப்பிஸ்டாக வேலை பார்த்தது மாதவியின் அக்கா. . ஏழைக் குடும்பம்.
தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்திருக்கின்றாள். ரத்தினத்திற்கு மாதவியிடம் ஈர்ப்பு தோன்றியிருக்கின்றது. அவள் வீட்டார் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை அடிக்கடி வீட்டிற்குக் கூப்பிட ஆரம்பித்திருக்கின்றனர். அவர் பணக்காரர். அந்தக் குடும்பத்திற்க்காக நிறைய செலவழித்தார்.

மாதவியுடன் உறவு நெருக்கமானது. அவர்கள் வீட்டினரும் அதனை ஆதரித்தார்கள். அவளை நர்ஸுக்குப் படிக்க வைத்தார். இப்பொழுது வேலையும் கிடைத்துவிட்டது. மனைவியின் அனுமதியுடன் அவளை மணக்க இருந்தார். மாதவியும் அவள் வீட்டாரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டதுதான்.

ஆனால் மதுரையில் புது சிநேகிதன் மாதவிக்குக் கிடைத்துவிட்டான். எனவே ரத்தினத்தை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். கொஞ்சம் விபரம் கேள்விப் பட்டவுடன் ரத்தினம் வாடிப்பட்டிக்கு வந்தார். என்னை அவசரமாக மதுரைக்குக் கூப்பிட்டார். விபரம் சொல்ல வில்லை. மாதவி வீடு பூட்டிக் கிடந்தது. தான் வந்திருப்பதைக் கூறாமல் மாதவி வேலை பார்க்குமிடம் சென்று சாவி வாங்கி வரச் சொன்னார். நான் தனியே சென்று சாவி வாங்கி வந்து கதவைத் திறந்தேன். கட்டிலில் அவள் துணியும் இன்னொரு ஆடவன் துணியும் கிடந்தன. மேலும் இன்னொரு ஆடவனின் வருகைக்கு நிறைய சாதனங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்த ரத்தினம் ஓ வென்று அழ ஆரம்பித்தார்.பல ஆண்டுகள் பந்தம்.

மாதவி வரவும் சண்டை பெரிதானது. அவளைக் கொன்றுவிட முயற்சி செய்தார். எப்படியோ தடுத்தேன். மாதவியின் இரட்டை வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. போலித் தனம் எனக்கு பிடிக்காது. ரத்தினத்திடம் நேரிடையாகச் சொல்லிவிட்டு அவள் இன்னொருவருடன் நேசம் வைத்துக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. மன்னித்துவிடலாம். அன்று அவள்  கொடூரமாகப் பேசியதிலிருந்து, ஒரு பெண் பணத்திற்காக எப்படியெல்லாம் பேயாக மாறுகின்றாள் என்பதைக் கண்முன்னால் பார்த்தேன்.

இப்பொழுது எனக்கிருந்த அவசரப் பணி கொலையைத் தடுக்க வேண்டும். ரத்தினத்தை அங்கிருந்து கூட்டிச் சென்று விடவேண்டும். எப்படியோ முயன்று வெளியில் கூட்டி வந்து விட்டேன். அவரை மதுரையில் விட்டு வாடிப்பட்டிக்குத் திரும்ப மனமில்லை. ஏற்கனவே அவர் தவறு செய்தவர். ஓர் குடும்பம் இருக்க இன்னொரு குடும்பம் அமைக்க நினைத்தது சரியல்ல. இப்பொழுது கொலை செய்து குற்றவாளியானால் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே பாதிக்க பட்டுவிடும். அவரை அவ்வளவு எளிதில் சமாதானப் படுத்த முடியவில்லை. எப்படியோ முயன்று அவரை அவர் ஊர் பஸ்சில் ஏற்றிவிடும் வரை உடன் இருந்தேன்

பல கொலைகள் திடீரென்று ஏற்படும் உணர்ச்சி வேகத்தில் செய்வது. கொஞ்சம் தாமதித்தால் உணர்ச்சிகள் அடங்கும் பொழுது கொலை வெறியும் அடங்கி விடுகின்றது. ரத்தினமும் கொஞ்சம் கொஞ்சமாக
தெளிவடைய ஆரம்பித்தார். ரத்தினமும் மாதவியும் இருவருமே தவறு செய்தவர்கள். வீட்டுப் பெண்ணைப் பழக விட்டு ஆதாயம் தேடிய மாதவி குடும்பத்தைப்பற்றி  என்ன சொல்வது.?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளைச் செய்து விடுகின்றோம். அதன் பாதிப்பு அதிகமானால் பழியை யார் மீது, எதன் மீது போடுவது என்று மனம் அலைபாயும்.

எதிர்பார்க்காத சூழலால் எனக்கு வந்துவிட்ட பொறுப்பு. ஓர் மனிதனின்
சோதனைக் காலத்தில் அன்புடன் வழி நடத்த  உறவுகள்,நட்புகள் தேவை
ரத்தினத்தின் நட்பு ஓர் தொடர்கதை. அவரை அழிவிலிருந்து மீட்டுவிட் டேன் என்று அடிக்கடி கூறுவார். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள், இழப்புகளின் பொழுது நல்ல நண்பராக இருந்தார். ஆம் அவர் இப்பொழுது இல்லை

இந்த சம்பவத்திற்குப் பின் இரு பக்கமும் பிரச்சனைகளைப் பார்த்தேன். அக்காலத்தில் நான் உணர்ந்தது பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பவள் பெண் என்பதுதான். இருப்பினும் நான் அவசர முடிவு எடுக்க மாட்டேன். என் வேகத்தில் கொஞ்சம் விவேகம் கலந்தது. பள்ளிப் படிப்பைவிட அனுபவங்கள் கற்றுக் கொடுக்கும் படிப்பினைகள் நிறைய. நாம் தான் புரிந்து தெளிவடைய வேண்டும்.
என் பணிக்காலத்தில் இளைஞர்களையும் சமுதாயப் பணிக்குப் பயிற்றுவித்தது வாடிப்பட்டியில்தான். இளைஞர் என்று கூறும் பொழுது இப்பொழுது நான் இருக்கும் 75ஐ நினைத்துவிடாதீர்கள். அப்பொழுது எனக்கு வயது 21
தொடரும்


No comments: