Tuesday, February 5, 2013

நினைவலைகள் 21


நினைவலைகள்  - 21

நாடக அனுபவங்களை நினைத்துப் பார்க்கின்றேன்
கல்லூரி நாட்களில் நான் பங்கு கொண்ட நாடகம் இரண்டு. ஓரங்க நாடகங்கள். ஒன்று கண்ணகி வழக்குரைத்த காட்சி. இன்னொன்று வீரத்தாய். இரண்டிற்கும் வசனம் எழுதியதுடன், கண்ணகியாகவும், வீரத்தாயாகவும் நடித்தேன். மேடை நாடகங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படியே பாத்திரத்துடன் ஒன்றிப்போய்விடுவேன்

வாடிப்பட்டியில் நான் நடித்த நாடகத்தின் பெயர் மனமாற்றம். சாதாரணக்கதை ஆனால் அர்த்தமுள்ள வசனங்கள். விழிப்புணர்விற்காக
எழுதப் பட்டவை. பார்க்கும் பொழுது அது பிரச்சார நாடகமாகத் தோன்றாது. அந்த அளவில் சோம மகாதேவன் வசனங்களைக் கவனுத்துடன் எழுதுவார்.

கதைச் சுருக்கம்
ஒரு பண்ணையார். பணத்தாசை பிடித்தவர். இரக்கமற்றவர். அவரால் கிராமத்தில் பாதிக்கப் பட்டவர்கள் நிறைய. அவருக்கு ஒரு தம்பி உண்டு அவன் மனித நேய மிக்கவன். ஊருக்கு நல்லது செய்கின்றவன். நல்லதிற்கும் கெட்டதிற்கும் இடையில் நடக்கும் போராட்டங்கள். பண்னையாரின்  மனைவி இறந்து பல வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தவர், பின்னர் வயதில் சின்னப் பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவள் நல்ல குணவதி. போராட்ட அலைகளில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகின்றது. பண்னையார் திருந்துகின்றார்.அவர் இளைய மனைவியாய் நடித்தேன்

நாடகம் தொடங்கும் முன் ஓர் நடனம் ஆடுவேன். அது நாடகத்துடன் சம்பந்தமில்லாதது . உத்தமபுத்திரனில் பத்மினி ஆடிய “காத்திருப்பான் கமலக் கண்ணன் “ ஆட்டம் நான் ஆடுவேன். அக்காலத்தில் கிராமபோன்
கிராமங்களில் இருக்கும். எனவே ரிகார்டு வாங்கி, ஒலிக்கச் செய்து ஆடுவேன். உடனே ரிகார்டு டான்சரா என்ற நையாயாண்டிச் சிரிப்பா? ரிகார்டு டான்சர் என்றால்  அதற்கு நல்ல பெயர் கிடையாது. எனக்கு ரசிகர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக ஆரம்பித்தது..

கருப்பட்டியில்தான் நடனமும் நாடகமும் முதலில் அரங்கேறின. ஐந்தாவதாக வடுகபட்டி கிராமத்தில் நாடகம் போடும் பொழுது என் தாயாரைக் கூட்டிச் சென்றிருந்தேன். நாடகம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது என் தாயார் ஒன்றும் பேசவில்லை. நானும் மவுனமாக இருந்தேன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் “ஓ” என்று கத்தி அழ ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை

என்னம்மா, உடம்பு சரியில்லையா?

உடம்புக்கு வந்து என்னைக் கொண்டு போனா நன்னா இருக்குமே! இப்படி ஒரு பொண்ணைப் பெத்ததுக்கு உயிரோட இருக்கணுமா?

எனக்கு தூக்கிவாரிப்போட்டது

நான் என்னம்மா தப்பு செய்தேன்

இன்னும் என்னடி பாக்கி. எவனோ உன்னைத் தொடறான். கற்பு
போச்சேடி. உனக்கு வெக்கம் மானம் கிடையாதா?

அது நாடகம்மா

என்ன அழவோ, எங்க காலத்துலே புடவைகூட நழுவறது தப்பு,பாவம்னனு சொல்லுவோம். படிச்சுட்டா இப்படி எல்லாத்தையும் உதுத்துடணுமா ? இந்தக் கண்ராவிகளைப் பாத்துண்டு உயிரோடே இருக்கறதவிட செத்துத் தொலைக்கலாம்

நான் திகைத்துப் போய்விட்டேன். நாடகத்தில் மனைவி செத்தவுடன் பண்ணையார், மனைவியின் தலையை மடியில் கிடத்தி குமுறிக் குமுறி அழுவார். அப்பொழுது ஒரு நேரம் தான் தொடல்/ அக்காட்சி அம்மாவை
உலுக்கி இருக்கின்றது.

 இப்போ அம்மாவை சமாதானப் படுத்த வேண்டிய நிலை. நடிக்கவே கூடாது என்றார்கள். எப்படியோ பேசிச் சமாளித்தேன். “இனிமேல் ஆண்களை என்னைத் தொடவிடாமல் நடிக்கின்றேன் “ என்று வாக்குறுதி கொடுத்தேன். பின்னார்தான் அவர்கள் சமாதானம் ஆனார்கள். முழுமனத்துடன் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று உணர்வேன்.

என் மனம் சமாதானமாகவில்லை. “கற்பு”சாடலின் எதிரொலி ஓர் கதையில் இசைத்தது. பூலோகயாத்திரை என்ற கதையில் கற்புக்கு ஓர் விளக்கம் கொடுத்து எழுதினேன். கதைக்கு ஓர் சிறு பொறி போதும்..

அம்மாவைப் புரிந்து கொள்ள முடிந்தது.  என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறிச் சென்றுவிட்டார். ஐந்து வருடங்கள் வரவில்லை. அப்பா போகும் பொழுது அம்மாவிற்கு 18 வயது. எனக்கு வயது ஒன்று. என் மாமாவிற்குப் படிப்பு வரவில்லை. எனவே பாட்டியின் பராமரிப்பில் அம்மா, நான் என் மாமா இருந்தோம். .. புருஷனைப் பிரிந்து இருக்கும் சின்னப் பெண்ணைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தார்கள். அம்மா எங்கும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. வீட்டிலே இருந்து அப்பளம் இடுவார்கள். அவர்கள் உலகம் ஓர் சின்ன அறை. கோயிலுக்குப் போக வேண்டுமென்றாலும் பாட்டி அல்லது மாமாவின் துணையுடன் செல்ல வேண்டும்.

எட்டயபுரத்தில் வாழும் பொழுது கூட அயல்வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். நான் வேலைக்குப் போகவிட்டு என்னுடன் வந்து தங்க ஆரம்பிக்கவிட்டுத்தான் வெளி உலகம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் பொழுது வீட்டு வாடகை 15 ரூபாய்.
மாதத்திற்கு அரிசி உட்பட 27 ரூபாய் ஆகும். சந்தைக்குச் செல்லும் பொழுது எட்டணாவிற்கு ஒரு வாரத்திற்குக் காய்கறி வாங்கலாம். அப்பொழுது நான் கைத்தறிப் புடவைதான் உடுத்துவேன். 7 ரூபாய் முதல் 10 ரூபாய்க்குப் புடவை வாங்குவேன். அந்தக் காலச் சூழலும் வாழ்க்கையும் எளிமையாக இருந்தன, ஆனாலும் சில விஷயங்கள் புதிராக இருந்தன.

எங்கெங்கோ திரிந்து , எப்படியோ வாழ்ந்த மனிதர்கள் ஓரிடத்தில் நிலைப்பட்டுத் தனக்குள் அமைத்துக் கொண்ட விதிகள் தளர ஆரம்பித்தகாலம். சில பழக்க வழக்கங்கள் புரியவில்லை என்பதுடன்
சில பிடிக்காமல் போக ஆரம்பித்தது . இன்னும் சில, பிஞ்சு மனத்தில்
முள்ளாக தங்க ஆரம்பித்தது.

என் அப்பாவிடம் பல சிறந்த குணங்கள் இருந்தாலும், சில குணங்கள்
மனத்திற்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல. நாட்டுப் பற்றையும் ,
எளிமையும் கற்றுக் கொடுத்த  அதே மனிதரால்தான் ஆண்வர்க்கத்தின் மீது கோபமும் வளர்ந்தது.. அவருடைய அர்த்தமற்ற முன் கோபங்கள் என்னை முரட்டுப் பெண்ணாக்கியது. அவருக்குக் கோபம் வந்தால் உடனே அடிப்பார். அதே பழக்கம் என்னையும் ஒட்டிக் கொண்டது. அக்குறைகளை விட நான் பட்ட பாடு சொல்லி மாளாது. மாநில அளவில் உயர் பதவியில் இருக்கும் பொழுது கூட கோபத்தில் ஒருவனை அடித்துவிட்டேன்.

அடுத்து அம்மாவின் அசட்டுத்தனம். கோபத்தில் அம்மாவை அப்பா அடிப்பார். ஆனால் அம்மா அவரைச் சுற்றி வந்து நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்பாள். தவறு செய்பவர் ஆண். பெண் ஏன் அர்த்தமில்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும்?. அம்மாவிற்கு அப்பா ஒரு தெய்வம். அக்காலத்தில் பெண்ணுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம். . இதை நான் எழுதும் பொழுது இப்படியெல்லாம் இருக்காது என்று  இக்கால தலை முறைகளில் சிலருக்குத் தோன்றுகின்றதா?

பெற்றோர்கள் செய்யும் சில அசட்டுக் காரியங்கள் பிள்ளைப் பருவத்தில் குழந்தைகளின் மன வளர்ச்சியை எவ்வளவு பாதிக்கின்றது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்றும் எத்தனையோ வீடுகளில் தெரியாமல் நடக்கும் இது போன்ற பிழைகள் தொடர்கின்றன.

சமுதாயம் மாறத் தொடங்கிய காலத்தில் பிறந்தவள் நான். பெண்ணை அடக்கி வைத்தவனும் ஆண். அவளிடம் சுதந்திர உணர்ச்சிக்கு வித்திட்டவன் ஆண். பாரதிக்கு முக்கிய பங்குண்டு. அவன் ஊர்க்காரி
,மாறியதில் என்ன வியப்பிருக்கும்?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நாய்களுக்கு போடச் சொன்னான்.
வெட்கம் கெட்ட பெண்ணை நினைத்துப் பாருங்கள். உங்களால் ரசிக்க முடிகின்றதா? ஆண் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணுக்கு நாணம் வேண்டுமா? பெண் இப்படி கேட்பதைவிட ஆணே இப்படி கேட்கின்றான். மனிதன் பல சமயங்களில் முட்டாளாகி விடுகின்றான்.
தான் பேசுவது, செய்வது தனக்கே தீமையாகி விடும் என்று ஆரம்பத்தில் உணர்வதில்லை. நாம் போடும் பல வளர்ச்சித் திட்டங்களிலும் சில பாதகம் செய்திருக்கின்றன.

தவறு செய்வது நாம் மட்டும் தானா? கடவுளை நினைக்கின்றேன்.அவரும் தவறுகள் செய்திருக்கின்றார். நான் கடவுளை நம்புகின்றவள். ஆனலும் அவர் மீதும் கோபம் வரும். அடிக்கடி மனக் கூண்டில் அவரை நிறுத்திக் கேள்விகள் கேட்பேன். இக்குணமும் சிறு வயது முதல் ஆரம்பம். என் கதைகளில் அநேகமாக உளவியலை ஒட்டி வரும். முதல் கதையின் பெயரே “உயிர் மேல் ஆசை”. என் கதைகளில் விகடனில் முத்திரை பெற்ற கதையின் பெயர் “ ஆசைப்பந்தல் “
இப்படி மனத்தைக் காட்டி எழுதும் பொழுது கடவுளையும் வம்புக்கிழுக்க ஆரம்பித்தேன். பல கதைகளில் பரமன் நாயகராக வருவார். அவரைப் பாடாய்ப் படுத்த காட்சிகளை அமைப்பேன். அவரோ விளையாட்டாய் வந்து விட்டு என்னை நோக்கி ஒரு கேலிப் புன்னகை வீசி விட்டுச் சென்று விடுவார். அவர்தான் தீராத விளையாட்டுப் பிள்ளையாச்சே!

அம்மா வால் வீசப் பட்ட சொல்லம்பு “ கற்பு “, என் கதையில் கொண்டு வந்து எழுத்தால் சாடினேன். பரமனைச் சாட்சியாக உட்கார வைத்தேன்.
அந்தக் கதையின் பெயர் “ பூலோக யாத்திரை”. நாமும் கொஞ்ச நேரம் கதை பேசலாமே! அடுத்து பேசுவோம்
அலைகள் மீண்டும் வரும்.
.
.



No comments: