Wednesday, April 7, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் 02

சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?"

என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை.. அதற்கு ஓர் தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன்.

எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான்.

என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

He is a good listener

அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள்.

சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?

என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள் எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன். சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.

அவர் பார்வையை என் பார்வை சந்தித்த பொழுது அவர் கூற்றின் உண்மையை நான் உணர முடிந்தது.

ஆம், என்னைப்பற்றி யாரும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.

ஒரு ஆண்மகனிடம் புலம்பி என்னைக் கோழையாக்கிக் கொண்ட அவமானத் துடிப்பு சிறியதாக உணர்ந்தேன். மனக்குரங்கு குதிப்பதை அடக்கினேன்.அதே நேரத்தில் உளவியல் தெரிந்த ஒருவரிடம் பேசியதில் ஒரு திருப்தியும் தோன்றியது. எனக்கு ஒரு நண்பன் கிடைத்துவிட்டான் என்று மனம் குதியாட்டம் போட்டது

எங்கள் நட்பு இத்தனை ஆண்டுகாளகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எங்கள் சந்திப்புகளில் நான் வெளிப்படுத்திய செய்திகள் எத்தனை எத்தனை!. ஆனால் அவர் எழுத்தில் என் செய்திகளின் சாயல் கூட வந்ததில்லை. சொன்ன வாக்கின்படி நடக்கின்றார்.

He is a gentleman of words

அவரைப்பற்றி, அவர் எழுத்துக்களைப் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். நம்மில் ஒருவராக அவரைப்பற்றி எழுத விரும்புகின்றேன். அவரை நான் கண்ட கோணங்களில் காட்ட விரும்புகின்றேன். ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றிய கருத்து இருக்கும். அது அவர்கள் சுதந்திரம். நான் எழுதுபவைகள் அவருடன் பழகிய பொழுது நான் உணர்ந்தைவைகள். .எல்லாவற்றையும் எழுதினால் நீண்ட தொடராகிவிடும். சில காட்சிகளாவது பார்க்கலாம்.

அப்படி என்னைப்பற்றி எழுத நான் என்ன தனித் தகுதி படைத்தவளா? அவர் பாத்திரங்கள் சாதாரணமானவர்கள். ஆனால் ஒருவருக்கு ஒன்று, அல்லது சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பிரச்சனைக் குவியலில் வாழ்ந்த ஒருத்தி, சமுதாயத்துடன் மோதிய ஓர் போராளி.! உருண்டு புரண்டு, மீண்டும் எழுந்து நிமிர்ந்து நின்றவள் நான்.

எழுத்தாளர் டாக்டர் லட்சுமி அவர்களும் என்னிடம் ஒரு விருப்பம் தெரிவித்தார்கள்.

சீதாலட்சுமி, ஒருவாரம் நாம் இருவரும் மகாபலிபுரம் போய்த் தங்குவோம். உங்கள் அனுபவங்கள் எல்லாம் கூறுங்கள் நான் எழுத விரும்புகின்றேன்."

அவர்கள் மென்மையானவர்கள். ஆப்பிரிக்கவிலிருந்து திரும்பிய பின், பத்திரிகைகளைப் படித்துவிட்டு அதிர்ந்தார். மாற்றங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உலகம் யாரையும் பொருட்படுத்தாது மாற்றங்களில் உருண்டு ஓடிக்கொண்டிருக்கும்.

உங்கள் எழுத்துக்கு நான் பொருந்தமாட்டேன். நான் அடக்கமில்லா ஒரு பெண். பிரச்சனைகளைக் கூட முரட்டுத்தனமாகவே சந்திக்கின்றவள். ஒரு காலத்தில் என்னைப்பற்றி ஜெயகாந்தன் எழுதவேண்டுமென்று விரும்பினேன். பின்னால் யாரும் எழுதுவதை நான் விரும்பவில்லை. என் ஓட்டம் நின்று களைத்துப்போய் உட்காரும் பொழுது நானே எழுதுவேன்."

ஜெயகாந்தன் எழுத மறுத்த கதையின் நாயகி நான்.

அவளே பேச வந்துவிட்டாள்

கதைப் பாத்திரமும் கதாசிரியனும் சந்தித்துப் பேசுவது கதையில் கண்டிருக்கலாம்.

இப்பொழுது வாசகர்களும் பார்க்கப் போகின்றார்கள். விசித்திரமான, வேடிக்கையான சந்திப்பு. இனி கற்பனைக் குதிரைகளுக்கு கிராக்கி வந்துவிடும். விமர்சனங்கள் பறக்கலாம்.சுவையான பயணம் மட்டுமல்ல சூடான விருந்தும் உண்டு.

அவரிடம் செய்திகளைக் கூறும் பொழுது சில கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் இருக்கும். சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் கிடைக்கும். ஆனால் பல கேள்விகளுக்குப் பதில்களாகக் கிடைத்தது ஒன்று சிரிப்பு அல்லது மவுனம்.

அடுத்து எழுதப் போகும் இரு சம்பவங்களுக்கு உளவியல்ரீதியாக ஜெயகாந்தன் கொடுத்த விளக்கங்ககளை எழுதுவேன்.

(தொடரும்)

நன்றி -திண்ணை

Monday, April 5, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-03


இது என் சுய சரிதையல்ல;சரித்திரம் படைக்க நான் சாதனையாளரும் அல்ல.மிகச் சாதாரணமானவள்.ஆனால் 75 ஆண்டுகள் வரலாற்றுச் சுவடுகளின் பார்வையாளர். சில நேரங்களில் பங்குதாரராகவும் வாழ்ந்திருக்கின்றேன். என் நினைவுகள் நாட்குறிப்பிலிருந்து எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.ஓர் சாமானியன் நோக்கிலும் நிகழ்வுகளை அறிந்து கொள்வது வரலாற்று ஆய்வுகளுக்கு வலு சேர்க்கும்.

இனி ஊர்வலத்தைத் தொடர்வோம்.

எட்டயபுரத்தில் முதலில் நாங்கள் குடியேறிய வீட்டில் பாரதி, சிறிது காலம் தன் மனைவியுடன் குடியிருந்திருக்கின்றார் என்று என் தந்தை கூறினார். அதே தெருவில்தான் பாரதி பிறந்த வீடும் இருக்கின்றது. இப்பொழுது அது பாரதி நினைவு இல்லம். நான் அந்தத் தெருவுக்குப் போன பொழுது அந்த வீட்டில் வசித்தவர் பாரதியின் தாய் மாமன் சாம்பசிவ அய்யர்.

என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையிலே எங்கள் ஊர் அரண்மனை. என் முதல் தோழி தங்கப்பாண்டியனின் வீடு. .ராஜா உயர்நிலைப் பள்ளியில் சேரவும் எனக்குக் கிடைத்த முதல் தோழி. தினமும் அரண்மனைக்குச் சென்று அவர்களுடன் விளையாடுவேன். அதே போல் முதல் கார்ப் பயணமும் அவர்களுடன் அரண்மனைக் கார்ப் பயணம் தான். அது கடைசியல்ல, ஆரம்பம்.

சமீபத்தில் என் முதல் தோழியைக் காணச் சேன்றேன். எங்கள் சந்திப்பு 60 வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. பார்த்தவுடன் அவர்களைக் கட்டி பிடித்துக் கொண்டு அழுது விட்டேன். அவர்கள் கண்கலங்க என்னை அரவணைத்து வீட்டுக்குள் கூட்டிச் சென்றார்கள்.

அவர்களின் கணவரிடம் என் பிள்ளைப் பருவச் சேட்டைகளைக் கூறினார்கள். சின்னப் பிள்ளைகளின் சிறுகதைகள் சுவாரஸ்யமான முத்துக்குவியல். அரண்மனைக் குமாரியின் குடும்பம்,தங்கப்பாண்டியன் என்ற தங்கம்மாளின் குடும்பம்,பார்த்து மகிழ்ந்தேன்.

மீண்டும் நினைவுகள் என்னை உருட்டியது

எட்டையயபுரம் ஒரு ஜமீன். ஜமீந்தார்களை உள்ளூர்வாசிகள் “மகாராஜா“ என்றுதான் குறிப்பிடுவோம். அழகான அரண்மனை. தர்பார்களும், கொலு மண்டபங்களும்,அந்தப்புரங்களும்,அரண்மனைக்கு முன் பெரிய திடலும்,குதிரைலாயங்களும்....சொல்லிக்கொண்டே போகலாம். இப்பொழுது அவைகள் பழங்காலச் சின்னங்களாய்ச் சிதிலமடைந்து காட்சியளிக்கின்றன.

அரண்மனையில் கொலு வைப்பார்கள்.பெரிய சரஸ்வதி சிலை,முழுவதும் தங்கம். நவராத்திரியில் ஊருக்குக் கொண்டாட்டம். தினமும் கச்சேரி. நடணம். சமஸ்தானத்திற்கென்று வித்துவான்கள். நான் பார்த்து நினைவில் இருப்பவர்கள், ஜி.என். பாலசுப்பிரமணியன் தன் சிஷ்யை வசந்தகுமாரியுடனும் வசுந்திரா தன் பெண் வைஜயந்தியுடன் வந்திருந்தார்கள்.

மகாராஜாவின் பிறந்த நாளுக்கும் இசை மேதைகளும் சினிமா நடிகர்களும் வந்திருக்கின்றார்கள்.தியாகராஜ பாகவதர்,என்.எஸ்.கிருஷ்னன்,டி.ஏ.மதுரம் ஆகியோரும் வந்திருந்தனர்.விளக்குகள் அலங்காரமும் நாதஸ்வரஓசையும் ஊருக்கே அழகைக் கூட்டும். எல்லோரும் அவரவர் வீட்டு விழாவாக எண்ணி மகிழ்வர்.நான் சுற்றிச் சுற்றி மகிழ்ந்த நாட்கள்.

மன்னர் ஆட்சியும் அரண்மனைக் காட்சிகளும்,திருவிழாக்களின் கலகலப்பும், சுவையூட்டும் கலை நிகழ்ச்சிகளும் கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாமன்னன் இராஜராஜன் காலத்தில் இல்லாமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தையும் இந்த அனுபவங்கள் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

ஊரில் இருக்கும் உயர்நிலைப் பள்ளி, ராஜாவால் நடத்தப் பட்டுவருகின்றது. சுதந்திர தாகத்தை நினைவூட்டும் பெயரில் “பாரத மாதா” என்ற பெயர் கொண்ட திரையரங்கு அரண்மனைக்குச் சொந்தமானது.எம்.கே. தியாகராஜ பாகவதர் இந்த அரங்கில் பாட்டு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

ஊருக்கு முக்கியமானவர்கள் வந்தால் அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்து உபசரிக்கும் பழக்கம் இருந்து வந்தது. விருந்தோம்புதலில் பேரரசுகள் மட்டுமல்ல, சின்ன ஜமீன்களும் குறைந்தது அல்ல.

கல்கியைப் பார்த்து விட்டு வீடு திரும்பும் பொழுது கல்கி பற்றி நிறைய செய்திகளைக் கூறினார் என் தந்தை. என் மனத்தில் பதிந்தது ஒன்றுதான்.

கல்கி கதை எழுதுவார்.ஏற்கனவே அவர் காந்திக் கட்சி என்பதை என் தாயார் கூறியிருந்தார்கள்.

பாரதியைப் பற்றிய செய்திகள் கூறினார். பாட்டு எழுதியவர். பாப்பாக்களுக்கும் பாட்டு எழுதியவர். பாரதியின் செய்திகள் என்னை கனவுலகத்திற்கு இழுத்துச் செல்ல ஆரம்பித்தன.

சொன்ன கதை அத்தனையும்
மாலை மயக்கத்தினால் உள்ளத்தே தோன்றியதோர்
கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்.

பாரதியின் குயில் பாட்டு.

அனுபவத்திற்கு முதல் பாட்டு.

அந்த வீட்டில் ஒவ்வொவொரு இடத்திலும் பாரதியை உணர்ந்தேன். அவர் நின்ற இடம்,உட்கார்ந்த இடம்,சாப்பிட்ட இடம்,படுத்த இடம் என்று நானே நினைத்துத் தொட்டுப் பார்த்து மகிழ்வேன்.மாடியறை ஓர் சின்ன இடம். பாரதி இங்கு படுத்திருந்து தனிமையில் கற்பனைத் தேரில் வலம் வந்திருப்பானோ?நானும் கற்பனை உலகில் வாழக் கற்றுக் கொண்ட இடம் அந்த வீடு. இன்றுவரை கற்பனை உலாவை நான் நிறுத்தவில்லை!

வீட்டுப் பின்புறத்தில் ஓர் கிணறு. சில மரங்கள். காலையில் அங்கு சென்று உட்கார்ந்தால் குருவிகள் வந்து கீச் கீச் என்று சத்தம் போட்டுக் கொண்டே விளையாடிக் கொண்டிருக்கும்.இங்குதான் காணி நிலம் வேண்டும் பிறந்திருக்குமோ?

பாரதி அவசரப்பட்டு செத்துவிட்டானே! அவன் இருந்திருந்தால் எனக்கு ஓர் தாலாட்டுப் பாட்டு பாடியிருப்பானே!எத்தனை பேராசை!

நித்தமும் கனவுகண்டால் நெஞ்சத்தே சுகமுண்டாம்.
நினைப்பதுவே இன்பமென்றால் கிடைத்து விட்டால் எந்நிலையாம்.

சில வீடுகள் தள்ளி அமைந்திருந்தது பாரதி பிறந்த வீடு. அங்கே வசித்து வந்த சாம்பசிவ அய்யரைத் தேடி தினமும் சென்று விடுவேன்.

“மாமா, பாரதி கதை சொல்லுங்கோ , அவர் பாட்டு பாடுங்கோ.“

உற்சாகமாய் ஊர்வலம் தொடரும்

Saturday, April 3, 2010

நர்த்தகி நடராஜ்

நடராஜ் பெற்றோர் இட்ட பெயர்.நர்த்தகி அவள் குருநாதர் சூட்டிய பெயர்.

நாட்டிய மணிகளை உருவாக்கிய கிட்டப்பா அவர்களின் வீட்டு வாயிலில் நின்று தன் கோரிக்கையைத் தெரிவித்த பொழுது அவர் சொன்னது: “நீ ஆணுமல்ல, பெண்ணுமல்ல,உனக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்க விருப்பமில்லை.”

லட்சியத்துடன் வந்து நிற்பவளுக்கு நம்பிக்கையும் போர்க்குணமும் இருப்பது இயல்பு.

“நாட்டியத்தை உருவாக்கிய நடராஜரே ஓர் அர்த்தநாரிதானே.“

கிட்டப்பா மலைத்து விட்டார். ஆனாலும் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை.ஓராண்டுகாலம் தொடர்ந்து அவரிடம் சென்றாள்.அவள் முயற்சி வென்றது. அவளை ஏற்றுக் கொண்டார். நர்த்தகி என்ற நாமம் சூட்டினார். தன் வீட்டிலேயே அடைக்கலம் தந்தார்.தனக்குத் தெரிந்த அனைத்தும் கற்றுத்தந்தார்.இன்று அவள் ஒரு நாட்டியத்தாரகை. உலகமெல்லாம் சுற்றி வருகின்றாள்.அவள் நடந்து வந்த பாதை கரடு முரடானது.எனவே அவள் சாதனை இமயத்திலும் உயர்ந்தது.

நர்த்தகியைக் காணும் ஆவலில் அவள் இல்லம் சென்றேன்.அன்புடன் வரவேற்றாள்.அவள் ஓர் திருநங்கை - அப்படித்தான் அழைக்கப்பட வேண்டும் என்பது அவள் விருப்பம். அவள் தன் வாழ்க்கை சரிதையை விரிவாகக் கூற ஆரம்பித்தாள்.

ஆண்குழந்தையாய்ப் பிறந்தவன் தான் நடராஜ். ஆனால் குழந்தைப் பருவத்திலியேயே உணர்வுகளின் மாற்றத்தைப் புரிந்து கொண்டான்.பெண்குழந்தையைப் போல் உடை உடுக்க, சிங்காரிக்க விரும்பினான். பெரியவர்கள் திட்டினார்கள்.ஆணாக நடந்து கொள்ளமுடியவில்லை. உடலிலும் மாற்றங்கள், பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. சில ஆண்கள் குழந்தைப் பருவத்திலேயே பாலியல் உறவுக்குக் கட்டாயப் படுத்தினார்கள்.

(இத்தகைய ஆண்களை மிருகங்கள் என்றுதானே நினைக்க முடியும்.பாம்பு கூட அருகில் சென்றால், தன்னைக் கொல்ல வருகின்றார்கள் என்று நினைத்துக் கொத்த முயலும். ஆனால் சில மனிதர்கள் பாம்பைவிடக் கொடியவர்களாக இருக்கின்றார்கள்.)

பெற்றவளிடம் சொன்னபொழுது அடிதான் கிடைத்தது.அண்டை,அயலார் கேலி பேச ஆரம்பித்து விட்டார்கள்.பெற்றவளும் “ எங்காவது போய்த்தொலை”என்று கூற ஆரம்பித்து விட்டாள்.(ஊனமுற்றவர்களிடம் இரக்கம் காட்டும் உலகம் இவர்களை மட்டும் கேலிப் பொருளாகப் பார்ப்பது வேதனைக்குரியது) நடராஜுக்கு சக்தி என்று ஒரு தோழி. சக்திக்கும் இதே நிலை.இருவரும் வீட்டைவிட்டுப் புறப்பட்டு விட்டர்கள்.

பெற்றவள் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது.

“பெற்றவளே உங்களை எப்படி விரட்டலாம்?தாய்ப் பாசம் செத்துவிட்டதா?”

நர்த்தகி சொன்ன பதில் என்னைச் சிலையாக்கிவிட்டது.

“அம்மா, என்னைப் பெற்றவளுக்கு நான் மட்டும் குழந்தையில்லை. இன்னும் சிலர் உடன் பிறந்தவர்கள் இருக்கின்றார்கள்.அவர்களை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமை. நான் உடன் இருந்தால் அவர்கள் எதிர்காலம் கேள்விக்குகுரியதாகிவிடும். அப்பா, நிம்மதியாக வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்தச் சூழலில் அவர் மனம் கெடக்கூடாது. குடும்ப நன்மைக்கு ஒரு பிள்ளையை ஒதுக்குவது சரிதான்.”

இதைச் சொல்லும் பொழுது நர்த்தகி முகத்தில் சிரிப்பு மாறவில்லை.கர்மயோகிபோல் பேசினாள்.பெற்றவர்கள் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு என்ன பாடு பட்டாலும், சில பிள்ளைகள் பெற்றோரைக் குறை கூறுவது நினைவிற்கு வரும்பொழுது நர்த்தகி ஒர் மாணிக்கமாகத் தெரிந்தாள்.தொடர்ந்து பேசினாள்.

இத்தகையோருக்கென்று சில அமைப்புகள் இருக்கின்றன. அரசு இவர்களுக்கு ஒதுக்கியுள்ள தொழில், பிச்சை எடுப்பதுவும், விபச்சாரமும்..ஒரு பெண் ஓர் ஆணுடன் பாலுறவு கொண்டால் அவளுக்கு மட்டும் தண்டனை. இங்கே அதே தொழிலைச் செய்ய, சட்டபூர்வ அனுமதி கொடுத்திருக்கின்றது. வினோத
மானச் சட்டங்கள். நர்த்தகிக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. சின்னங்சிறு வயது முதல் நாட்டியம் கற்க ஆசை.சக்தி உடன் இருந்து சக்தியாகத் துணை கொடுத்தாள்.பேராசை என்று மற்றவர்கள் கூறலாம். அவளுக்கு அதுதான் இலக்கு. புறப்பட்டுவிட்டாள்.பெரியவர் கிட்டப்பா அவர்கள் வைஜயந்திமாலா போன்றவர்களுக்குக் குரு.அவரிடம்போய் நின்றாள். அவள் ஆசையும் பெரிது. அவள் அணுகியவர் நிலையும் பெரிது!

அவள் வென்றுவிட்டாள்.இன்று உலகம் சுற்றி வருகின்றாள்.

இதற்கும் அவள்பட்டபாடு கொஞ்சமல்ல.சென்னைக்கு வந்தவுடன் தங்குவதற்குச் சரியான வீடு கிடைக்கவில்லை.அரசு அவர்களுக்கு அனுமதித்தத் தொழில் அவர்களைக் கேவலமாக எண்ண வைத்து ,குடும்பங்களுக்கு மத்தியில் அவர்களை குடி வைக்க மறுத்தது. அதிகாரத்தில் இருந்தவர்களில் பலர் அவர்களைக் கசக்க நினைத்தனர். உயர்குடி மக்களின் சபாக்கள் அவளுக்கு மேடைதர மறுத்தனர். போராட்டத்திற்குப் பின் தங்க இடம் கிடைத்தது. அவள் குருநாதரின் புகழால், அவர் மாணவிக்கு ஓர் மேடை கிடைத்தது.வேடிக்கை பார்க்க வந்தவர் பலர். அவள் குருநாதரின்மேல் உள்ள பெருமதிப்பால் அவருடைய மாணவியின் நடனம் பார்க்கச் சிலர்.ருசிகரமான செய்திகளுக்காக வந்த சில பத்திரிகைககரர்கள். நர்த்தகி எல்லோரையும் கவர்ந்துவிட்டாள்.

முகத்தில் நவரசங்கள்,கரங்களின் நளினம்,கால்களின் துள்ளல் அப்பப்பா,நர்த்தகி என்ற பெயருக்குப் பொருத்தமானவளாக உருவாக்கிய பெருமை அவள் குருநாதருக்குச் சேரும்.எல்லா சபாக்களும் கூப்பிட ஆரம்பித்தன. பத்திரிகைகள் அவளைப் புகழ்ந்தன.அவளுக்கு வெளி நாடுகளிலிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்தன. சோதனையும் வேதனையும் துரத்தியது.இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காது. வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது. காரணம், இவர்கள் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. எப்படிகுறிப்பது? சட்டத்தில் இடமில்லை. இப்படி இருக்க பாஸ்போர்ட் எப்படி கிடைக்கும்? மீண்டும் போராட்டம்.நர்த்தகி சோர்ந்து போகவில்லை.இதிலும் வெற்றி பெற்றாள். அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்குச் சென்று வந்தாள்.அரசு இப்பொழுது கலைமாமணி பட்டமும் கொடுத்துக் கவுரப்படுத்திவிட்டது.

நர்த்தகியின் நடனம் பார்க்க விரும்பினேன்.அவள் ஆடிய காட்சியைப் பதிவு செய்து வைத்திருந்தாள். எனக்காகப் போட்டுக் காண்பித்தாள். சின்னஞ்சிறு கிளியே பாட்டுக்கு நடனம்.பாட்டு முடிந்தாலும் குழந்தையை உறங்கவைப்பது போன்ற பகுதியைச் சேர்த்திருந்தாள்.அம்மம்மா, முகத்தில்தான் எவ்வளவு பாவம். அபிநயசரஸ்வதி பாலசரஸ்வதியை நினைவிற்குக் கொண்டு வந்தது. புறப்படும்பொழுது ஸ்வாமிபடங்களுக்கு முன் அழைத்துAdd Imageச்சென்று ரவிக்கை, மஞ்சள் கொடுத்த பாங்கு மறக்க முடியாதது. நர்த்தகியும் எனக்கு ஒரு மகளானாள்

நன்றி: நிலாச்சாரல்

Friday, April 2, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-02

தளவாய் அக்கிரஹாரத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனம் அறையில் சுப்புலட்சுமி,தன் யார், மகள், அவள் தம்பி ஆகியோருடன் வாழ்ந்து வந்தாள்.

அவள் கணவர் மணி திடீரென்று ஒரு நாள் வீட்டிற்கு வந்தார்.பாப்பாவிற்கு அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சி.சுப்புலட்சுமிக்குக் கணவனைப் பார்த்ததில் ஓர் அமைதி. சாப்பிட்ட பின்னர் எல்லோரும் உட்கார்ந்து மணி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

வீட்டுக்கார அம்மாள் அங்கே வந்தார்கள். மணியை அருவருப்புடன் பார்த்தாள்.“நீங்க ஜெயில்லேருந்து தானே வரேள்?“என்று கேட்கவும் ஆமாம் என்று தலையாட்டினார் மணி.

“நீங்க இங்கே தங்க முடியாது. மற்ற ஜாதிக்காராளோட சாப்பிட்டு, சேர்ந்து வாழ்ந்துட்டேள். இது ஆசாரமான பிராமணாள் வீடு. வேற இடம் பார்த்து குடும்பத்தைக் கூட்டிண்டு போய்டுங்கோ."

வந்த மாமி சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

சுப்புலட்சுமி துடித்துப் போனாள். மணிதான் சமாதானம் செய்தார். வேலை ஒன்று தேடிக் கொண்டு சீக்கிரம் கூட்டிப் போவதாய்ச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஐந்தரை வருடங்கள் கழித்து வந்த கணவன் ஒருநாள் கூடச் சேர்ந்து தங்க முடியவில்லை. அவளுக்கு அப்பொழுது 24 வயது சாதிப் பிரிவினையை அவளும் வெறுக்க ஆரம்பித்தாள்.

மூன்று மாதங்கள் மணியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அதன் பின் ஒரு கடிதம் சந்தோஷச் செய்தியைச் சுமந்து வந்தது. மணிக்கு எட்டயபுரத்தில் அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது. சுப்புலட்சுமியைக் குழந்தையுடன் வரச் சொல்லி விட்டார். தாயைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு எட்டயபுரம் சேர்ந்தாள்.

எட்டயபுர வாழ்க்கை தொடங்கியது.

அரண்மனையின் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர் மதிப்பிற்குரிய இராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும். அவர்களைக் கவனித்துக் கொள்ள அமர்த்தப் பட்டவர்களில் மணியும் ஒருவர். தன் ஆசை மகளைக் கூட்டிப் போய் அவர்களைக் காட்ட மணி விரும்பினார்.

அவருடைய இந்த உணர்வுதான் மகள் பல பெரியவர்களைச் சந்திக்கும் காரணமாக அமைந்தது.

“பாப்பா, இவர்களை நமஸ்காரம் பண்ணு.“

அவள் நமஸ்காரம் செய்தபின் கல்கி அவளை அருகில் வரவழைத்து ஏதேதோ கேள்விகள் கேட்டார். எதுவும் இப்பொழுது நினைவிற்கு வரவில்லை.

அவர்களைப் பற்றி அவள் அம்மா கூறியிருந்தது:

“வெள்ளக்காரன் கிட்டேயிருந்து நம் நாட்டைத் திரும்ப வாங்க சண்டை போடுகிற காந்திக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.“

அவளைச் சுற்றி நடக்கும் எல்லாமே புரிந்தும் புரியாமலும் இருந்தது.அப்பொழுது அவளுக்கு வயது எட்டு.

என் ஊர்வலம் ஆரம்பித்து விட்டது. வீட்டில் என் பெயர் பாப்பா. வெளியில் சீதாலட்சுமி. எட்டயபுரத்தில் வைத்துதான் பள்ளிப் பதிவேடுகளில் “குஞ்சம்மா“ என்ற பெயர் சீதாலட்சுமியாயிற்று.

பிறந்தவுடன் தந்தை வைத்த பெயர் சீதாலட்சுமி. பள்ளியில் சேர்க்கும் பொழுது என் தந்தை இல்லாததால் என் தாயார் குஞ்சம்மா என்று பெயர் கொடுத்து விட்டார். இதன் பின்னால் எனக்குத்தான் எத்தனை பெயர்கள்.

எதற்கு இத்தனை புள்ளி விபரங்களும் சம்பவங்களும் என்ற நினைப்பு தோன்றுவது இயல்புதான். ஊர்வலத்தின் மூலவர் ஒரு பெண். அதுவும் கிராமத்துப் பெண்.வரப்போகும் அனுபவங்களை வியப்புடனோ சந்தேகத்துடனோ பார்ப்பதைத் தவிர்க்கத் தான் விதை பற்றியும், அதற்கு அப்பொழுதே இடப்பட்ட உரத்தைப் பற்றியும் கூற வேண்டியது அவசியமாகின்றது. பயிர் வளர்ந்த விளைநிலம்பற்றித் தெரிந்தால் வியப்பு மறைந்துவிடும்.

எட்டயபுரத்தில் நாங்கள் குடிபுகுந்த வீடு இன்று பாரதியார் தெரு என்று அழைக்கப்படும் தெருவில், பாரதி தன் குடும்பத்துடன் சிறிது காலம் வாழ்ந்த வீடு. என் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது.

(தொடரும்)