Monday, February 11, 2013

நினைவலைகள் 22


நினைவலைகள் -22

கதை பேச நினைத்தேன். ஆனால் நாடக உலகம் பிடித்து இழுக்கின்றது.
பிறிதொரு சமயம் கதை பேசலாம்.

பெண் பாத்திரத்திற்கு ஆள் இல்லாததால் ,மனமாற்றம் நாடகம் போய் வரப்புத்தகராறு நாடகம் அரங்கேற்றினர். பெண்பாத்திரம் கிடையாது. நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் அதே வட்டாரத்தில் வேலைபார்த்து வருகின்றவர்களாகும். வெளியிலிருந்து ஆட்களைக் கூப்பிடுவது கிடையாது.

எல்லா கிராமங்களிலும் வரப்புத் தகராறு இருந்தது. அண்ணன் தம்பி சண்டைகளில்  கோர்ட்டுக்குப் போய், ,இருக்கும் சிறிய நிலத்தையும் பறி கொடுப்பார்கள்

சோமமாகாதேவன் இதிலும் மூத்தவராக வருவார். கொன்னவாய்ப் பேச்சு.
அவரைப்போல் கொன்னவாயனாக யார் நடித்தும் நான் பார்த்ததில்லை.
இந்த நாடகத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் சோழவந்தானில் நாடகம் நடக்க வேண்டிய நேரத்தில் பிரச்சனை கிளம்பிவிட்டது. நாடகத்தை நடத்தவிடவில்லை. வாடிப்பட்டி வட்டாரத்தில் சோழவந்தான் தான் பெரிய கிராமம். நாடகம் என்றவுடன் பக்கத்து கிராமங்களிலிருந்தும் ஆட்கள் வந்து விட்டனர். திறந்த வெளியரங்கு. எம். ஆர். ராதா மாதிரி எங்கள் நாடக மேடைக்குப் பெரிய அலங்காரம் இருக்காது. நாடகம் தொடங்க வேண்டிய நேரத்தில் எழுந்து நின்று ஒரே கூச்சல். அவர்கள் என்ன சொல்லி கத்தினார்கள் தெரியுமா?

 “எங்கள் எஸ் ஈ. ஓ டபிள்யூ அம்மாவை நடிக்கச் சொல்லுங்கள். அந்த அம்மா நடிக்கல்லேன்னா நாடகம் நடத்தவிட மாட்டோம் “

மைக்கில் நான் பேசி சமாதானம் செய்ய முயன்றேன். முடியவில்லை. ஆக நான் நடித்தாக வேண்டும். புதிதாக பெண் பாத்திரம் உருவாக்க வேண்டும். ரிஹர்சல் கிடையாது. என்னுடன் பேசுகின்றவர்கள் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்

சட்டென்று ஓர் யோசனை தோன்றி உள்ளே போனேன். கொன்னவாய்ப்
புருஷன் சோம மகாதேவனுக்கு அடங்காப்பிடாரி பொண்டாட்டியாய் நடிப்பது. ஒரு சீன் போதும். மக்களைத் திருப்தி படுத்திவிடலாம்.
எங்கள் நம்பிக்கையைப் பாருங்கள்

இதுதான் சீன்

வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். வக்கீலுக்கு வீட்டிலிருக்கும் நெய்ச் சட்டியைக் கொண்டு கொடுக்க விரும்பி அதனை ரகசியமாக எடுத்து மெதுவாக நகர்கின்றான். ஏற்கனவே பொறுப்பில்லாத கணவனைத் திட்டிக் கொண்டு பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். அவன் போவதைப் பார்க்கவும் விளக்கு மாற்றை வீசி எறிந்துவிட்டு சண்டைபோட ஆரம்பித்துவிடுகின்றாள். அவன் கொன்ன வாய்ப் பேச்சும் இவளின் ஆங்காரமான் பேச்சும் ஜனங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 கோபத்தை அடக்க முடியாமல் புருஷன் அடிக்க கை ஓங்கி விடுகின்றறன். அவன்தான் தொட முடியாதே!. அவன் அடித்துவிட்டாற் போல் ஒவென்று கத்தி ஒப்பாரிப் பாட்டு பாட ஆரம்பித்துவிடுவாள்

புளியங்கொம்பைத் தேடியல்லோ
புளியங்கொம்பைத் தேடியல்லோ
புவிமேல் தவம் கிடந்தேன்
புவிமேல் தவம் கிடந்தேன்
அடி என்னைப் பெத்த ஆத்தா
நான் பிடிச்ச கொம்பு முருங்கைக் கொம்பா
போனவிதம் கண்டேனே
போனவிதம் கண்டேனே
அடி என்னைப் பெத்த ஆத்தா

இது பெரிய பாட்டு. மேடையிலேயே இட்டுக் கட்டிப் பாடினேன்
இந்த வேஷத்திற்கு பெரிய மேக்கப் தேவையில்லை. ஏற்கனவே கைத்தறி சேலைதான் உடுத்துவேன். புடவைக்கட்டைமட்டும் மாற்றினேன். பின்னால் கொசுவம் வைத்துக் கட்டினேன். தலை முடியை அவிழ்த்து சொருகுக் கொண்டை போட்டுக் கொண்டேன்..

சண்டை ஆரம்பிக்கவும் இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை உதறி
சண்டையை ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் எழுத்தாளர்கள். எங்களுக்குள் எங்கள் சாமர்த்தியத்தில் போட்டி. கடைசியில் முடி அவிழ்த்து ஒப்பாரி பாட்டு ஆரம்பிக்கவும் கூடியிருந்த கூட்டம் முழுவதும் ஒரே கைதட்டல். அந்த மணித்துளிகளின் அனுபவங்களை இப்பொழுதும் மனம் அசைபோடும் பொழுது புல்லரிக்கின்றது. நாடகத்தில் நடிப்பது தனி இன்பம்.. தனிப்பட்ட திறமைகளைக் காட்டும் களம்..பார்ப்பவரும் சரி, பங்கு கொள்பவரும் சரி, இருபக்கமும் இன்பத்தைக் கொடுப்பது கூத்து.

மேடையில் ஓர் பெண் ஏறிவிட்டால் பலரின் கவனத்திற்கு வந்து விடுவாள்.
எனக்கும் சிறு சிறு சோதனைகள்  ஏற்பட்டன. ஆனால் என்னுடன் பழகிய இளைஞர்களால் அவைகள் ஆரம்பத்திலேயே பொசுங்கிவிட்டன. ஆனாலும் சில இடங்களில் தீங்கு ஏற்படும் சூழல் வரினும் என்னை அரணாகப் பாதுகாக்க என் தம்பி பெரிய கருப்பன் இருந்தான்.
என் கலைத் திறமையால் எனகேற்பட்ட ரசிகர்கள் அன்று இருந்த நிலையிலிருந்து உயர் நிலைக்குப் போயினும், அவர்கள் என்னைச் சந்தித்தபொழுது மறக்காமல் பரிவைக் காட்டினர்.

மதுரையில் நாடகம் போட வேண்டி வந்தது. இதுவரை கிராப்புறங்களில் தான் எங்கள் நாடகங்கள் நடந்து வந்தன.. வரப்புத்தகராறு நாடகம் தான். அன்று நானும் நடிப்பதாக இருந்தது. எனவே மேடையில் பின் புறத்தில் இருந்தேன். அப்பொழுது என்னிடம் எங்கள் சப் கலெக்டர் வந்து ஒரு
உத்திரவு பிறப்பித்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது

Twincle twincle little star

அந்தப் பாடலை ஆனந்த பைரவி ராகத்தில் பாட வேண்டுமாம். உத்திரவுகள் எப்படியெல்லாம் வருகின்றன பாருங்கள்!சங்கீதம் கற்றவள் தான். ஆனால் ராகங்களில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது.
முடியாது என்று சொல்ல என்னாலும் முடியாது

“ஸார், ஆனந்த பைரவியில் பாடினால் ராகம் மாறினாலும் மாறும். புன்னகவராளியில் பாடட்டுமா? “

“சரி” என்று தலையாட்டிவிட்டு உடனே பாடிக் காட்டச் சொன்னார். நடிப்பு, பாட்டு எல்லாம் திடீர் சோதனைகளாகத்தான் வந்தன. நான் பாடிக் காட்டினேன். அவர் சமாதானம் ஆகவில்லை. மீண்டும் இன்னொரு முறை பாடச் சொன்னார். நான் மீண்டும் பாடிக்காட்டவும் அவர் முகம் மலர்ந்தது.அன்றைய மேடையில் அதிகம் கை தட்டல்களைப் பெற்றது அந்தப் பாட்டுதான். ஆங்கிலப் பாட்டை கர்நாடக ராகத்தில் என்னைப் பாடச் சொன்னவர் திரு. டி. என் சேஷன்.,ஐ.ஏ.எஸ் அவர்கள். அவர் அப்பொழுது எங்களுக்கு சப்கலெக்டராக இருந்தார். தேர்தல் ஆணையா ளராக இருக்கும் பொழுது அவரின் கண்டிப்பான குணத்தை எல்லோரும் அறிவார்கள். அவர் இதயத்திற்குள் கனிவான சங்கீதமும் உண்டு. அவர் பெயர் கேள்விப்படும் பொழுதெல்லாம் இந்த நினைவு வரும்.

அவரைப் போல் திரு எம்.எஸ். திரவியம் , ஐ.ஏ.எஸ் அவர்களும் சப் கலெக்டரக இருந்தார். அவர் காலத்தில் எங்கள் நாடகங்களுக்கு வந்து எல்லோருடனும் தரையில் முன்னால் உட்கார்ந்து நாடகம் பார்ப்பார். அவர் தலைமைச் செயலாளரான பின்னும் பார்த்திருக்கின்றேன். அக்கால நாடகங்களைப் பற்றிப் பேசுவார். நாடகம் மிகவும் சக்தி வாய்ந்தது.

பாட்டு, நடனம், நடிப்பு என்று மேடைகளில் அடிக்கடி தோன்றியதால்
கிராமத்து மக்களிடையே எனக்கும் ரசிகர்கள் அதிகமாயினர். நான் சாதாரணமானவள். மேலும் எங்கள் நாடகங்களும் தெருக்கூத்து போல் இருந்தன.எங்களுக்கே இந்த கவர்ச்சி அலையென்றால்  சினிமாவில் இருப்பவர்களைக் கண்டு மயங்குவதில் வியப்பு ஒன்றும் இல்லை. மக்களின் மயக்கம் சினிமா மனிதர்களை ஆட்சி பீடத்தில் வைத்தது.

தொடரும்



Tuesday, February 5, 2013

நினைவலைகள் 21


நினைவலைகள்  - 21

நாடக அனுபவங்களை நினைத்துப் பார்க்கின்றேன்
கல்லூரி நாட்களில் நான் பங்கு கொண்ட நாடகம் இரண்டு. ஓரங்க நாடகங்கள். ஒன்று கண்ணகி வழக்குரைத்த காட்சி. இன்னொன்று வீரத்தாய். இரண்டிற்கும் வசனம் எழுதியதுடன், கண்ணகியாகவும், வீரத்தாயாகவும் நடித்தேன். மேடை நாடகங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படியே பாத்திரத்துடன் ஒன்றிப்போய்விடுவேன்

வாடிப்பட்டியில் நான் நடித்த நாடகத்தின் பெயர் மனமாற்றம். சாதாரணக்கதை ஆனால் அர்த்தமுள்ள வசனங்கள். விழிப்புணர்விற்காக
எழுதப் பட்டவை. பார்க்கும் பொழுது அது பிரச்சார நாடகமாகத் தோன்றாது. அந்த அளவில் சோம மகாதேவன் வசனங்களைக் கவனுத்துடன் எழுதுவார்.

கதைச் சுருக்கம்
ஒரு பண்ணையார். பணத்தாசை பிடித்தவர். இரக்கமற்றவர். அவரால் கிராமத்தில் பாதிக்கப் பட்டவர்கள் நிறைய. அவருக்கு ஒரு தம்பி உண்டு அவன் மனித நேய மிக்கவன். ஊருக்கு நல்லது செய்கின்றவன். நல்லதிற்கும் கெட்டதிற்கும் இடையில் நடக்கும் போராட்டங்கள். பண்னையாரின்  மனைவி இறந்து பல வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தவர், பின்னர் வயதில் சின்னப் பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவள் நல்ல குணவதி. போராட்ட அலைகளில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகின்றது. பண்னையார் திருந்துகின்றார்.அவர் இளைய மனைவியாய் நடித்தேன்

நாடகம் தொடங்கும் முன் ஓர் நடனம் ஆடுவேன். அது நாடகத்துடன் சம்பந்தமில்லாதது . உத்தமபுத்திரனில் பத்மினி ஆடிய “காத்திருப்பான் கமலக் கண்ணன் “ ஆட்டம் நான் ஆடுவேன். அக்காலத்தில் கிராமபோன்
கிராமங்களில் இருக்கும். எனவே ரிகார்டு வாங்கி, ஒலிக்கச் செய்து ஆடுவேன். உடனே ரிகார்டு டான்சரா என்ற நையாயாண்டிச் சிரிப்பா? ரிகார்டு டான்சர் என்றால்  அதற்கு நல்ல பெயர் கிடையாது. எனக்கு ரசிகர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக ஆரம்பித்தது..

கருப்பட்டியில்தான் நடனமும் நாடகமும் முதலில் அரங்கேறின. ஐந்தாவதாக வடுகபட்டி கிராமத்தில் நாடகம் போடும் பொழுது என் தாயாரைக் கூட்டிச் சென்றிருந்தேன். நாடகம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது என் தாயார் ஒன்றும் பேசவில்லை. நானும் மவுனமாக இருந்தேன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் “ஓ” என்று கத்தி அழ ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை

என்னம்மா, உடம்பு சரியில்லையா?

உடம்புக்கு வந்து என்னைக் கொண்டு போனா நன்னா இருக்குமே! இப்படி ஒரு பொண்ணைப் பெத்ததுக்கு உயிரோட இருக்கணுமா?

எனக்கு தூக்கிவாரிப்போட்டது

நான் என்னம்மா தப்பு செய்தேன்

இன்னும் என்னடி பாக்கி. எவனோ உன்னைத் தொடறான். கற்பு
போச்சேடி. உனக்கு வெக்கம் மானம் கிடையாதா?

அது நாடகம்மா

என்ன அழவோ, எங்க காலத்துலே புடவைகூட நழுவறது தப்பு,பாவம்னனு சொல்லுவோம். படிச்சுட்டா இப்படி எல்லாத்தையும் உதுத்துடணுமா ? இந்தக் கண்ராவிகளைப் பாத்துண்டு உயிரோடே இருக்கறதவிட செத்துத் தொலைக்கலாம்

நான் திகைத்துப் போய்விட்டேன். நாடகத்தில் மனைவி செத்தவுடன் பண்ணையார், மனைவியின் தலையை மடியில் கிடத்தி குமுறிக் குமுறி அழுவார். அப்பொழுது ஒரு நேரம் தான் தொடல்/ அக்காட்சி அம்மாவை
உலுக்கி இருக்கின்றது.

 இப்போ அம்மாவை சமாதானப் படுத்த வேண்டிய நிலை. நடிக்கவே கூடாது என்றார்கள். எப்படியோ பேசிச் சமாளித்தேன். “இனிமேல் ஆண்களை என்னைத் தொடவிடாமல் நடிக்கின்றேன் “ என்று வாக்குறுதி கொடுத்தேன். பின்னார்தான் அவர்கள் சமாதானம் ஆனார்கள். முழுமனத்துடன் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று உணர்வேன்.

என் மனம் சமாதானமாகவில்லை. “கற்பு”சாடலின் எதிரொலி ஓர் கதையில் இசைத்தது. பூலோகயாத்திரை என்ற கதையில் கற்புக்கு ஓர் விளக்கம் கொடுத்து எழுதினேன். கதைக்கு ஓர் சிறு பொறி போதும்..

அம்மாவைப் புரிந்து கொள்ள முடிந்தது.  என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறிச் சென்றுவிட்டார். ஐந்து வருடங்கள் வரவில்லை. அப்பா போகும் பொழுது அம்மாவிற்கு 18 வயது. எனக்கு வயது ஒன்று. என் மாமாவிற்குப் படிப்பு வரவில்லை. எனவே பாட்டியின் பராமரிப்பில் அம்மா, நான் என் மாமா இருந்தோம். .. புருஷனைப் பிரிந்து இருக்கும் சின்னப் பெண்ணைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தார்கள். அம்மா எங்கும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. வீட்டிலே இருந்து அப்பளம் இடுவார்கள். அவர்கள் உலகம் ஓர் சின்ன அறை. கோயிலுக்குப் போக வேண்டுமென்றாலும் பாட்டி அல்லது மாமாவின் துணையுடன் செல்ல வேண்டும்.

எட்டயபுரத்தில் வாழும் பொழுது கூட அயல்வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். நான் வேலைக்குப் போகவிட்டு என்னுடன் வந்து தங்க ஆரம்பிக்கவிட்டுத்தான் வெளி உலகம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் பொழுது வீட்டு வாடகை 15 ரூபாய்.
மாதத்திற்கு அரிசி உட்பட 27 ரூபாய் ஆகும். சந்தைக்குச் செல்லும் பொழுது எட்டணாவிற்கு ஒரு வாரத்திற்குக் காய்கறி வாங்கலாம். அப்பொழுது நான் கைத்தறிப் புடவைதான் உடுத்துவேன். 7 ரூபாய் முதல் 10 ரூபாய்க்குப் புடவை வாங்குவேன். அந்தக் காலச் சூழலும் வாழ்க்கையும் எளிமையாக இருந்தன, ஆனாலும் சில விஷயங்கள் புதிராக இருந்தன.

எங்கெங்கோ திரிந்து , எப்படியோ வாழ்ந்த மனிதர்கள் ஓரிடத்தில் நிலைப்பட்டுத் தனக்குள் அமைத்துக் கொண்ட விதிகள் தளர ஆரம்பித்தகாலம். சில பழக்க வழக்கங்கள் புரியவில்லை என்பதுடன்
சில பிடிக்காமல் போக ஆரம்பித்தது . இன்னும் சில, பிஞ்சு மனத்தில்
முள்ளாக தங்க ஆரம்பித்தது.

என் அப்பாவிடம் பல சிறந்த குணங்கள் இருந்தாலும், சில குணங்கள்
மனத்திற்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல. நாட்டுப் பற்றையும் ,
எளிமையும் கற்றுக் கொடுத்த  அதே மனிதரால்தான் ஆண்வர்க்கத்தின் மீது கோபமும் வளர்ந்தது.. அவருடைய அர்த்தமற்ற முன் கோபங்கள் என்னை முரட்டுப் பெண்ணாக்கியது. அவருக்குக் கோபம் வந்தால் உடனே அடிப்பார். அதே பழக்கம் என்னையும் ஒட்டிக் கொண்டது. அக்குறைகளை விட நான் பட்ட பாடு சொல்லி மாளாது. மாநில அளவில் உயர் பதவியில் இருக்கும் பொழுது கூட கோபத்தில் ஒருவனை அடித்துவிட்டேன்.

அடுத்து அம்மாவின் அசட்டுத்தனம். கோபத்தில் அம்மாவை அப்பா அடிப்பார். ஆனால் அம்மா அவரைச் சுற்றி வந்து நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்பாள். தவறு செய்பவர் ஆண். பெண் ஏன் அர்த்தமில்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும்?. அம்மாவிற்கு அப்பா ஒரு தெய்வம். அக்காலத்தில் பெண்ணுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம். . இதை நான் எழுதும் பொழுது இப்படியெல்லாம் இருக்காது என்று  இக்கால தலை முறைகளில் சிலருக்குத் தோன்றுகின்றதா?

பெற்றோர்கள் செய்யும் சில அசட்டுக் காரியங்கள் பிள்ளைப் பருவத்தில் குழந்தைகளின் மன வளர்ச்சியை எவ்வளவு பாதிக்கின்றது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்றும் எத்தனையோ வீடுகளில் தெரியாமல் நடக்கும் இது போன்ற பிழைகள் தொடர்கின்றன.

சமுதாயம் மாறத் தொடங்கிய காலத்தில் பிறந்தவள் நான். பெண்ணை அடக்கி வைத்தவனும் ஆண். அவளிடம் சுதந்திர உணர்ச்சிக்கு வித்திட்டவன் ஆண். பாரதிக்கு முக்கிய பங்குண்டு. அவன் ஊர்க்காரி
,மாறியதில் என்ன வியப்பிருக்கும்?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நாய்களுக்கு போடச் சொன்னான்.
வெட்கம் கெட்ட பெண்ணை நினைத்துப் பாருங்கள். உங்களால் ரசிக்க முடிகின்றதா? ஆண் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணுக்கு நாணம் வேண்டுமா? பெண் இப்படி கேட்பதைவிட ஆணே இப்படி கேட்கின்றான். மனிதன் பல சமயங்களில் முட்டாளாகி விடுகின்றான்.
தான் பேசுவது, செய்வது தனக்கே தீமையாகி விடும் என்று ஆரம்பத்தில் உணர்வதில்லை. நாம் போடும் பல வளர்ச்சித் திட்டங்களிலும் சில பாதகம் செய்திருக்கின்றன.

தவறு செய்வது நாம் மட்டும் தானா? கடவுளை நினைக்கின்றேன்.அவரும் தவறுகள் செய்திருக்கின்றார். நான் கடவுளை நம்புகின்றவள். ஆனலும் அவர் மீதும் கோபம் வரும். அடிக்கடி மனக் கூண்டில் அவரை நிறுத்திக் கேள்விகள் கேட்பேன். இக்குணமும் சிறு வயது முதல் ஆரம்பம். என் கதைகளில் அநேகமாக உளவியலை ஒட்டி வரும். முதல் கதையின் பெயரே “உயிர் மேல் ஆசை”. என் கதைகளில் விகடனில் முத்திரை பெற்ற கதையின் பெயர் “ ஆசைப்பந்தல் “
இப்படி மனத்தைக் காட்டி எழுதும் பொழுது கடவுளையும் வம்புக்கிழுக்க ஆரம்பித்தேன். பல கதைகளில் பரமன் நாயகராக வருவார். அவரைப் பாடாய்ப் படுத்த காட்சிகளை அமைப்பேன். அவரோ விளையாட்டாய் வந்து விட்டு என்னை நோக்கி ஒரு கேலிப் புன்னகை வீசி விட்டுச் சென்று விடுவார். அவர்தான் தீராத விளையாட்டுப் பிள்ளையாச்சே!

அம்மா வால் வீசப் பட்ட சொல்லம்பு “ கற்பு “, என் கதையில் கொண்டு வந்து எழுத்தால் சாடினேன். பரமனைச் சாட்சியாக உட்கார வைத்தேன்.
அந்தக் கதையின் பெயர் “ பூலோக யாத்திரை”. நாமும் கொஞ்ச நேரம் கதை பேசலாமே! அடுத்து பேசுவோம்
அலைகள் மீண்டும் வரும்.
.
.



Saturday, February 2, 2013

வணங்குகின்றேன்


                          வணங்குகின்றேன்
                          ------------------------
நினைப்பதெல்லாம் நடக்குமா?
ஏற்கனவே மனிதன் தன் கால் போன போக்கில் சென்று கொண்டிருக்கின்றான்.
மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றது
மீண்டு வருவோமா அல்லது மாண்டு போவோமா?
சிந்தனைச் சுழல் என்னைச் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
ஆர்வத்துடன் ஆரம்பித்த வலைப்பூ
முதுமையின் தள்ளாட்டம். உதவிக்கரம் நீட்டியவர்களும் இருப்பது திண்டாட்டம். நான்கு மாதங்களுக்கு மேலாக வரவில்லை. இனி தொடர்ந்து இதில் பயணம் செய்ய விரும்புகின்றேன். காலம் எனக்கு சக்தியைக் கொடுக்கட்டும்
நான் வலம் வந்த குழுமங்கள் எத்தனை எத்தனை?!
அதுவும் முடங்கியது
எழுதுவதிலும் தள்ளாட்டம். ஆனாலும் வீழாமல் ஒன்றில் மட்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
திண்ணையில் என் தொடர் கடந்த 43 வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது
ஓர் வரலாற்றுத் தொடர்
ஆம் நம் வரலாறு
நம் வாழ்வியல் வரலாறு
இந்த வலைப்பூ எனது பெட்டகம்
என் எண்ணங்களை என் படைப்புகளைச் சேமித்து வைக்கும் மனச் சிமிழ்
இனி தொடர்ந்து வருவேன்.
நம்பிக்கை கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்கள் வருவார்கள்
இனி அடிக்கடி சந்திப்போம்

Friday, September 28, 2012

நினைவலைகள் -20


நினைவலைகள்  -20

அரசியல் உலகம் பார்க்கப் போகின்றோம்
அரசியல்வாதிகள்
அரசுப் பணியாளர்கள்
இருவரும் மக்களுக்காக, மக்கள் நலப் பணிக்காக இருப்பவர்கள்.
இந்த இரண்டும் சீராக இருந்தால் நிர்வாகமும் சீராக இருக்கும்.
நம் அமைப்பு இரட்டை மாட்டு வண்டி கூட இல்லை. மூன்று மாடுகள் இழுத்துப் போகும் வண்டி.
மக்கள் தங்கள் பொறுப்பை மறந்து புழுதிவாரி கொட்டக் கூடாது.
ஒரு அரசியல் பிரமுகருடன் நடந்த உரையாடல்
இது கற்பனையல்ல, நிஜம்

ஏன் லஞ்சம் வாங்குகின்றீர்கள்?

லஞ்சம் என்று ஏன் சொல்லுகின்றீர்கள். வக்கீலுக்கு கொடுக்கும் பீஸ்
மாதிரி இது. அவன் அவசரத்துக்கு, தேவைக்கு குறுக்குவழிலில் போகணும்னு நினைக்கறான். எங்க கிட்டே வரான் நாங்க செய்து கொடுக்கற வேலைக்கு பீஸ் வாங்கறோம்.

 அவசரம், முறையற்ற கோரிக்கைகள், இந்த புத்தி, எப்படியும் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆரம்பித்து வைத்தது லஞ்சம். எத்தனை நாட்கள் வெறும் பார்வையாளனாக இருப்பது, அரசாங்கப் பணியாளனாக இருந்தாலும் அவனும் மனிதன்,, அவனும் குறுக்குவழிப் பணத்திற்கு ஆசைப் பட ஆரம்பித்துவிட்டான்
ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுக்கின்றோம். நம் பாவங்களுக்குக் கூட்டாளியாக்குகின்றோம்.
“எனக்கு செய்து கொடு. உன் கோயிலுக்கு வரேன். உன் உண்டியல்லே
பணம் போடறேன்”
கடவுள் எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றான்

சுதந்திரம் கிடைத்த பின் பஞ்சாயத்து ராஜ் வந்தது. கிராம அளவு மக்கள் ஆட்சி. அப்பொழுது கட்சியைவிட மக்களுக்கு நம்பிக்கை யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு ஓட்டு போட்டார்கள். பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து சேர்மனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் அரசும் அரசியலும் கைகோத்து மக்களுக்கு சேவை செய்தது.
ஓர் குடும்பமாக இயங்கியது..
வாடிப்பட்டியின் முதல் சேர்மனாக வந்தவர் திரு. பால குருவா ரெட்டியார். நல்லவர். அன்புள்ளம் கொண்டவர். எங்கள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும் இவர் பின்னால் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் அவர்கள் முதல்வராக இருக்கும் பொழுது சுற்றுலா சேர்மனாக ஆனார். எம். ஜி. ஆர் அவர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். எந்தப் பதவியில் இருந்தாலும் அதே அன்புள்ளத்துடன் எல்லோரிடமும் பழகினார்.

எங்கள் வட்டாரத்திற்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு முறை வந்தார். என்ன சுறுசுறுப்பு!. கம்பீரமான தோற்றம். !. அவர் மேடையில்
பேச எழுந்த பொழுது மைக் சரியாக இல்லாமல் விழ இருந்தது. உடனே அவருக்குக் கோபம். திட்டிக் கொண்டே, மைக்கைக் கவனிக்க வேண்டியவன் வருகைக்காக் காத்திராமல் அவரே சீர் செய்தார். அதனை நான் ரசித்தேன். ஓர் அப்பாவின் கோபம்.

எங்கள் மாவட்டத்திலும் ஓர் காந்திஜி இருந்தார். அவர்தான் திரு கக்கன்
அவர்கள். கக்கன் ஜி என்று மரியாதையாகக் கூறுவோம். மனிதர்களைக் கூறும் பொழுதும், திட்டங்களைக் கூறும் பொழுதும். டில்லி ஹிந்தி ஒட்டிக் கொண்டிருக்கும். எளிமையும் இனிமையும் ஒருங்கே நிறைந்தவர். விழாவிற்கு என்று வந்தாலும் கனிவுடன் “நல்லா இருக்கிங்களா ? “என்று விசாரிப்பார். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் ஏதாவது உண்டா என்று கேட்பார். பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறவர் மத்தியில் இப்படி ஒருவர்1 ஆட்டோவில் வந்தவன்  , இன்று கார், பங்களாவுடன் சொகுசாக வாழ்கின்றான். ஆனால் கக்கன்ஜி அவர்கள் கடைசி வரையில் ,தன் நிலை மாறாது வாழ்ந்தார்

நேர்மையுடன் வாழ்கின்றவர்களை மேடையில் புகழ்வோம். ஆனால் கீழே
இறங்கியவுடன் அவனை ஏளனமாகப் பார்த்து ,”பிழைக்கத் தெரியாதவன்”  என்று கேலி பேசுவோம்.

கக்கன்ஜி அவர்கள் அடுத்தவன் பணத்தில் தன்னை வளர்த்துக் கொள்ளாத குணக்குன்று

அரட்டைக் குழு இளைஞர்களில் ஒருவன் கூறியது
“படிப்பு முடியவும் நான் அரசியலில் சேர்ந்துவிடுவேன். சீக்கிரம் பணம் சேர்க்கலாம். மத்தவங்களை மிரட்டலாம். நம்மைக் கண்டா பயப்படுவாங்க. எதுக்காக ஒருத்தன் கிட்டே வேலை பார்க்கணும்.”
அவன் பொறியல் கல்விகற்கும் மாணவன்

வன்முறை வாழ்க்கையில் கவர்ச்சி. உழைக்காமல் மிரட்டியே இலகுவாகச் சம்பாதிக்கலாம். அடுத்தவர்க்கு அச்சம் தரும் வாழ்க்கையினை நோக்கி
இளம் உள்ளங்கள் நகர ஆரம்பித்திருக்கின்றன. படித்து முடிக்கவிட்டுத் தானே வேலைக்குப் போக முடியும். எதற்குக் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்?மாற்றம் இளைஞர்களிடம் மட்டுமா ?

பெண்ணைஅடக்கமாய் வைத்துப் பாதுகாத்த நிலை மாறி திறந்தவெளி அரங்கில் உலாவவிட்டு, சொகுசு வாழ்க்கைக்கு நப்பாசைப் படும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூட ஆரம்பித்திருக்கின்றது.

தன் வீட்டுக் கதவைத் தட்டி, தீமைகள் உள்ளே நுழையும் வரை மனிதன் மெத்தனமாக இருகின்றானே! நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?
“நெஞ்சு பொறுக்குதில்லையே “ என்று கத்தத் தோன்றுகின்றது

அப்பொழுது அரசியல் மிரட்டவில்லை. காந்திஜியின் உண்ணாவிரத சக்தி அப்பொழுது செத்துப் போகவில்லை.

களத்திற்குப் போவோம். அமைச்சர்கள் வரும் விழாவிற்கு ஏற்பாடு செய்யும்பொறுப்புகள் எங்களுடையது. விழா மேடைக் கருகில் இருந்து
கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மந்திரி வர நேரமானால் நான் மேடையேறி பாடத் தொடங்கி விடுவேன். கே.பி. சுந்தராம்பாள், டி. எம். சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்த ராஜன் இவர்கள் பாடியபாடல்களைப் பாடுவேன். இன்னும் நேரமாகும் என்று தெரிந்தால் கதா காலட்சேபம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். கிராமங்களில் என்னால் நெருக்கமாக இருக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் என் பாட்டும் பேச்சும் தான். இசையில் மயங்காதோர் உண்டோ?!

இன்னொரு புது அனுபவமும் கிடைத்தது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினாரக இருந்த ஏ.ஸ். பொன்னம்மாள் அவர்கள்தான். நான் வாடிப்பட்டியில் இருக்கும் பொழுதுதான் முதல் முறையாகத் தேர்தலில் நின்று ஜெயித்தார்கள் அன்று அவர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா?
அடக்கம், சாந்தம், பேசக் கூடத் தயக்கம், பெண்மையின் நளினம் எல்லாம் கொண்ட பெண். எனக்கு அக்காவானார்கள். இப்பொழுது அவர்கள் தோற்றமே வேறு. அனுபவத் தீயில் உருக்கியெடுத்த உரத்த பெண்மணி.

“சீதா, நான் ஊருக்குப் போறேன். உனக்கு லீவுதானே . என்னுடன் வா”
எனக்கு நேரம் இருக்கும் பொழுது போயிருக்கின்றேன்.


அக்கால அரசியல் மேடை.  நாங்கள் அங்கே போகவும் ஒரு காகிதம் கொடுத்தார்கள்.  முன் வாரத்தில் வந்து போயிருந்த எதிர்க் கட்சியின் மேடையில் விரித்த குற்றச் சாட்டு பட்டியல். அதற்கு இப்பொழுது இவர்கள் பதில்கள் கூறவேண்டும்.. நாங்கள் இருவரும் உட்கார்ந்து கேள்விகளுக்குப் பதில்கள் தயாரித்தோம். இப்பொழுது
நிலைமை மாறிவிட்டது. கேள்விகள்கூட சிந்தித்துப் பேச வேண்டாம் வசைமாரிக்கு எதற்கு மூளையைச் சிரமப்படுத்த வேண்டும்?

அரசியல் பேச்சுக்கு உண்மைகள் தேவையில்லை. உரத்த குரல் போதும்.  கொச்சைப் பேச்சுக்களில் மனத்தின் இச்சையைத் தீர்க்கும் களம். அதிலும் பெண் அரசியலில் இருந்தால் ஆண்களுக்குப் பேச காவியமே கிடைத்து விடும். இந்தியாவில் எந்த பெண் அரசியல்வாதியைப் பேசாமல் இருந்திருக்கின்றாகள்.?! மக்களுக்கு என்ன செய்யப் போகின்றோம்
என்று கூறுவதைவிட ,நிந்தாஸ்துதி கச்சேரிகள் தான் அதிகம்

சில இடங்கள் போய்ப் பார்த்ததிலேயெ அரசியல் களத்திற்கு நான் பொருந்தாதவள் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னைப்போன்று வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை
அரசியல் பாடத்திற்கு வித்திட்டதும் வாடிப்பட்டி வாழ்க்கையே. பிற்காலத்தில் அரசியல் புதை குழி என்னை இழுத்த பொழுதும்
தப்பும் அளவு மனத்திடத்திற்கு உரமிட்டது வாடிப்பட்டி அனுபவங்கள்
தான். என் பயணத்துடன் வரப்போகின்றவர்கள் என் இந்தக் கூற்றைப் புரிந்து கொள்வார்கள்.

ஏ. எஸ் .பொன்னம்மாள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். எனக்கு ஒரு ராசி
உண்டு. அதுவும் வாடிப்பாடியிலிருந்துதான் ஆரம்பம். தலித் வகுப்பிலி
ருந்து வந்த அரசியல்வாதிகள் பலர் எனக்கு நல்ல நண்பர்களாயிருந்தனர்.
பொன்னம்மாள் அக்கா என்னை மறக்கவே இல்லை.

என் நாடக உலகிற்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். விழிப்புணர்வு
ஏற்படுத்த நாடகக் கலை பெரிதும் உதவியது.மதுரை மாவட்டத்தில் எங்கள் செட் தான் புகழ் வாய்ந்தது. “வாடிப்பட்டி செட் “ என்ற முத்திரை குத்தப்பட்டது. நாடகத்தில் நான் நடித்ததால் பலர் மனத்தில் இடம் பெற்றேன். சில சோதனைகள் வரினும் , இதனால் எனக்குக் கிடைத்த பயன்கள் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். இன்றும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்க விரும்புவேன். கிழவிக்கு என்ன பாத்திரம் என்று சிரிப்பு வருகின்றதா? குமுதத்தில் வந்த சீதாப்பாட்டி சிரிக்க வைக்கவில்லையா? எவ்வளவு ஆசை பாருங்கள் ?1. இந்த ஆசை இருந்தததால்தான் கொஞ்சம் கூட அச்சமின்றி ,சென்னை கலைவாணர் அரங்கில் , கலைஞர் முன்னிலையில் நான் நடித்தேன். என் நண்பர் சாவியும் வந்திருந்தார். அப்பொழுதும் என் வயது 41.அந்த நாடகத்தின் நாயகியே நான் தான்

எங்கள் நாடகத்தின் சிறப்புக்குக் காரணமானவரின் பெயர் சோம மகாதேவன். பத்திரிகைளில் வேலை பார்த்தவர். ஏறத்தாழ 400 சிறு கதைகள் வெளிவந்திருக்கும். மண்வாசனை வீசக் கதை எழுதியவர் சோம மகாதேவன். நாடகக்கம்பெனிகளில் சேர்ந்து பல மேடைகளில் தோன்றி யவர். வயதான காலத்தில் அரசு அவருக்குக் கிராம நல ஊழியர் பணி கொடுத்தது. சிறப்புத் தகுதிகள் உள்ளவர்களுக்கு வயதிலும் கல்வியிலும் சலுகை உண்டு. அப்படி அவர் திறமையால் வேலைக்கு வந்தவர். அவர்தான் எங்கள் நாடக மாஸ்டர். சொல்ல நிறைய இருக்கின்றது

அலைகள் இன்னும் வரும்