காதல்! இந்த வார்த்தை எப்பொழுது தோன்றியிருக்கும்? முதலில் “காதல்” என்பதே எப்பொழுது தோன்றியிருக்கும்?
மனிதன் தோன்றியவுடன் காதலும் தோன்றியிருக்கும் என்ற பதில் பல திக்குகளிலிருந்தும் ஒலிக்கின்றதைக் கேட்கின்றேன்.
மனிதன் தோன்றிய காலத்தில் வயிற்றுப்பசியுடன் உடல்பசியும் இருந்தது என்பது உண்மைதான். கிடைப்பதிலே உறவுகொண்டு களித்து வாழ்ந்தானே, அதுதான் காதலா? ஆங்கிலக்கதைகள் படிக்கும் பொழுது சில கதைகளில் உடலுறவு கொள்வதைக் குறிப்பிட ’love‘ என்ற வார்த்தை உபயோகிப்பான். அப்பொழுது அதுதான் காதலா? அய்யோ, இலக்கிய நண்பர்கள், கலாச்சாரமேதைகள் என்னை முறைக்கின்றார்கள். நமது இலக்கியத்தில் இல்லாத காதலா?
உடன்போக்குக்குபற்றி எத்தனை பாடல்கள்!
சில சுவையான செய்திகள் பேசலாம்! இன்று காதலர் தினமாச்சே!
என் பேரு சீதாலட்சுமி.முழுசாச்சொன்னா கிழவி பெயர் மாதிரி இருக்கு. சீதா அல்லது லட்சுமின்னு இருந்தா கொஞ்சம் பரவாயில்லை. அமலா, அனுஷ்கான்னு இருந்தா அழகா இல்லே? பொண்ணுக்குப் பேரு வைக்கும் போது பார்த்து வையுங்கப்பா. பேரைச் சொன்னாலே தித்திக்கணும்.
நான் சிறுவயசுலேயே படுசுட்டி. சின்ன வயசுலேருந்து வார இதழ்,மாத இதழ்ன்னு ஒண்ணும்விடாமப் படிப்பேன். ஒரு முறை பேனா நண்பர்கள் பகுதியில் ஒரு விளம்பரம் பார்த்து கடிதம் எழுதினேன். அந்த ஆள் மிலிட்டரியில் வேலை பார்க்கின்றவர். பதிலும் உடனே வந்தது. கவருக்குள் அவருடைய போட்டோவும் இருந்தது. என் அப்பா பார்த்துட்டு என்னை நல்லா அடிச்சாரு. “இவன் யாரு? கண்டவனுக்கு காதல் கடுதாசியா?” இப்படிச் சொல்லிச்சொல்லி அடிச்சாரு.65 ஆண்டுகளுக்கு முன்னாலே பேனா நண்பன் என்று சொன்னாக் கூட அது தப்பு.
நான் படிச்சது மரியன்னைக் கல்லூரி, தூத்துக்குடி. கன்னியாஸ்த்ரீகள் நடத்தும் காலேஜ். பீச்சுக்குப் போகணும்னாக் கூட வரிசையாப் போகணும். பத்து பேர்களுக்கு ஒரு சிஸ்டர் வருவாங்க. ஜெயில் கைதிகள் போல போவோம். இதிலே எங்கே காதல் சந்திப்பு வரும்?
தமிழில் நான்தான் முதல்நிலை மாணவி. எங்கள் தமிழ் பேராசிரியையின் பெயர் சிஸ்டர் எமெரன்சியா மேரி. அவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நானும் அவர்களைப் போல ஆகணூம்னு வேண்டினாங்க. அப்போதே கேலியா சொல்லுவேன்.
’என் முருகனுக்கும் உங்கள் ஏசு நாதருக்கும் இப்பொழுது கயிறு இழுக்கும் போட்டி; யார் ஜெயிப்பாங்கண்ணு பார்ப்போம்,’ என்பேன். அவர்கள் முகம் வாடிவிடும். அவர்கள் வகுப்பிற்கு எப்பொழுதாவது கொஞ்சம் தாமதமாக வருவார்கள். நான் வகுப்பு எடுக்க ஆரம்பித்துவிடுவேன்.
”மாணவிகளே. நாம் தமிழ்ப்பெண்கள். நம் கலாச்சாரத்தை விடக்கூடாது. நம் சங்க இலக்கியங்களில் உடன்போக்குப் பாடல்கள் நிறைய வருகின்றன. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அந்தக் காலத்திலேயே ஒரு ஆணும் பெண்ணும் வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போயிருந்திருக்கிறார்கள். நாம் நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் ஆளுக்கு ஒரு ஆளைப் பிடிச்சு ஓடிப்போகணும். .நம் கலாச்சாரத்தை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும்.”
அவ்வளவுதான், ஒரே கைதட்டல். எங்கள் சிஸ்டருக்குத் தெரியவும் நான் வாங்கிய திட்டு கொஞ்சமல்ல.
என்னுடைய 40 வயதில் சென்னையில் இராணி மேரி கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ. படித்தேன். அப்பொழுது மாணவிகளிடம் சில மாற்றங்கள் கண்டேன். பாடத்திட்டங்களில் பல பிரிவுகள். மாற்றங்கள் கூட அந்தந்த பிரிவுகளையொட்டி எழுமோ என்ற சந்தேகம் தோன்றியது. தமிழ் வகுப்பு மாணவிகளிடம் உடுப்பதிலிருந்து பல பழக்க வழக்கங்களைப் பார்த்தபொழுது தமிழ்க் கலாச்சாரத்தைக் கட்டிப்பிடித்து வைத்திருப்பது போல் தெரிந்தது. முதுகலை வகுப்பு என்றால் முதுமை வந்துவிடுமா? அவர்களில் ஒருத்திமட்டும் காதல் பிடியில் சிக்கியவளாகத் தெரிந்தாள். அதிகமாக சினிமாக்களைப் பற்றிப் பேசினர். என் முன்னால் சரளமாகப் பேசினர். ஆனால் என்னைவிட ஏழு வயது சிறியவள்,மணமானவள் ஒருத்தி இருந்தாள். அவளைமட்டும் ஒதுக்கி வைத்திருந்தனர். அது என்ன பாகுபாடு என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில், “அவள் எப்பொழுதும் புருஷனைப்பத்தியும் மாமியார், மாமனார்பத்தியும் பேசறா. அவளோடப் பழகும் பொழுது கிழவியோட பழகற மாதிரி இருக்கு. நீங்க, எங்களோட சமமாகக் கலந்து பேசறீங்க. அதனாலே அவ்வளவு வித்தியாசம் தோணல்லே,” என்றார்கள்
’ஊரோடு ஒத்துவாழ்’ என்பதை வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் நினைவில் கொள்ள வேண்டும்
இன்றும் குழந்தைப்பருவம் முதல் கிழவர்கள் வரையில் எல்லோருடனும் என்னால் பழக முடிகின்றது என்றால் நாம் அவர்களுடன் பேசுவது பழகுவதையொட்டி இருக்கின்றது. கல்லூரி கற்றுக் கொடுத்த பாடம்!
அடுத்து இளைஞர்களுடன் சங்கமம் அரட்டையில் ஆரம்பித்த்து. கணிணி கற்க ஆரம்பிக்கும்பொழுது முதலில் அரட்டையில்தான் தொடக்கம். அப்பொழுது பழகிய இளைஞர்களைக் கூட்டி ஓர் இளைஞர்கள் குழுமம் அமைத்தேன். அப்பொழுது நடந்த ஓர் சம்பவம் பார்க்கலாம்.
அரட்டை மூலம் சேதுவிற்கு ஓர் காதலி கிடைத்தாள். தினமும் அரட்டையடித்தார்கள். இருவரும் சென்னையில்தான் இருந்தனர். சேதுவிற்கு அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தான். அவளும் சரி என்றாள். ஒரு கோயிலுக்கு வரச் சொல்லியிருக்கின்றாள். என்ன நிறத்தில் உடை என்பதைக் கூட பேசி முடிவு எடுத்திருக்கின்றார்கள்
கோயிலுக்கு ஆவலுடன் போனான் சேது. வெகுநேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை. ஏமாற்றம் தாங்க முடியவில்லை. அடுத்த நாள் அரட்டையில் சண்டை போட்டான் அவள் வராததற்கு ஏதோ காரணம் சொல்லியிருக்கின்றாள். இன்னொரு நாள் குறித்தார்கள்
அன்று சேதுவிற்கு ஒரே பரபரப்பு. காதலியைக் காணப்போகும் இளமைத் துள்ளல். கழியும் ஒவ்வொரு மணித்துளியும் மன வலியைக் கொடுத்தது. காத்திருக்கும் பொழுது ஒரு நிமிடம் கூட பல மணிகளுக்குச் சமமாகத் தோன்றும். அன்றும் நேரம்தான் கழிந்தது. அவள் வரவில்லை. மறுநாள் அலுவலகம் போகவில்லை. என்னைப் பார்க்க வந்தான். பெண்ணினைத்தையே திட்டினான்
அவனைச் சமாதானப்படுத்தியே ஆகவேண்டும். யதார்த்தமாகப் பேசினேன். பேசப்பேசப் புலம்பலின் வேகம் குறைய ஆரம்பித்த்து. அரட்டைகளால் இருவர்க்கிடையே ஈர்ப்பு ஏற்படலாம்.அது காதலாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நட்பாகவும் இருக்கலாம். காதலுக்கும் நட்புக்கும் இடைவெளி மிகவும் குறைவானதே, காதல் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருப்பதால் கூடக் கொஞ்சம் அக்கறை எடுக்கத் தோன்றும். வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கப் போகின்றவனைப் பார்க்க விரும்புவது இயல்பே. சொன்னபடி வந்திருப்பாள். பார்த்த பொழுது அவள் மனத்தில் இவன் நமக்குப் பொருத்தமானவனா என்று தோன்றியிருக்கலாம். அந்தக் குழப்பத்தில் நேரில் சந்தித்துப் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் இன்னொரு நாளும் சந்திக்க ஒப்புக் கொண்டிருக்கின்றாள். அவள்மேல் அக்கறை கொண்ட தோழியுடன் வந்திருப்பாள்.தன் குழப்பத்திற்கு விடை கிடைத்திருக்கும். இனி சந்திப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவிற்கு வந்து போயிருக்கலாம்.
தோற்றம் அவ்வளவு முக்கியமா என்று கேட்கலாம். ரசனைகள் பலவிதம். ஏற்பதற்குக் காரணி போல் மறுப்பதற்கும் ஏதாவது காரணி தோன்றுவதும் இயல்பே.
அரட்டைக்கு வரவில்லையென்றால் அவள் முடிவு எடுத்துவிட்டாள் என்று நினைத்துக் கொள்ளலாம். நான் இதைச் சொல்லவும் துடித்துப் போனான். வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் உண்டு என்று சொல்லி அதற்காக மனம் உடைந்துபோகக் கூடாதென்றும் அன்புடன் கூறினேன். அவனுக்கு அப்பொழுது வேண்டியது கனிவான வார்த்தைகள்தான். நான் சொன்னது போல் பின்னர் அவள் அரட்டைக்கு வரவில்லை. ஆரம்பத்தில் அதிகமாகப் புலம்பியவன் பின்னர் அதுபற்றி பேசுவதையே நிறுத்திவிட்டான். அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கே ஓர் வெளிநாட்டுப் பெண்ணைக் காதலித்து மணமுடித்துக் கொண்டான். இதுதான் நிஜ வாழ்க்கை.
எழுத்தாளர் ஞாநி அவர்கள் ”பரீட்ஷா”என்ற அமைப்பு ஒன்றை வைத்துக் கொண்டு கடற்கரை நிலாமுற்றத்தில் நாடகங்கள் நட்த்தி வருகின்றார். அத்தனையும் சிந்தனைக்கு விருந்து. “நாங்க“ என்று ஓர் நாடகம். ஒன்பது பேர்கள் தனித்தனியாக வந்து தங்கள் வாழ்க்கையைப் பற்றிக் கூறுவார்கள். ஒன்பது பிரச்சனைகளில் ஒன்று “காதல்”. ஓர் இளைஞன் தனக்கு காதலி கிடைக்கவில்லையென்ற குறையைக் கூறுவது. ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ளவை. வாழ்க்கையின் நிஜங்கள் சில நேரங்களில் வேடிக்கையாகவும் பல சமயங்களில் பயமுறுத்தவும் செய்யும்.
ஒரு உறைக்குள் ஒரு கத்திதான் இருக்க முடியும் என்று கூறி மனிதனுக்குக் காதல் ஒருமுறைதான் வரமுடியும் அல்லது அது உண்மைக்காதல் இல்லையென்று சொல்பவர்கள் உண்டு. அதென்ன உண்மைக் காதல், பொய்க் காதல் என்று கற்பையும் காதலையும் போட்டுக் குழப்புவது? கற்பு என்பது கற்பிக்கப்பட்ட்து. ஆனால் காதல் என்பது இயல்பிலே பூக்கும் மலர். அதன் மணமே தனி. காதலின் சிலிர்ப்பை அனுபவித்த மனம் அதை என்றும் மறக்காது. அந்த நினைவுகள் இதயத்தில் ஓர் ஓரத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிடும். காதல் வாழ்க்கை கிடைக்காமல் போகலாம். ஆனால் காதல் சாகாது.
வெறும் ஈர்ப்பைக் காதல் என்று நினைப்பது பிழை. ஆனால் இந்தப் பிழையும் இயல்பே. இதன் ஆயுளும் குறைவே. ’முதல் காதல்’ என்று ஒரு புத்தகம் உண்டு. அதில் பெரியவர்களின் தங்கள் முதல் காதலைப்பற்றி கூறியிருப்பார்கள்.காதல் இனிமையான அனுபவம். ஒரு மனிதன் இந்த பரவசத்தை ஒரு சில வினாடிகளாயினும் அனுபவித்திட வேண்டும். இதென்ன கடைச்சரக்கா? தானாக மலர வேண்டிய ஓர் அற்புதப் பூ. வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். BBC தயாரிப்பு. உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்திருக்கின்றார்கள். பெயர் LIFE வர்ணனை செய்தவர் அட்டன்பரோ. அருமையான விளக்கங்கள்.அவசியம் இந்தக் காணொளியை எல்லோரும் பார்க்க வேண்டும்.
ஓர் சின்னப் பறவையினத்தின் வாழ்க்கைமுறை. பெண் பறவையின் கவனத்தை ஈர்க்க, அதன் மனத்தைக் கவர ஆண் பறவைகள் எத்தனை முயற்சிகள் செய்கின்றன. வண்ணமலர்கள், விதவிதமான காய்கள், கனிகள், இவைகளைத் தேடிக்கொணர்ந்து அலங்காரக்கூடுகள் அமைக்கின்றன. பெண்பறவை ஒவ்வொன்றாகப் போய்ப் பார்க்கின்றது. அதற்குப் பிடித்தமான அலங்காரக் கூட்டைப் பார்க்கவும். அதை அமைத்த ஆண் பறவையைப் பார்க்கின்றது. ஒருவன் வென்று விட்டான். இந்தப் பறவைகள் எங்கும் போய்ப் படிக்கவில்லை. இலக்கியங்கள் தெரியாது. ஆனாலும் அந்த சுயம்வரக் காட்சிகளைக் காணும் பொழுது நாமும் மெய்சிலிர்க்கின்றோம். ஒவ்வொரு உயிரினமும் காதல்வனத்தில் புகுவது இயற்கயின் விதி.
தேனியின் வாழ்க்கையின் முறை தெரிந்தால் அதிர்ச்சி தோன்றும். தேன் கூட்டீல் ராணி ஈ, சோம்பேறிகளான ஆண்கள் ஈக்கள், வேலைக்கார ஈக்கள் என்று மூவகை இருக்கும். ராணி ஈயால்தான் அதன் இனமே வளரும். பருவகாலத்தில் இராணி ஈ பறக்க ஆரம்பிக்கும்; மிகமிக உயரே பறந்து செல்லும். ஆண் ஈக்கள் அதனைப் பின் தொடர்ந்து பறக்கும். இந்த ஆண் ஈக்கள் சோம்பேறிகளாக வாழ்ந்து விட்டதால் மேலே பறந்து செல்வது கஷ்டம். அப்படியும் ராணி ஈயுடன் கலக்க ஆவலுடன் பறக்கும். அந்தப் போட்டியில் ஒவ்வொரு ஈயாக பறக்க முடியாமல் தோற்றுப்போய் நின்று விடும். ஒரு ஆண் ஈ மட்டும் வரும் வரை ராணி ஈ காத்திருந்து அந்த ஆண் ஈ வரவும் அதனுடன் உறவு கொள்ளும். அங்கேதான் விபரீதம் ஏற்படும். இன்பம் அனுபவித்த ராணி ஈ சந்தோஷமாகக் கூட்டை நோக்கித் திரும்பும். ஆனால் உறவு கொண்ட ஆண் ஈ உயிரற்று கீழே விழும். சில வினாடி இன்பத்திறகு அது கொடுத்த விலை அதன் உயிர். இதுவும் இயற்கையின் சட்டம்
காதலும் காமமும் ஒன்றா? காமத்தில் காதல் இருக்க வேண்டியதில்லை. ஆனால் காதலில் காமம் உண்டு. இதுவும் இயற்கையின் விதியே.
’காதல் இல்லையேல் சாதல்’ என்பது கவிதைக்கு அழகாக இருக்கலாம். இது பழையமொழி. கவர்ச்சியைக் காதல் என்று நினைப்பதும் தவறு. காமத்திற்கு காதல் ஆடைபோட்டு நினைப்பதுவும் சரியல்ல.
காதல் ஓர் இனிமையான பாட்டு. வருடும் தென்றல் காற்று.
காதல் செய்வீர் உலகத்தீரே!
1 comment:
அன்பின் அம்மா,
தூள் கிளப்புகிறீர்கள்..... வாழ்த்துகள்.
Post a Comment