Thursday, February 16, 2012

நினைவலைகள்-06

தந்தை பெரியார்! என்னுடைய 14 வயதில் ஓர் பால்காரரால் அறிமுகப் படுத்தப்பட்டவர்.

பால்காரர் பேச்சியப்பனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவருக்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசை. புத்தகங்கள் எடுத்து வந்து என்னை வாசிக்கச் சொல்வார். அவர்கொண்டு வந்தைவை களில் பெரும்பாலும் அய்யாவின் சிந்தனைகளும், அண்ணாவின் சொற்பொழிவுகளும் தான். அந்தக் காலத்தில் அண்ணாவின் சொற் பொழிவுகள் சின்னச் சின்னப் புத்தகங்களாய் வரும். படித்துக் காட்டுவதுடன் நிற்காது. விபரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

சிந்தனைத்தெளிவிற்குத் தேடலும் சரியாகப் புரிந்து கொள்ளுதலும் இன்றியமையாதவை. படிக்காதவனின் சிந்தனையைத்தட்டி எழுப்பியவர்களால் கூட, சமுதாயத்தின் மூடப்பழக்க வழக்கங்களை முற்றிலுமாய் ஒழிக்க முடியவில்லை? காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆணாதிக்கம் என்று பேசுகின்றோம். ஆனால் உண்மையில் வீட்டில் ஆண்மகன் பல பிரச்சனைகளில் தன்னைச் சமரசம் செய்துகொள்ள ஒதுங்கி நிற்கின்றான். இது கோழைத்தனமில்லை; குடும்பமானம் போகக் கூடாது என்று நினைக்கின்றான். எனவே அங்கே அவன் பலஹீனமாகி விடுகின்றான்.

எங்கோ பிறந்து, வளர்ந்து, பின்னர் புதுவீட்டிற்கு வரும் பெண் புதுப்பழக்கங்களைப் பார்த்துத் திணறுகின்றாள். புருஷனுக்கு இன்பம் கொடுப்பவள், அவன் குழந்தைகளுக்குத் தாய் என்ற உரிமையில் அவள் அந்த வீட்டின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்கின்றாள். மறுபக்கம் இன்னொரு பெண். வயிற்றில் சுமந்து, வலியெடுத்துப் பெற்று, பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பிள்ளைக்குத் தானே முதல் உரிமையாளர் என்று நினைக்கின்றாள். அன்பில் பங்கு போட மனமில்லை. இதுவரை இருந்த குடும்பத்தலைவிக்குரிய அதிகாரமும் மாறுவதைப் பொறுக்க முடியவில்லை.

இது உளரீதியான பிரச்சனை. அத்துடன் அதிகாரப் பகிர்வில் போராட்டங்கள். ஆண்மகன் ஒதுங்கி விடுகின்றான்; அல்லது ஒருவர் பக்கம் சாய்ந்து மற்றவரின் நிலையை மோசமாக்குகின்றான். இதுதான் குடும்ப நிலைமை. அந்தப் பெண் வணங்கும் கடவுள், அவளின் நம்பிக்கைகள், மூடப்பழக்கங்கள் அப்படியே பாதுகாப்பாக அவளிடம் இருக்கின்றன. ஆண்மகன் அங்கே ஒதுங்கிவிட்டான். பகுத்தறிவுகட்சி என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் வீடுகளிலும் கோயில்களுக்குப் போகின்றார்கள்;சோதிடம் பார்க்கின்றார்கள். எந்த மாறுதலும் வீட்டில் பெண் ஏற்க வேண்டும். அதுதான் பெரியவர்கள் கூறும்பொழுது ஓர் பெண் படித்தால் அந்தக் குடும்பமே கற்றவர்களாகி விடுவார்கள் என்று. மாறுதல் வீட்டுக்குள் வரும் வரை நம் சமுதாயம் இப்படித்தான் இருக்கும்.

பகுத்தறிவுஎன்ற சொல்லை நாம் உபயோகிப்பது கூடச் சரியாக இல்லை. அதன் விளக்கங்கள் பின்னால் வரும்.

இது ஓர் சமுதாய வரலாறு. தந்தை பெரியாரும் பாரதியும், இன்னும் பல சிந்தனையாளர்களும் செயல்வீரர்களும் தொடர்ந்து வருவார்கள். எனவே ஒரே இடத்தில் ஒருவரை முழுமையாகக் காட்ட விரும்பவில்லை.

நாம் கிராமத்திற்குள் நுழையலாம். ஓர் உண்மையை முதலிலேயே உங்கள் முன் வைத்து என் எழுத்தைத் தொடர நினைக்கின்றேன். கசப்பான பல உண்மைகள் காணலாம். வரலாறு என்பது உண்மைகளைச் சொல்வது. தனிப்பட்ட தாக்குதல் இல்லை. ஒரு குறையை எடுத்துச்சொல்லும் பொழுது அது ஒட்டு மொத்தமாக மதிப்பீடல் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அப்பொழுது நான் கண்ட, உணர்ந்த சில உண்மைகளின் வெளிப்பாடுதான். காரணங்களைச் சிந்திக்க முயன்றால் குறைகள், நீக்க முயற்சிக்கலாம், அல்லது குறைக்கவாவது முடியும். மனிதன் செம்மையாக நிம்மதியாக வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஆசையும் இதுதான். நம்மிடம் இருக்கும் போலிக் கவுரவத்தை விடுத்து நம்மை நாமே உணர்ந்து கொள்வது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

குடும்பம், சமுதாய அமைப்புகளைப் பார்க்கலாம். பல ஊர்களில் சொந்த அமைப்பில் கிராமப் பஞ்சாயத்துக்கள் இயங்கி வந்தன. அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளை கிராமத்தினர் மீற முடியாது. நீதிமன்றங்களில் கூடத் தப்பிக்க முடியும். ஆனால் இவர்கள் முடிவு சொன்னால் கடுமையாக இருக்கும். செல்வந்தர்களும் உயர்சாதிக்காரர்களும் கிராமசபை உறுப்பினர்கள். ஊரின் பெரிய பணக்காரன் அங்கு செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான். வரலாற்றில் பொருளாதார அடிப்படையில்தான் அதிகாரம் இருந்து வந்திருக்கின்றது. ,அதற்குள் சமுதாயம் அடங்கி இயங்கி வந்ததன் அடையாளத்தை நான் பல கிராமங்களில் அன்று பார்த்தேன்.

திருமணம் முறைப்பெண், முறை மாப்பிள்ளை என்ற உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெண் கொடுக்க மறுத்தால் கடத்திப்போய் தாலி கட்டுவதும் உண்டு. தண்டனையாக சங்கத்திற்குப் பணம் கட்டிவிட்டு அவளுடன் அவன் வாழலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது அதிகம். சாதி விட்டுத் திருமணம் செய்வதை கிராமம் ஏற்கவில்லை. ஊரைவிட்டு சம்பந்தம் செய்வது கூட வரவேற்கப் படவில்லை.

இலக்கியத்தில் உடன்போக்குஅதிகமாக வரும். ஓடிப்போன மகளைத் தேடிச் செல்வது போன்ற பாடல்கள் வருகின்றன. அன்றைய சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் என் காலத்தில் ஓடிப்போகும் பெண்ணுக்கு மரியாதை போய்விடும். காதல்என்று சிறப்பு செய்து ஏற்கவில்லை. இப்பொழுது பொருளாதார அடிப்படையில் அதற்கு மதிப்பு கிடைக்கின்றது. அவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தால், நிறைய பணம் ஈட்டும் நிலையில் இருந்தால் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

மரபு என்பதும் காலத்திற்கேற்ப மாறுதல்கள் அடைகின்றன. ஓர் பழக்கம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப் பட்டு, கொஞ்சம் அதிகமாக அந்தப் பழக்கம் தங்கி விட்டால் அது மரபாகிவிடுகின்றது. சிறிது சிறிதாக நாம் அடையும் மாறுதல்களை நினைவலைகளில் காணலாம்.

சாதிப்பிரிவினைகள் எங்கும் இருந்தன. ஒரு ஊரில் எந்த சாதி அதிகம் இருக்கின்றார்களோ அவர்கள் கை ஓங்கி நிற்கும். செல்வந்தர்களுக்கும், உயர்சாதியினருக்கும் ஊழியம் செய்யும் நிலையில் ஹரிஜனங்கள் இருந்தனர். இன்று தலித் என்கின்றோம். பல கிராமங்களில் டீக்கடையில் அவர்களுக்கென்று தனி காபி டம்ளர்கள் இருந்தன.

அதை ஏற்படுத்தியவர்கள் உயர்சாதிக்காரர்கள். அந்தணன் அங்கே போவதில்லை. அக்ரஹாரத்தில் அவர்கள் செருப்பு போட்டுக்கொண்டு நடப்பதில்லை. .பிராமணர்கள் மற்ற சாதிக்காரர்கள் எல்லோரையும் ஒதுக்கி வாழ்ந்தனர். ஆனாலும் செல்வ நிலையில் அவர்கள் உயர்ந்திருக்கவில்லை.

அதனால் செல்வந்தர்களுடன் ஒத்துப்போயினர். வீடு என்று வரும் பொழுது ஆச்சாரம் என்று கூறி ஒதுக்கினர்.

கேரளாவில் ஒரு பழக்கம் இருந்துவந்தது. உயர்சாதிக்கரர்கள் வரும் பொழுது உழைக்கும் கூட்டம் மேலே போட்டிருக்கும் துண்டுகளை எடுத்துவிட்டு குனிந்து வணங்க வேண்டும். பெண்ணும் மேலே போட்டிருக்கும் துணியை எடுத்தாக வேண்டும். அப்பொழுது ரவிக்கை போடும் பழக்கம் இல்லை. எனவே திறந்த மார்புடன் பெண்கள் குனிந்து வணங்குவதை நிறுத்தக் கடுமையாகப் போராடியடிவர் நாராயண குரு அவர்கள். போராடி வெற்றியும் கண்டார்.

நான் பார்வையிட்ட கிராமங்களை வைத்து சில செய்திகளைக் கூறுகின்றேன்.என் பணிக்காலத்தில் ஆயிரக் கணக்கான கிராமங்களைப் பார்க்க வேண்டி வந்தது. எனவே அந்தந்த இடங்கள் வரும் பொழுது அச்சூழலை வருணிப்பேன்.

.பழிவாங்குதல் என்பது ஓர் இயல்பாய் நினைத்தனர். கோபம் வந்து விட்டால் கத்தியால் வெட்டுவது, குத்துவது என்பது அங்கே சாதாரணம். ஒன்று அவர்களே செய்வார்கள். அல்லது ஏழைகளை உபயோகித்துக் கொள்வார்கள். குற்றம் புரிந்தவன் சிறையில் இருக்கும் காலத்தில் அவர்கள் குடும்பங்களைச் செல்வந்தர்கள் கவனித்துக் கொள்வார்கள்..

இவைகளைப் படிக்கும் பொழுது பயங்கரமானதாகத் தெரியும். ஆனால் இது எப்போழுதும் நடப்பவையல்ல. பழகும் பொழுது பாசத்துடன் பழகுவார்கள். போலித்தனம் கிடையாது. விருந்தோம்பல் அதிகம். நாம் சொல்கின்றபடி செய்வார்களோ இல்லையோ நாம் பேசுவதைப் பொறுமையுடன் கேட்பார்கள். அவர்களுக்கு நம்மைப் பிடித்துவிட்டால் நாம் சொல்வதைக் குழந்தைகள் போல் செய்வார்கள். ஓர் குடும்பத்தின் நம்பிக்கை பெற்றுவிட்டால் அவர்கள் நம்மைக் காப்பாற்ற எதுவும் செய்வார்கள்.

இது போன்ற சமுதாயக் கட்டுப்பாடுகள் உலகில் எங்கும் இருந்து வந்தன.தனி மனிதனாக வாழ முடியாது. சிறு குழுவானாலும் , பெருங்கூட்டமா னாலும் ஓர் ஒழுங்கு வேண்டும். மனிதன் அதற்காகச் சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொண்டான். கூர்ந்து பார்த்தால் சிலவற்றில் ஓர் ஒற்றுமை காணப்படும்.சமூக இயல், மனித இயல் இரண்டினையும் உலக அளவில் இருக்கும் செய்திகளை, எழுத்துக்களைப் படித்து ஆய்வு செய்து வருகின்றேன். வெளி நாடுகளுக்கும் செல்லும் பொழுது பல இயங்களுக்குச் சென்று வருவேன். புலம் பெயர்ந்து மக்கள் செல்லும் பொழுது பழக்க வழக்கங்களில் கலப்பு ஏற்பட்டுவிடும்.

75 ஆண்டுகால வரலாற்றின் பார்வையாளர், பங்குதாரர் என்ற முறையில் அனுபவங்களை, எண்ணங்களைப் பதிவு செய்கின்றேன். சாதி, மதம், மொழி, அரசியல், நாடு இவைகளைப் பற்றி உண்மைகள் பதியப் படும் பொழுது நாம் உணர்ச்சி வயப்பட வேண்டியதில்லை. நாம் மனிதர்கள். குறையும் நிறைவும் கலந்த ஓர் கலவை.

(தொடரும்.)

No comments: